/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சொத்து வரியை குறைக்க பில் கலெக்டர்கள் வசூல்!
/
சொத்து வரியை குறைக்க பில் கலெக்டர்கள் வசூல்!
PUBLISHED ON : செப் 09, 2024 12:00 AM

''எப்படி இந்த இடத்துக்கு வந்தாங்கன்னு ஆச்சரியப்படுதாங்க வே...'' என்றபடியே, கருப்பட்டி காபியை உறிஞ்சினார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருச்சி மாவட்ட எஸ்.பி., தனிப்பிரிவுல ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... பொதுவா, இந்த பதவியில நேர்மையான அதிகாரிகளை தான் நியமிப்பாங்க வே...
''ஆனா, இவங்க மதுவிலக்கு பிரிவுல வேலை பார்த்தப்ப, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினாங்க... இவங்க மேல துறைரீதியான நடவடிக்கைக்காக, டி.ஜி.பி.,க்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை அனுப்பி, அது நிலுவையில இருக்கு வே...
''இவங்க, அதிக மாமூல் வசூலாகும் போலீஸ் ஸ்டேஷன்கள்ல, தனக்கு விசுவாசமானவங்க, தன் சமூகத்தை சேர்ந்தவங்களை பணியில அமர்த்தியிருக்காங்க...
''அவங்களும் கஞ்சா, போலி மது விற்பனைன்னு அனைத்து சட்ட விரோத காரியங்களிலும் துணையா இருந்து, 'கல்லா' கட்டுறதோட, பெண் அதிகாரிக்கும், 'கப்பம்' கட்டுதாவ வே...
''பல முக்கியமான தகவல்களை எஸ்.பி., கவனத்துக்கே கொண்டு போகாம, இவங்களே டீல் பண்ணுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''முறைகேடு சம்பந்தமா விசாரணை நடத்தணும்னு கேக்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''அ.தி.மு.க., ஆட்சியில், ஆவின்ல, 2014 துவங்கி, 2021ம் ஆண்டு வரை, நேரடி நியமனங்கள் வாயிலா, கீழ்நிலை ஊழியர்கள் முதல், மேலாளர் வரை, 1,500க்கும் மேற்பட்டோரை சேர்த்திருக்கா ஓய்...
''இதுல, எந்த இட ஒதுக்கீடும் பின்பற்றப்படலை... எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வுல தேர்வு கமிட்டி அதிகாரிகள் நிறைய முறைகேடுகள்ல ஈடுபட்டிருக்கா ஓய்...
''தகுதியற்ற பலரும், துறையின் முக்கிய புள்ளிக்கு பல லட்சங்களை கொட்டி கொடுத்து, பணியில சேர்ந்திருக்கா... இதுல, பல மேலாளர்களுக்கு அடுத்தடுத்த ஆண்டுகள்ல உதவி பொது மேலாளர், 'புரமோஷன்' குடுத்திருக்கா ஓய்...
''இப்ப, இவாளுக்கு துணை பொது மேலாளர் பதவி உயர்வு வழங்க பட்டியல் தயார் பண்றா... 'தகுதியில்லாதவாளுக்கு பதவி உயர்வு வழங்காம, இந்த நியமனங்கள் சம்பந்தமா, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கணும்'னு ஆவின் ஊழியர்கள் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''வரியை குறைக்க வசூல் பண்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பகுதியில், சொத்து வரி விதிக்கப்படாத கட்டடங்களை ஆய்வு செய்து, புதுசா வரி விதிக்கிறாங்க...
''இப்பணியில ஈடுபடுற பில் கலெக்டர்கள், சரியா வரியை நிர்ணயம் செய்ய மாட்டேங்கிறாங்க... சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களிடம், 'சொத்து வரியை குறைச்சு விதிக்கிறோம்'னு லட்சக்கணக்குல பேரம் பேசி, புரோக்கர்கள் வாயிலா பணம் வசூலிக்குறாங்க...
''உதாரணமா, தின்னுார் பக்கத்துல ஒரு கட்டடத்துக்கு, '35,000 ரூபாய்னு கம்மியா வரி விதிக்கிறேன்... எனக்கு 1.40 லட்சம் ரூபாய் தரணும்'னு, உரிமையாளரிடம் ஒரு பில் கலெக்டர் கேட்டிருக்காருங்க...
''அப்புறமா புரோக்கர் வாயிலா பேசி, 1 லட்சம் ரூபாயை வாங்கியிருக்காரு... மாநகராட்சி முழுக்கவே இப்படித்தான் நடக்குது... இதனால, அரசுக்கு தான் வருவாய் இழப்பு ஏற்படுதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிவுக்கு வர, அனைவரும் கிளம்பினர்.