PUBLISHED ON : ஜன 15, 2025 12:00 AM

தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: ஒரு நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்றால், வேலைவாய்ப்புகள், மருத்துவக் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள், சட்டக் கல்லுாரிகள் உருவாக்கப்பட்டு, இளைஞர்கள் அறிவுத் திறன் உயர்த்தப்பட வேண்டும். அரசுப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டும். விலைவாசி கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஆனால், இவையெல்லாம் கடந்த 42 மாத கால தி.மு.க., ஆட்சியில் நடைபெறவில்லை; மாறாக, போதைப் பொருட்களின் புகலிடமாக தமிழகம் இருக்கிறது.
அப்ப, 10 வருஷம் தொடர்ந்து அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தப்ப, இவர் சொல்ற இந்த விஷயங்கள் எல்லாம் சரியா நடந்துச்சா என்ன?
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் நாகராஜ் அறிக்கை: டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக போராடிய பொதுமக்களிடம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தி.மு.க.,வின் இரட்டை நிலைப்பாட்டை விளக்கி உள்ளார். இந்த போராட்டம் தி.மு.க.,வால், மத்திய அரசுக்கு எதிராக துாண்டப்பட்டது. நெஞ்சுரத்துடன் அங்கே உண்மையை விளக்கி வந்திருக்கிறார்
அண்ணாமலை.இதே மாதிரி, தமிழகத்துக்கு நிதி தர மறுப்பது உட்பட எல்லா பிரச்னைக்கும் நெஞ்சுரத்துடன் விளக்கம் தருவாரா
அண்ணாமலை?
திருச்சி தொகுதி ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ பேட்டி: பொங்கல் விழாவை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினாலும், உண்மையிலேயே விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இல்லை. பா.ஜ., ஆட்சிக்கு வந்ததில் இருந்து விவசாயிகள் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். விவசாய இடுபொருட்கள் மற்றும் வேளாண் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., விதித்து இருப்பதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
மத்திய அரசால் மட்டும் தான் விவசாயிகள் கஷ்டப்படுறாங்களா... தமிழக அரசை நினைத்து குதுாகலமா இருக்காங்களா?
எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்க தலைவர் லியாகத் அலிகான் அறிக்கை: ஈ.வெ.ரா., குறித்து அவதுாறு கருத்துகளை ஆதாரமின்றி வெளியிட்டு, விளம்பரம் தேடிக் கொள்ளும் சீமான் போன்றவர்களை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத்
தேர்தலுக்கு பின், சீமான் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார்.எதிர்க்கட்சிகள் எல்லாம் விலகிய நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் சீமான் கணிசமான ஓட்டுகளுடன் இரண்டாமிடம் பிடித்து அசத்தப்போறார் பாருங்க!