/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அரளிப்பாறை மஞ்சுவிரட்டு: 50 பேர் காயம்
/
அரளிப்பாறை மஞ்சுவிரட்டு: 50 பேர் காயம்
PUBLISHED ON : மார் 13, 2025 12:00 AM

சிங்கம்புணரி,:சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 50 பேர் காயமடைந்தனர்.
மாசி மகத்தை முன்னிட்டு ஐந்து நிலை நாட்டார்கள் சார்பில் அரளிப்பாறையில் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. காலை 10:00 மணி முதல் வயல்களில் 300 க்கும் மேற்பட்ட கட்டுமாடுகள் அவிழ்க்கப்பட்டன. மதியம் 12:00 மணிக்கு ஐந்து மங்கலங்களைச் சேர்ந்த மக்கள் துணி எடுத்து வந்து மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தனர்.
முதலில் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டு அவிழ்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மற்ற கோயில் மாடுகள் உள்ளிட்ட அனைத்து மாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்டன.
தொழுவில் அவிழ்ப்பதற்காக 50 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 4 காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு 46 காளைகள் மட்டும் அவிழ்க்கப்பட்டன. 60 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுகள் முட்டியதில் 50 பேர் காயமடைந்தனர். 12 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
தொழு முன்பாக இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், போலீசாரின் வாகனங்கள் மாடுகள் வெளியேறும் பகுதியை அடைத்து நின்றதால், பல மாடுகள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு வெளியேறின. இதனால் பலருக்கு காயம் ஏற்பட்டது. ஏ.டி.எஸ்.பி., கலைக்கதிரவன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமையில் பிரான்மலை, மு.சூரக்குடி ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த மருத்துவர்கள் முகாம் அமைத்து சிகிச்சை அளித்தனர். காலை 10:00 மணி முதல் மழை பெய்ய துவங்கிய நிலையில், மஞ்சுவிரட்டை பார்க்க கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. கட்டுமாடுகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.