/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பியூன் வேலையை விரும்பி பார்க்கும் அதிகாரி!
/
பியூன் வேலையை விரும்பி பார்க்கும் அதிகாரி!
PUBLISHED ON : ஏப் 13, 2024 12:00 AM

''பா.ம.க.,வை பத்தி எதுவுமே பேச மாட்டேங்கறார் ஓய்...'' என்றபடியே, பில்டர் காபியை உறிஞ்சினார் குப்பண்ணா.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''சேலம் தி.மு.க., வேட்பாளரா, செல்வகணபதி போட்டியிடறாரோல்லியோ... இவர் ஏற்கனவே, அ.தி.மு.க.,வுல இருந்தவர் தான் ஓய்...
''அ.தி.மு.க., மற்றும் பா.ம.க.,வும் இங்க போட்டியிடறது... இந்த மூணு வேட்பாளர்களுமே இந்த தொகுதியில, மெஜாரிட்டியா இருக்கற வன்னியர் சமூகம் தான் ஓய்...
''பிரசாரத்துக்கு போற செல்வகணபதி, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை மட்டுமே விமர்சனம் பண்ணி பேசறார்... தப்பி தவறியும், பா.ம.க.,வை கண்டிச்சு ஒரு வார்த்தையும் பேசறது இல்ல ஓய்...
''சீனியர் அரசியல்வாதியான தன்னை, மாற்று கட்சிகள்ல இருக்கற வன்னியர் சமூகத்தினரும் ஆதரிப்பான்னு நம்பறார்... அதனால தான், பா.ம.க., பத்தி பேச மாட்டேங்கறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பொருளாதார ரீதியில நஷ்டம் ஆனாலும், பொது நலனுக்காக பொறுத்துக்கிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''யாருவே அது...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சென்னை அண்ணா பல்கலையின் முன்னாள் மாணவர் பரத் கிஷோர், அவரது நண்பர் ராஜ் ஈஸ்வர் சேர்ந்து, 'இது தேர்தல் நேரம்' என்ற தலைப்புல மூணு குறும்படங்களை எடுத்து, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வச்சாங்க பா...
''அந்த படங்கள்ல, வாக்காளர்கள், தங்களது ஓட்டுகளை நல்ல முறையில பயன்படுத்தி, நல்ல அரசாங்கத்தை அமைக்கணும் என்ற விழிப்புணர்வு கருத்தை மையப்படுத்தி இருக்காங்க... அதுல, காமெடி நடிகர் படவா கோபி, ராகுல் தாத்தா போன்றவங்க நடிச்சிருக்காங்க பா...
''இந்த குறும்படங்களை தேர்தல் கமிஷனும் அங்கீகரித்து, தமிழகத்துல, 500 தியேட்டர்கள்ல வெளியிட வச்சிருக்குது... தேர்தல் கமிஷன் தந்ததுக்கும், படங்கள் எடுத்த செலவுக்கும் கணக்கு போட்டு பார்த்தா, நஷ்டம் தான்னாலும், பொதுநலனுக்காக அதை இருவரும் ஏத்துக்கிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''பியூன் வேலை பார்க்கிற அதிகாரி கதையை கேளுங்க வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''-பெரம்பலுார் கலெக்டர் ஆபீஸ்ல இருந்த ஒரு அதிகாரி, 'டெபுடேஷன்'ல சென்னையில இருக்கிற ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் ஆபீஸ்ல வேலை பார்த்துட்டு இருந்தாரு... சமீபத்துல, பெரம்பலுார் திரும்பி, ஆலத்துார் யூனியன் ஆபீஸ்ல பணியில சேர்ந்தாரு வே...
''ஆனா, அங்கன வேலை பார்க்காம, கலெக்டர் ஆபீசே கதின்னு கிடக்காரு... உயர் அதிகாரியிடம் பேசி, தன்னை தேர்தல் பொது பார்வையாளரின் உதவியாளரா போட சொல்லி, அவர் கூடவே பியூன் மாதிரி போயிட்டு, வந்துட்டு இருக்காரு வே...
''ஏற்கனவே கலெக்டர் பி.சி.,யா இருந்தவருங்கிறதால, இதுதான் தனக்கு செட் ஆகும்னு சொல்லுதாரு... இதனால, ஆலத்துார் யூனியன்ல வளர்ச்சி பணிகள் எல்லாம் முடங்கி கிடக்கு வே...
''பிரதமர் வீடு கட்டும் திட்டத்துல இவர் கையெழுத்து போடாததால, பயனாளிகளுக்கு பணம் போகாம இருக்கு... இதனால, மக்கள் ஆளுங்கட்சி மேல தான் கோவமா இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''சேகர் இப்படி உட்காருங்க... நாங்க கிளம்புறோம்...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

