/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தேர்தல் முடிவு வந்ததும் அமைச்சரவையில் மாற்றம்!
/
தேர்தல் முடிவு வந்ததும் அமைச்சரவையில் மாற்றம்!
PUBLISHED ON : மே 17, 2024 12:00 AM

''ஜாதி பாசத்துல செயல்படுதாரு வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சேலம் மாவட்ட வேளாண் துறையில், ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஒரு அதிகாரி வந்தாரு... ஆரம்பத்துல, அடக்க ஒடுக்கமா இருந்தவர், அப்புறமா தன் சமுதாய பாசத்தை காட்ட ஆரம்பிச்சிட்டாரு... தன் சமுதாய அலுவலர்களிடம், அதிகமா வேலை வாங்குறது இல்ல வே...
''ஆனா, மற்ற சமுதாய ஊழியர்களிடம் கடுமையா நடந்துக்கிடுதாரு... மற்ற சமுதாய அலுவலர்கள் வேலை பார்க்கும் வட்டாரத்துக்கு ஆய்வுக்கு போறப்ப, சரியா காலை 7:00 மணிக்கு ஆஜராகிடுதாரு வே...
''அந்த நேரத்துக்கு வராத அலுவலர்கள், களப்பணியில் சிறு தவறுகள் செய்யும் அலுவலர்கள் குறித்து, 'வாட்ஸாப்'ல 30 வரிகளுக்கு குறையாம புகார் பத்திரம் வாசித்து, மறுநாள் காலை 7:00 மணிக்கு தன்னை பார்த்து, உரிய விளக்கம் தரணும்னு உத்தரவு போடுதாரு வே...
''அதுவே, தன் சமுதாய அலுவலர்கள் பணிபுரியும் வட்டாரத்துக்கு ஆய்வுக்கு போறப்ப, அங்க பெரிய தவறு நடந்திருந்தாலும், கண்டும், காணாமலும் இருந்துடுதாரு... இதனால, துறைக்குள்ள பலரும் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''சிங்காரம், இப்படி உட்காருங்க பா...'' என, நண்பருக்கு இடம் தந்த அன்வர்பாயே, ''குடிநீர் இணைப்புல சரமாரியா வசூல் பண்றாங்க பா...'' என்றார்.
''எந்த ஊர்ல ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''ஓசூர் மாநகராட்சியில், அதிகமான தனியார் லேஅவுட் குடியிருப்புகள் இருக்கு... இதுக்கு தனியார் பில்டர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி, குடிநீர் இணைப்பும் குடுத்துடுறாங்க... இந்த இணைப்புகளை, மாநகராட்சி வசம் ஒப்படைச்சிடுறாங்க பா...
''மாநகராட்சியில இருந்து குடிநீர் சப்ளை மட்டும் பண்றாங்க... இதுக்கு வருஷத்துக்கு 1,500 ரூபாய் வசூல் செய்தாலே போதும்... ஆனா, ஒவ்வொரு வீட்டிற்கும் புதுசா பைப்லைன் போட்டதா சொல்லி, மாநகராட்சியில இருந்து 13,864 ரூபாய்க்கு பில் குடுத்து, 20,000 ரூபாய் வரைக்கும் வசூலிக்கிறாங்க பா...
''குடியிருப்புவாசிகள் பிரச்னை பண்ணுவாங்க என்பதால, அந்தந்த பகுதி குடியிருப்போர் சங்கம் வாயிலாகவே, இந்த பணத்தை வசூலிக்கிறாங்க... இப்படி, லட்சக்கணக்குல ஊழல் நடக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''தேர்தல் முடிஞ்சதும், அமைச்சரவையில் அதிரடி மாற்றம் வரும்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தமிழகத்துல தி.மு.க., கூட்டணிக்கு 37, தொகுதிகள்ல வெற்றி கிடைக்கும்னு ஆளுங்கட்சி நம்பறது... அதே நேரம், ஓட்டு சதவீதம் குறையற இடங்களுக்கு பொறுப்பான மாவட்ட அமைச்சர்கள், என்ன தான் தலைமைக்கு நெருக்கமா இருந்தாலும், அவா பதவிகளை பறிக்க முடிவு பண்ணியிருக்கா ஓய்...
''பண மூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு சரியா தேர்தல் பணி பார்க்காத அமைச்சர்கள்னு ஒரு பட்டியலே இருக்காம்... இவாளுக்கு கல்தா தந்துட்டு, புதுசா சிலரை நியமிக்க போறா ஓய்...
''அதுல, இதுவரை அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் தர போறாளாம்... அந்த வகையில், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருநெல்வேலி போன்ற மாவட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு யோகம் அடிக்கும்னு அறிவாலய வட்டாரங்கள்ல பேசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிய, பெரிய வர்கள் கிளம்பினர்.

