/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
விவசாயம் செய்ய இளைஞர்கள் முன் வரணும்!
/
விவசாயம் செய்ய இளைஞர்கள் முன் வரணும்!
PUBLISHED ON : ஜன 25, 2026 02:16 AM

தஞ்சாவூர் மாவட்டம், மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த, 25 வயதான விவசாயி மணிகண்டன்:
எங்களுக்கு சொந்தமாக, 2 ஏக்கர் நிலம் இருக்கிறது. எங்கம்மாவிடம், 'வருமானம் அதிகமாகும்'னு சொல்லி, மண்ணுக்கு ரசாயன உரம் பயன்படுத்தும்படி பலரும் கூறினர்.
ஆனால், அவர்களுடைய வார்த்தைகளை புறந்தள்ளி, 25 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் தான் செய்கிறோம். அப்பா, அம்மா, அக்கான்னு சேர்ந்து தான் விவசாயம் செய்து வந்தாங்க. இயற்கை சீற்றத்தை எதிர்கொண்ட ஆண்டுகளில், கடனில் தவித்திருக்கிறோம். ஆண்டுக்கே, 50,000 ரூபாய் தான் சம்பாதிக்க முடிந்தது.
எவ்வளவு உழைத்தாலும் எங்கள் பொருளுக்கு நல்ல விலை கிடைப்பது இல்லையேன்னு தீர்வு தேட ஆரம்பித்த போது தான், ஏற்றுமதி - இறக்குமதி சார்ந்த படிப்பான, தளவாட மேலாண்மையில் சேர்ந்தேன்.
படித்து முடிக்கும்போதே கொரோனா ஊரடங்கு வந்தது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்து, குடும்பத்தின் கடனை அடைத்தேன். பின் வேலையை விட்டுட்டு, ஊருக்கே வந்து விவசாயத்தில் இறங்கினேன்.
எங்கள் நிலத்தில் ஆண்டுக்கு ஆறு மாதங்கள் கீரையும், பயிர் சுழற்சி முறையில் காய்கறிகளும் சாகுபடி செய்தோம். இடைத்தரகர்கள் வாயிலாக விற்பனை செய்வதை நிறுத்தி, உழவர் சந்தை வாயிலாக நேரடியாக விற்பனை செய்ய ஆரம்பித்தோம். இது, வருமானத்தை பல மடங்கு அதிகரித்தது. அடுத்ததாக இரண்டு ஆடுகள், இரண்டு மாடுகள் வாங்கினோம்.
விவசாய கழிவுகளை கால்நடைகளுக்கு தீவனமாகவும், கால்நடை கழிவுகளை நிலத்துக்கு உரமாகவும் மாற்றினோம். ஆடுகள் வளர்த்து விற்பனை செய்வதில், நல்ல லாபம் கிடைத்து வருகிறது. இப்போது எங்களிடம், 15 ஆடுகள் இருக்கின்றன.
காய்கறிகள், பால், ஆடுகள் விற்பனை, மாடித்தோட்டம் அமைத்து கொடுக்கும் பணி என, இப்போது மாதம், 50,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. சென்னையில் சம்பளம் மட்டும் வாங்கினேன்.
இப்போது, எங்கள் மண்ணில் சந்தோஷத்தையும் சேர்த்து வாங்குகிறேன். எங்கள் பொருட்களை மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கனவு இருக்கிறது. கூடிய விரைவில் அதுவும் நிறைவேறும்.
உழைப்பு என்றுமே வீண் போகாது. அந்த உழைப்பை மண்ணுக்காக கொடுத்தால், நம்முடன் சேர்த்து இயற்கையும் செழிக்கும். இன்றைய இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்து இயங்க ஆரம்பித்து உள்ளனர்.
வளர்ச்சியை நோக்கி பயணிப்பதில் எந்த தப்பும் இல்லை. ஆனால், விவசாயத்தை மறந்து போவது தான் வருத்தமாக இருக்கிறது. இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வர வேண்டும்.
