/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஆட்டத்தை கலைக்க துடிக்கும் சீனியர்!
/
ஆட்டத்தை கலைக்க துடிக்கும் சீனியர்!
PUBLISHED ON : ஆக 02, 2024 12:00 AM

''முன்னாள் முதல்வருக்கு அழைப்பு விடுத்திருக்காரு பா...'' என, ஏலக்காய் டீயை பருகியபடியே விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''அ.தி.மு.க., விவகார மாங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''இல்ல... விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தன் கட்சியை தேசிய அளவில் வளர்க்க நினைக்கிறாரு...
கடந்த லோக்சபா தேர்தல்ல கேரளாவுல கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கர்நாடகாவுல காங்., கட்சிக்கும் ஆதரவு
தெரிவிச்சாரு பா...
''ஆந்திரா சட்டசபை தேர்தல்ல, வி.சி., சார்புல வேட்பாளர்களையும் நிறுத்தினாரு... அவங்க டிபாசிட் காலியானது தனி கதைப்பா...
''ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பின், தமிழக பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளை, தன் கட்சியில சேர்க்க துவங்கி யிருக்காரு... சமீபத்துல, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை திருமாவளவன்
பார்த்து, 'இண்டியா கூட்டணிக்கு வாங்க'ன்னு அழைப்பு விடுத்துட்டு வந்திருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஆணைய தலைவர் பதவிக்கு பலத்த போட்டி துவங்கிடுத்து ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த ஆணையத்தை சொல்லுதீரு...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம், மின்வாரிய செயல்பாட்டை கண்காணிப்பது, வாரியம் மற்றும் மின் நிறுவனங்கள் இடையிலான வழக்கை விசாரிக்கற பணிகளை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான் செய்யும்...
''நீதிமன்ற அதிகாரம் உடைய இந்த ஆணையத்துல ஒரு தலைவர் மற்றும் ரெண்டு உறுப்பினர்கள் இருப்பா ஓய்...
''இப்ப, இதன் தலைவரா சந்திரசேகர் இருக்கார்... மின்வாரியத்தில் ஓய்வு பெற்ற இயக்குனரான இவர், முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு உறவின ரும் கூட... இன்னும் ரெண்டு வாரத்துல இவரது பதவிக்காலம் முடியறது ஓய்...
''இதனால, புதிய தலைவரை நியமிக்க அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பங்கள் வாங்கறா... இந்த பதவியை பிடிக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.,கள் மற்றும் வாரிய பொறியாளர்கள் மத்தியில கடும் போட்டி நடக்கறது...
''இதுல, ஐ.ஏ.எஸ்., வட்டாரங்கள் முதல்வரின் குடும்ப உறுப்பினர்களையும், பொறியாளர்கள் தரப்பு, தங்களது மாவட்ட அமைச்சர்களின் தயவை யும் நாடி ஓடிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஆட்டத்தை கலைக்க பார்க்காரு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''அமைச்சர் உதயநிதிக்கு சீக்கிரமே துணை முதல்வர் பதவி தர முடிவு பண்ணியிருக்காங் கல்லா... அதே சூட்டுல, அமைச்சரவையிலும் மாற்றம் பண்ணிடலாம்னு முதல்வர் தரப்புல நினைச்சிருக்காவ வே...
''இந்த அமைச்சரவை மாற்றத்துல, 'மோஸ்ட் சீனியர்' அமைச்சரிடம் இருக்கும் மண் வளம் கொழிக்கும் துறையை, வேற ஒருத்தருக்கு மாற்றி தரும் திட்டமும் இருக்காம்... இது, சீனியருக்கு தெரிஞ்சதும் அதிர்ச்சியாகி, ஆட்டத்தை கலைக்க களம்
இறங்கிட்டாரு வே...
''அதாவது, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தந்தா தானே, அமைச்சரவையில மாற்றம் பண்ணு வாவ... அதுவே நடக்காம பண்ணிட்டா, தன் துறை தப்பிடும்னு யோசிக்காரு வே...
''இதுக்காக, மாப்பிள்ளையை கெட்டியா பிடிச்சுக்கிட்டாராம்... 'இப்பவே உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தந்தா பெரிய எபெக்ட் இருக்காது... 2026 தேர்தல்ல ஜெயிச்சு, அவரை அந்த சீட்ல உக்கார வெச்சா கச்சிதமா இருக்கும்'னு எடுத்து கொடுத்திருக்காரு...
''ஆனாலும், அவரது இந்த முயற்சிக்கு பலன் கிடைக்குமா, உதயநிதி துணை முதல்வர் ஆவாரான்னு அறிவாலய வட்டாரங்கள்ல
பட்டிமன்றமே நடக்கு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.