/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
மின்கம்பத்தில் விளம்பர பதாகை; காற்றுக்கு பறப்பதால் அச்சம்
/
மின்கம்பத்தில் விளம்பர பதாகை; காற்றுக்கு பறப்பதால் அச்சம்
மின்கம்பத்தில் விளம்பர பதாகை; காற்றுக்கு பறப்பதால் அச்சம்
மின்கம்பத்தில் விளம்பர பதாகை; காற்றுக்கு பறப்பதால் அச்சம்
ADDED : ஜூலை 06, 2025 10:53 PM

சேதமடைந்த ரோடு
பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி ரயில்வே பாலத்தின் அருகே, ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில், மழை நீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் இவ்வழியில் பயணிக்க சிரமப்படுகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி ரோட்டை சீரமைக்க வேண்டும்.
-- ஆனந்த், மாக்கினாம்பட்டி.
மின்விளக்கு பழுது
பொள்ளாச்சி, வெங்கடேசா காலனியில் வாட்டர் டேங்க் அருகே, ரோட்டோரம் உள்ள மின்கம்பத்தில், பல நாட்களாக தெருவிளக்கு எரிவதில்லை. இதனால், இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நகராட்சி நிர்வாகம் இதை கவனித்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.
-- சித்ரா, பொள்ளாச்சி.
அறிவிப்பை மதிப்பதில்லை!
பொள்ளாச்சி, மாரியம்மன் கோவில் செல்லும் ரோட்டில், வால்பாறை செல்லும் சந்திப்பு சாலையில் 'நோ என்ட்ரி' அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதை பொருட்படுத்தாமல் விதியை மீறி வாகனங்கள் அவ்வழியில் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து அபாயம் உள்ளது. இதை, போக்குவரத்து போலீசார் கவனிக்க வேண்டும்.
- ராஜ், பொள்ளாச்சி.
விளம்பரத்தை அகற்றுங்க!
பொள்ளாச்சி நகரின் முக்கிய இடங்களில் உள்ள மின்கம்பத்தில் விளம்பர பதாகைகள் மாட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த விளம்பரங்கள் காற்றுக்கு பறந்து ரோட்டில் செல்பவர்கள் மீது விழுகிறது. இதனால், ரோட்டில் பயணிப்பவர்கள் சிரமப்படுகின்றனர். மின்கம்பங்களில் ஏறுவதற்கு மின்வாரிய ஊழியர்களும் சிரமப்படுகின்றனர். அதனால், மின்கம்பத்தில் உள்ள விளம்பரங்களை அகற்ற வேண்டும்.
- டேவிட், பொள்ளாச்சி.
கல்வெட்டு சேதம்
கிணத்துக்கடவு - வடசித்தூர் செல்லும் ரோட்டில், கொண்டம்பட்டி அருகே ரோட்டோரம் இருந்த, ஊர் பெயர் கல்வெட்டு சேதம் அடைந்து விழுந்துள்ளது. இதை ஒன்றிய அதிகாரிகள் கவனித்து புதிய கல்வெட்டு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- ரமேஷ், கிணத்துக்கடவு.
குப்பையில் பெயர்பலகை
உடுமலை நகராட்சி சர்தார் வீதியில் பெயர் பலகை கீழே கிடக்கிறது. இதனால், அது வைக்கப்பட்டதின் நோக்கம் வீணாகிறது. இதுகுறித்து, நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜா, உடுமலை.
பராமரிப்பு இல்லை
உடுமலை, நேருவீதி எக்ஸ்டன்சன் ரோட்டில், ரிசர்வ் சைட்கள் முறையான பராமரிப்பில்லாமல் உள்ளன. இதனால் செடிகள் புதர் காடாக வளர்ந்துள்ளது. விஷப்பூச்சிகள் அவ்விடத்தில் தஞ்சமடைவதுடன் அருகிலுள்ள குடியிருப்புகளிலும் செல்கின்றன. இதனால் அப்பகுதியினருக்கு பாதுகாப்பில்லாமல் உள்ளது.
- மாரிமுத்து, உடுமலை.
சுகாதார சீர்கேடு
உடுமலை, பழைய அக்ரஹார வீதியில் குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. திறந்த வெளியில் வீசப்படுவதால், தெருநாய்கள் அவற்றை இழுத்து வந்து ரோடு முழுவதும் பரப்பி விடுகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய்தொற்று பரவும் அபாயமும் உள்ளது.
- ரஞ்சித், உடுமலை.
சேதமடைந்த ரோடு
உடுமலை - தாராபுரம் ரோடு முறையான பராமரிப்பில்லாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் சரியாக கவனிக்காமல் செல்லும் போது வாகனங்கள் குழிக்குள் இறங்கி விபத்துக்குள்ளாகும் அளவுக்கு தடுமாறுகின்றனர். இரவு நேரங்களில் போதிய வெளிச்சமும் இல்லாததால் பிரிவு ரோடுகளிலிருந்து வரும் வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
- பிரபாகரன், உடுமலை.
நிழற்கூரை இல்லை
உடுமலை, போடிபட்டி முருகன் கோவில் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பிற்கு, நிழற்கூரை வசதி இல்லை. நாள்தோறும் அந்த பஸ் ஸ்டாப்பை பள்ளி குழந்தைகள் உட்பட நுாற்றுக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்துகின்றனர். மழை காலங்களில் பஸ்சுக்கு காத்திருப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
- ரேவதி, போடிபட்டி.
சாய்ந்த நிலையில் மின்கம்பம்
உடுமலை ஒட்டுக்குளம் கரையில் சாய்ந்த நிலையில் மின் கம்பம் காணப்படுகிறது. இதனால், மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விபத்துகள் நிகழும் முன், மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன், உடுமலை.