/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தி.மு.க., விழாவில் அவமதிக்கப்பட்ட பெண் சேர்மன்!
/
தி.மு.க., விழாவில் அவமதிக்கப்பட்ட பெண் சேர்மன்!
PUBLISHED ON : ஜன 15, 2025 12:00 AM

பெஞ்சில் அமர்ந்ததுமே, ''கன்னம் பழுத்துடுத்து ஓய்...'' என பேச்சை ஆரம்பித்தார், குப்பண்ணா.
''யாருக்குங்க...'' என, பதறினார் அந்தோணிசாமி.
''வேளாண் துறை அமைச்சர் ஆபீஸ்ல இருக்கற ஒரு டபேதார்,கடந்த அ.தி.மு.க., ஆட்சியில பணியில் சேர்ந்தார்... இவருக்கு, டைப்பிஸ்ட்டா புரமோஷன் வந்தும், அந்த வேலையை செய்யாம, இன்னும் டபேதார் வேலையை பார்த்துண்டு இருக்கார் ஓய்...
''மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனிடம் டபேதாரா இருந்தவர், ஏதோ ஒரு விஷயமா வேளாண் அமைச்சரின் அறைக்கு போயிருக்கார்... அங்க இருந்த டபேதாரிடம் விபரம் கேட்க, ரெண்டு பேருக்கும் இடையில வாய் தகராறு
வந்துடுத்து ஓய்...
''அப்ப, முன்னாள் டபேதாரின் கன்னத்துல, இந்நாள் டபேதார் ஓங்கி ஒரு அறை விட்டார் பாருங்கோ... பாவம், முன்னாளின் கன்னம் பழுத்துடுத்து... அதிர்ச்சியான அவர், 'நடக்கறது தி.மு.க., ஆட்சி தானான்னு சந்தேகமா இருக்கு'ன்னு புலம்பிண்டே போனார் ஓய்...'' என்றார்,
குப்பண்ணா.
''எம்.எல்.ஏ., - மேயர் மோதல் கதையை கேளுங்க வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க., -
எம்.எல்.ஏ., செல்வராஜுக்கும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த மேயர் தினேஷ்குமாருக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம் தான்... இவங்க மோதலால, தொழில் பண்றவங்க பாதிக்கப்படுதாவ வே...
''உதாரணமா, மாநகராட்சி எல்லையான ஊத்துக்குளி பக்கத்துல ஒரு ஹோட்டல்ல, ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்காவ... தனியார், 'டிவி' நட்சத்திரங்களை வச்சு கலை நிகழ்ச்சி, இரவு விருந்துன்னு ஹோட்டல் சார்புல தடபுடலா ஏற்பாடுகளை பண்ணிஇருந்தாவ வே...
''மேயர் தலைமையில நிகழ்ச்சியை நடத்த இருந்தாவ... இதை கேள்விப்பட்ட எம்.எல்.ஏ., போலீசாருக்கு அழுத்தம் குடுத்து, அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வச்சுட்டாரு வே...
''நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்புல, 'டிக்கெட் சரியா விற்கலை... அதான் ரத்து பண்ணிட்டோம்'னு சொன்னாவ... ஆனா, எம்.எல்.ஏ., - மேயர் கோஷ்டி மோதலால, ஹோட்டல் தரப்புக்கு பலத்த நஷ்டம்னு இப்பதான் தெரியவருது... 'இவங்க பஞ்சாயத்தை தலைமை தலையிட்டு தீர்க்கணும்'னு கட்சியினர் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''இதுதான் சமூக நீதியான்னு கேட்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''என்ன விவகாரமுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட தேவாலா பகுதியில், தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்துச்சு... தொகுதி தி.மு.க., -
எம்.பி., ராஜா உள்ளிட்டஆளுங்கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துக்கிட்டாங்க பா...
''இதுல எல்லாருக்கும் உட்கார நாற்காலிகள் போட்டிருந்தாங்க... ஆனா, நெல்லியாளம் நகராட்சி தலைவர் சிவகாமிக்கு மட்டும் நாற்காலி போடாம நிற்க வச்சுட்டாங்க... தமிழகத்துல ஒரே ஒரு பழங்குடியின நகராட்சி தலைவர் இவங்க தான் பா...
''ஏற்கனவே, சிவகாமியை உள்ளூர் கட்சி நிர்வாகிகள் ஓரங்கட்டிட்டு வர்ற நிலையில, சமத்துவம், சுயமரியாதை பத்தி அடிக்கடி பேசும் எம்.பி., ராஜா கலந்துக்கிட்ட விழாவுலயே, சிவகாமியை உட்கார விடாததால, 'இதுதான் தி.மு.க.,வின் சமூக நீதியா'ன்னு பழங்குடியின மக்கள் கடும் அதிருப்தியில இருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.