PUBLISHED ON : ஜூலை 01, 2024 12:00 AM
என். வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் பாண்டி, கேரளா கடலில் மீன் பிடிக்க சென்றபோது தவறி கடலில் விழுந்து இறந்து போனார். இவரது மனைவி எத்தனை தடவை அரசிடம் முறையீடு செய்தும் இவருக்கு நிதி உதவி செய்ய மறுக்கிறது.
இதற்கு அதிகாரிகள் சொல்லும் காரணம் என்ன தெரியுமோ? 'கேரளாவில் உள்ள கடலில் ராமேஸ்வரம் மீனவர் இறந்து போனதால் அவருக்கு நஷ்ட ஈடு தர சட்டத்தில் இடமில்லை' என்பது தான்.
காஷ்மீர் போன்ற வட மாநிலங்களில் நடக்கும் போரின் போது இறக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு, லட்சக்கணக்கில் பணத்தை வாரி கொடுப்பவர்கள், அப்பாவியான ஏழை மீனவப் பெண்ணுக்கு நிதி உதவி செய்ய சட்டத்தில் இடமில்லை என்று சொல்வது எந்த ஊர் நியாயமோ?
எல்லை மீறுவதால், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப் பட்டு, இலங்கையிலுள்ள சிறைகளில் அடைப்பதைக் கண்டித்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதங்கள் எழுதும் முதல்வர், இறந்து போன ராமேஸ்வரம் ஏழை மீனவரின் மனைவியையும், அவரது நான்கு குழந்தைகளையும் காப்பாற்ற, எந்த நிதி உதவியும் செய்யாமல் இருப்பது என்ன சமூக நீதியோ?
அரசுக்கு கெட்ட பெயர் உண்டாக்கும் கள்ளச்சாராய சாவுகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை, உழைத்து வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க எந்த நிதி உதவியும் செய்யாமல் தட்டிக் கழிப்பது வேதனை தருகிறது.