PUBLISHED ON : ஆக 16, 2024 12:00 AM

கேப்டன் இல்லாத கப்பலாக தள்ளாடும் பல்கலை!
மெதுவடையை கடித்த படியே, ''நடிகர் தனுஷ் பிரச்னையை சுமுகமா முடிச்சுட்டாங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார்
அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''நடிகர் தனுஷ் மீது பல புகார்களை அடுக்கிய தயாரிப்பாளர்கள், அவரது படங்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம்னு அறிவிச்சாங்களே... இது சம்பந்தமா, நடிகர் சங்க செயற்குழு கூட்டத்துல பிரச்னை கிளப்பி, தயாரிப்பாளர் சங்கத்திடம் விளக்கம் கேட்க முடிவு செஞ்சாங்க பா...
''இது, தயாரிப்பாளர் சங்கத்திற்கு தெரியவந்ததும், செயற்குழுவுக்கு முந்தைய நாள் இரவு, அவங்க சங்கத்துல இருந்து நடிகர் சங்கத்துக்கு அனுப்பிய கடிதத்துல, 'நடிகர் தனுஷ் மீது எந்த புகாரும் தெரிவிக்கல'ன்னு ஜகா வாங்கிட்டாங்களாம்...
''அப்புறமா நடந்த செயற்குழுவுல, 'நடிகர்கள் மீதான புகார் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்கிறதுக்கு முன்னாடி, அது பத்தி நடிகர் சங்கத்திடம் தெரிவிக்கணும்... பிரச்னையை இரு தரப்பிலும் பேசி முடிக்க நடிகர் சங்கம் தயாரா இருக்கிறப்ப, தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையா எந்த முடிவும் எடுக்க கூடாது'ன்னும் தீர்மானிச்சி ருக்காங்க பா...''
என்றார், அன்வர்பாய்.
''மற்றொரு வயநாடா மாறிடுமோன்னு பயப்படறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில இருக்கற வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் நிறைய பேர் வரா... இவா தங்கறதுக்காக, விதிகளை மீறி பல அடுக்குமாடி கட்டடங் களை கட்டிண்டே போறா ஓய்...
''இது போக, நீர்நிலைகளை ஆக்கிரமித்தும் பல தங்கும் விடுதிகளை கட்டியிருக்கா... இங்க, ரெண்டு மாடிக்கு மேல கட்டடங்கள்
கட்டப்டாதுன்னு விதிகள் சொல்றது ஓய்...
''ஆனா, அதை லவலேசமும் யாரும் மதிக்கறது இல்ல... இதை எல்லாம், தமிழக அரசின் எந்த துறை அதிகாரிகளும் கண்டுக்கறது இல்ல... இதனால, 'வால்பாறையும் வயநாடா மாறிடுமோ'ன்னு இங்க குடியிருக்கறவா எல்லாம் பீதியில இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கேப்டன் இல்லாத கப்பலா பல்கலை தடுமாறிட்டு இருக்கு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''மதுரை காமராஜ் பல்கலையில், துணைவேந்தர் பதவி காலியா இருக்கு... அடுத்த நிலையில இருக்கிற பதிவாளர், தேர்வாணையர், டீன், இயக்குனர்னு பல முக்கிய பதவிகளும் அஞ்சு வருஷத்துக்கு மேலா காலியாவே கிடக்கு வே...
''இந்த பதவிகளை துறை தலைவர்களே, 'பொறுப்பு' அடிப்படை யில கவனிச்சிட்டு இருக்காவ... இவங்களுக்கு அரசியல்வாதிகள், உயர் கல்வி துறை அதிகாரிகள் ஆதரவு இருக்கிறதால, இந்த பதவிகளை நிரப்பாம முட்டுக்கட்டை போட்டு, இவங்களே அனுபவிக்காவ வே...
''பல்கலையை நிர்வகிக்க, கல்லுாரி கல்வி இயக்குனர் தலைமையிலான கன்வீனர் குழுவை தமிழக அரசு அமைச்சிருக்கு... கன்வீனர் சென்னையில இருக்கிறதால, அடிக்கடி பல்கலைக்கு வர முடியாது வே...
''பல்கலையை கட்டுப் படுத்த பொறுப்பான அதிகாரிகள் இல்லாம, பேராசிரியர்கள், ஊழியர்கள் எல்லாம் நினைச்சா வர்றாவ, போறாவ... இவங்க வருகை பதிவேட்டை ஆய்வு செய்ய கூட யாரும் இல்ல வே...
''பல்கலை வளாகத்துக்குள்ள அடையாளம் தெரியாத கார்கள் அடிக்கடி வந்துட்டு போகுது... விடைத்தாள்களும் அடிக்கடி திருடு போகுது...
மொத்தத்துல கேப்டன் இல்லாத கப்பலா தள்ளாடிட்டு இருக்கு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் மவுனித்தது.