/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கும் தி.மு.க., புள்ளிகள்!
/
ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கும் தி.மு.க., புள்ளிகள்!
ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கும் தி.மு.க., புள்ளிகள்!
ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கும் தி.மு.க., புள்ளிகள்!
PUBLISHED ON : ஏப் 27, 2024 12:00 AM

மெது வடையை கடித்தபடியே, ''ஹோட்டல்களுக்கு முறைகேடா தண்ணீர் சப்ளை பண்றா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''எந்த ஊருல, யாருவே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் குடிதண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவறது... இங்க இருக்கற அண்ணாநகர் பகுதிக்கு சரியா தண்ணீர் வினியோகம் பண்ண மாட்டேங்கறா ஓய்...
''அந்த ஏரியாவுக்கான தண்ணீரை, சில ஹோட்டல்களுக்கு இல்லீகலா சப்ளை பண்றா... நகராட்சிக்கு புதுசா வந்திருக்கற கமிஷனர் பானுமதிக்கும் இது தெரியல... இதனால, ஹோட்டல்களுக்கு தண்ணீரை தாராளமா குடுத்து, அதிகாரிகள் பணத்தை கறந்துட்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஓட்டு போடாதவங்களை கணக்கெடுக்கிறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''திருச்சி லோக்சபா தொகுதியில வர்ற திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் சட்டசபை தொகுதிகள்ல, 70 சதவீத வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி சார்புல, ஓட்டுக்கு பட்டுவாடா நடந்திருக்கு... இந்த பட்டுவாடா கணக்குப்படி இந்த தொகுதிகள்ல ஓட்டு சதவீதம் அதிகமாகி இருக்கணும் பா...
''ஆனா, திருச்சி கிழக்கில் 62.46ம், திருவெறும்பூரில் 66.62 சதவீதமும் தான் ஓட்டுகள் பதிவானது... ஓட்டுக்கு பணம் வாங்கிய 25 சதவீதம் வாக்காளர்கள் ஓட்டு போடாம, வீட்டுல படுத்து துாங்கிட்டாங்க பா...
''இந்த இரண்டு தொகுதிக்கும் பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் தான் பொறுப்பாளர்... இதனால கடுப்பான அவர், கட்சி நிர்வாகிகளை கூப்பிட்டு, 'டோஸ்' விட்டிருக்காரு பா... அதுவும் இல்லாம, பணத்தை வாங்கிட்டு ஓட்டு போடாதவங்க பட்டியலையும் கேட்டிருக்காரு... இப்ப, தி.மு.க.,வினர் மும்முரமா பட்டியல் தயார் பண்ணிட்டு இருக்காங்க...
''சில இடங்கள்ல, ஒரு ஓட்டுக்கு தலைமை தந்த 250 ரூபாய்ல, 200, 150ஐ மட்டும் குடுத்துட்டு, மிச்ச பணத்தை கீழ்மட்ட நிர்வாகிகள் பாக்கெட்டுல போட்டுக்கிட்டதும் தெரிஞ்சிருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''இப்பவே இடம் பார்க்க ஆரம்பிச்சுட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''என்ன விஷயமுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''தேர்தல் பிரசாரத்துல பேசிய முதல்வர் ஸ்டாலின், 'கோவையில, பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும்'னு அறிவிச்சாருல்லா... ஏற்கனவே, 2021 சட்டசபை தேர்தல்ல அறிவிச்ச மெட்ரோ ரயில் திட்டமே, வெறும் அறிவிப்பு நிலையிலயே இருக்கு...
''இந்த லட்சணத்துல, ஸ்டேடியம் கட்டுறதுக்கு இடம் பார்த்து, ரெண்டே வருஷத்துல பணிகளை துவங்க வாய்ப்பே இல்லையாம்... '2026 சட்டசபை தேர்தல்ல இதை சொல்லியே, அ.தி.மு.க., அணி நமக்கு எதிரா பிரசாரம் பண்ணும்'னு தி.மு.க.,வினர் பயப்படுதாவ வே...
''இதுக்கு மத்தியில, கிரிக்கெட் ஸ்டேடியத்தை தங்களது ஏரியாவுக்கு கொண்டுட்டு போக பிளான் பண்ணி, ஆளுங்கட்சியின் ரெண்டு மாவட்ட புள்ளிகள் இப்பவே இடம் பார்க்க தொடங்கிட்டாவ... இதன் மூலம், அந்த ஏரியாவுல நாம போட்டியிட்டும் ஜெயிக்கலாம், அதை சுற்றிலும் இடம் வாங்கி போட்டு காசும் பார்க்கலாம்னு, ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கிற திட்டத்துல இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''முருகேசன், ரவி வர்றாங்க... இஞ்சி டீ போடுங்க நாயரே...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

