/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தும் பெண் அதிகாரி!
/
அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தும் பெண் அதிகாரி!
PUBLISHED ON : பிப் 09, 2025 12:00 AM

ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''தொகையை குறைச்சுட்டாங்க பா...'' என, பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''என்ன, ஏதுன்னு விளக்கமா சொல்லும் வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''ஈரோடு கிழக்கு தொகுதியில், 2023ல் இடைத்தேர்தல் நடந்தப்ப, சில ஜாதி அமைப்புகள், குடியிருப்போர் சங்கங்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பலரும், மாவட்ட அமைச்சரான முத்துசாமியை பார்த்து, ஆதரவு தெரிவிச்சுட்டு, குறிப்பிட்ட தொகையை வாங்கிட்டு போனாங்க பா...
''அந்தந்த அமைப்புகளின் பலத்துக்கு ஏற்ப, 15,000 ரூபாய்ல துவங்கி, 1 லட்சம் ரூபாய் வரைக்கும் கைமாறுச்சு... ஆனா, இந்த முறை அங்க போட்டியே இல்லாம போயிட்டதால, இந்த அமைப்புகளை ஆளுங்கட்சி பெருசா கண்டுக்கல பா...
''அப்படியும், ஆதரவு தர்றோம்னு, 120க்கும் மேற்பட்ட சங்கங்கள், அமைப்புகளின் நிர்வாகி கள், முத்துசாமியை போய் பார்த்திருக்காங்க... அவங்களுக்கு, 5,000 முதல் 10,000 ரூபாய் வரைக்கும் தான் குடுத்திருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''கார்த்தால, 'ரிஜெக்ட்' பண்ணிட்டு, சாயந்தரமா, 'ஓகே' பண்ணிடறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்டம், பல்லடம் பத்திரப்பதிவு ஆபீஸ்ல ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான், பக்கத்து மாவட்டத்துல இருந்து இங்க வந்தாங்க ஓய்...
''இப்ப பணமழை பொழியறதால, வேற இடத்துக்கு மாறுதல் வந்துடப்டாதுன்னு, உயர் அதிகாரிகளுக்கு, 1 'சி' வரை குடுத்து, இந்த இடத்தை தக்க வச்சுக்கிட்டாங்க... பல காரணங்களை கூறி, சில ஆவணங்களை பதிவு பண்ண மறுத்துடறாங்க ஓய்...
''அப்பறமா, 'கட்டிங்' வாங்கிண்டு, அதே ஆவணங்களை சாயந்தரமா பதிவு பண்ணி குடுத்துடறாங்க... சாயந்தரம் அதிகாரியின் கணவர் ஆபீசுக்கு வந்து, அன்னைக்கு கலெக் ஷனை வாங்கிண்டு போறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்திட்டு இருக்காங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''எந்த துறை அதிகாரி ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனம், தமிழகம் முழுக்க பல கோடி ரூபாய்க்கு கட்டுமான பணிகளை 'டெண்டர்' விட்டு செய்துட்டு இருக்குதுங்க... சில மாதங்களுக்கு முன்னாடி, டைடல் பார்க் நிறுவனத்தின் உயர் பதவிக்கு வந்த பெண் அதிகாரி, டெண்டர் விடுறதுல ஏகப்பட்ட தில்லுமுல்லு களை பண்றாங்க...
''அதாவது, பல டெண்டர்களை மார்க்கெட் விலையை விட அதிக தொகைக்கு குடுத்திருக்காங்க... கம்மியான தொகை குறிப்பிட்டவங்களை தகுதியிழப்பு பண்ணிடுறாங்க...
''சமீபத்துல, முதல்வர் திறந்து வச்ச, சென்னை பட்டாபிராம் டைடல் பார்க் கான்ட்ராக்டர்களிடமும் பெரிய தொகையை வசூல் பண்ணிட்டாங்க... அதுவும் இல்லாம, 'இதை எனக்காக மட்டும் வாங்கல... கோட்டையில் இருக்கும் பெரிய பெரிய அதிகாரிகளுக்கும் இதுல பங்கு போகுது'ன்னும் சொல்றாங்களாம்...
''இவங்களால, அரசுக்கு பெரும் நிதியிழப்பு ஏற்படுதுன்னு டைடல் பார்க் ஊழியர்கள் பலரும், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியிருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பெரியவர்கள் எழ, பெஞ்சில் புதியவர்கள் அமர்ந்தனர்.

