PUBLISHED ON : செப் 07, 2024 12:00 AM

பட்டியல் போட்டு வசூலிக்கும் பெண் அதிகாரி!
''ராகுல் நடத்திய ஆலோசனை கூட்டத்துக்கு போக முடியாம தவிச்சிட்டாரு பா...'' என்றபடியே வந்தார், அன்வர்பாய்.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழகத்தை சேர்ந்த காங்., மாஜி எம்.பி., விஸ்வநாதன், அகில இந்திய காங்., செயலரா இருக்காரு... சமீபத்துல,
இவரை தெலுங்கானா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரா நியமிச்சாங்க பா...
''இவரது மகள் லண்டன்ல உயர்கல்வி படிக்கிறாங்க... இவரை பார்க்க, விஸ்வநாதனும்,அவரது மனைவியும் அங்க போயிட்டு,
இந்தியா திரும்ப பிளைட் ஏறியிருக்காங்க... மறுநாள்
டில்லியில, ராகுல் தலைமையில நடந்த காங்., செயலர்கள் ஆலோசனை கூட்டத்துல விஸ்வநாதன்
கலந்துக்கணும் பா...
''ஆனா, ரன்வேயில கிளம்பிய பிளைட் திடீர்னு இன்ஜின் கோளாறால நின்னு, கடைசியில ரத்தே
ஆயிடுச்சு... அதனால, மறுநாள் தான்
அவரால இந்தியா கிளம்ப முடிஞ்சுதாம்... இங்க வந்ததும்,
ராகுலை தொடர்பு கொண்டு நிலைமையை சொன்னதும், 'நோ பிராப்ளம்'னு சொல்லிட்டாராம் பா...''
என்றார், அன்வர்பாய்.
''அமைச்சருக்கும், எம்.எல்.ஏ.,வுக்கும் ஏழாம் பொருத்தமா இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கும், ஜெயங்கொண்டம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கண்ணனுக்கும் ரொம்ப நாளா பனிப்போர் நடக்கறது... சமீபத்துல, எம்.எல்.ஏ., தந்தையின் நினைவு நாள் வந்துது ஓய்...
''இதுக்கு, 'நிச்சயம் வரேன், வரேன்'னு சொல்லிண்டு இருந்த அமைச்சர், கடைசி நேரத்துல வராம புறக்கணிச்சுட்டார்... இதனால, கண்ணன் ரொம்பவே நொந்து போயிட்டார் ஓய்...
''இதுக்கு பதிலடியா, அமைச்சர் கலந்துக்கறநிகழ்ச்சிகளை
எம்.எல்.ஏ.,வும் புறக்கணிக்க துவங்கிட்டார்... இந்த மாவட்டத்தை சேர்ந்த, மாஜி மத்திய அமைச்சர் ராஜாவோட ஆதரவாளரான
கண்ணன் இருக்கறதும், இந்த பனிப்போருக்கு ஒரு காரணம் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பட்டியல் போட்டு வசூல் பண்ணுதாங்க வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருவள்ளூர் மாவட்டத்துல, 14 ஒன்றியங்கள் இருக்கு... ஒன்றியங்கள்ல சத்துணவு திட்டத்தில் வேலை செய்யும் சமையல் உதவியாளர்கள், சமையலர்கள், 10
வருஷம் வேலை பார்த்திருந்தா, பதவி உயர்வு தருவாவ வே...
''அந்த வகையில், மாவட்டத்துல, 52 பேரின் பட்டியலை அந்தந்த ஒன்றிய அலுவலகத்துல தயார் பண்ணி, நாலு மாசத்துக்கு முன்னாடி கலெக்டர் ஆபீசுக்கு அனுப்பி வச்சாவ... அங்க இருந்த ஒரு பெண் அதிகாரி, கலெக்டருக்கு பரிந்துரை செய்யாம, பல மாசமா பைலை
கிடப்புல போட்டுட்டாங்க வே...
''இது சம்பந்தமா விசாரிச்சப்ப, உதவியாளர்ல இருந்து சமையலர் பதவி உயர்வுக்கு தலா, 15,000; சமையலரா இருந்து அமைப்
பாளர் பதவி உயர்வுக்கு தலா, 50,000 ரூபாய்னு கறாரா வசூல் பண்ணியிருக்காங்க...
''இதுதவிர, மூணு மாசத்துக்கு ஒரு முறை சத்துணவுக்கு வழங்கப்படும் நிதியை பிரிச்சு குடுக்க, ஒன்றியத்துக்கு தலா, 10,000 ரூபாய் தரணும்னு துணை
வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு நெருக்கடி தர்றாங்க வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் இருந்து, இந்த பாடலை விரும்பி கேட்ட நேயர்கள்...' என்ற டீ கடை ரேடியோ அறிவிப்பை கேட்ட
படியே பெரியவர்கள் கிளம்பினர்.