கணவர் வைத்த புள்ளியை ஓவியமாக்கி இருக்கிறேன்!
ஓவியத்தில் இளங்கலை பட்டம் பெற்று, பயிற்சி வகுப்புகள், ஓவிய கண்காட்சி என ஓய்வில்லாமல் ஓடும், 41 வயதாகும் பிரியா:
தஞ்சாவூர் மாவட்டம், வளையப்பேட்டை கிராமம் தான் என் சொந்த ஊர். பிளஸ் 2 முடித்ததும், என் தாய்மாமா இளையராஜாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டேன்.
அவர், உங்களுக்கெல்லாம் தெரிந்த பிரபல தத்ரூப ஓவியர் எஸ்.இளையராஜா தான். கணவர் தான், ஓவியம் சார்ந்து படிக்கும்படி வழிகாட்டினார்.
சென்னை எழும்பூரில் இயங்கும் அரசு கவின்கலை கல்லுாரியில், இளங்கலை கவின்கலை படிப்பில் சேர்ந்தேன். மூன்றாம் ஆண்டு படிப்பு துவங்கிய நேரத்தில், எனக்கு மகள் பிறந்தாள். குழந்தையையும் பார்த்துக் கொண்டு, படிப்பை தொடர சிரமப்பட்டு, படிப்பை நிறுத்திட்டேன். அடுத்து ஒரு மகனும் பிறந்தான்.
அதன்பின், கணவர் தான் எனக்கு ஓவியம் வரைய கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். வாழ்க்கை நன்கு சென்று கொண்டிருந்தது. 2021ல் எனக்கும், கணவருக்கும் கொரோனா தொற்று வந்தது. மூன்று மாதங்கள் கழித்து தான், கணவரின் மரணச் செய்தியே எனக்கு தெரியவந்தது.
என்ன செய்யப் போகிறோம், யார் உதவி செய்வர், குழந்தைகள் படிப்பு என, ஏகப்பட்ட கேள்விகள் மனதிற்குள் ஓடின. அழுது கரைந்த என்னை ஆறுதல் கூறி, சமாதானம் செய்தது என் குழந்தைகள் தான்.
'குழந்தைகளை நன்கு பார்த்துக்கொள்...' - இதுதான் மருத்துவமனைக்கு செல்லும் போது கணவர், என்னிடம் கூறிய கடைசி வார்த்தை.
அதை காப்பாற்ற வேண்டும் என்று உறுதி எடுத்தேன். ஓவியங்கள் வரைய ஆரம்பித்தேன். வண்ணங்கள் என்னை மீட்டெடுக்க ஆரம்பித்தது.
வருமானத்துக்காக ஓவிய வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். அதில் குடும்பத்தை நடத்த ஆரம்பித்தேன்.
என், 36 வயதில், மீண்டும் ஓவியம் படிக்க கல்லுாரி செல்ல ஆரம்பித்தபோது விமர்சனங்கள் வந்தன. ஆனால், அதை நான் பொருட்டாகவே நினைக்கவில்லை.
எனக்கு ஓவியங்கள் வரைய தெரியும். முறைப்படி படித்து வரைந்தால், இன்னும் நேர்த்தியான ஓவியங்களை வரைய முடியும் என நினைத்து, கல்லுாரியில் சேர்ந்தேன்.
கடந்த மே மாதம் தான் படிப்பு முடிந்தது. 41 வயதில் டிகிரி வாங்கினேன். என் ஓவியம் போல் வாழ்க்கையும் நவீனத்தை தழுவி இருக்கிறது.
கணவர் இருந்திருந்தால், இந்த சாதனையை கொண்டாடி தீர்த்திருப்பார். அவர் வைத்த புள்ளியைத் தான், ஓவியமாக்கி இருக்கிறேன்.

