/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'சவுக்கு' சங்கருக்கு உதவிய 'மாஜி' ஆதரவாளர்கள்!
/
'சவுக்கு' சங்கருக்கு உதவிய 'மாஜி' ஆதரவாளர்கள்!
PUBLISHED ON : மே 19, 2024 12:00 AM

''பட்டுவாடா தகராறுல, 25 வருஷம் வகித்த பதவியை துாக்கி எறிஞ்சுட்டார் ஓய்...'' என்றபடியே, பில்டர் காபிக்கு ஆர்டர் தந்தார் குப்பண்ணா.
''எந்த கட்சி விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சேலம் மாவட்டம், ஓமலுார் நகர அ.தி.மு.க., செயலரா 25 வருஷத்துக்கும் மேல இருந்தவர் சரவணன்... சேலம் லோக்சபா அ.தி.மு.க., வேட்பாளர் விக்னேஷ் சொந்த ஊரும் ஓமலுார் தான் ஓய்...
''தேர்தலுக்கு பின், சரவணன் ஏரியாவில் பணம் பட்டுவாடாவுல குளறுபடி பண்ணிட்டதா புகார்கள் போயிருக்கு... இது சம்பந்தமா ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, சரவணனுக்கு போன் போட்டு விளக்கம் கேட்டிருக்கார் ஓய்...
''அப்ப, ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் முத்திடுத்து... வெறுத்து போன சரவணன், 'என் உடல்நிலை சரியில்லாததால, நகர செயலர் பதவியில இருந்து விலகுறேன்... தொண்டனா மட்டும் உழைக்கிறேன்'னு தலைமைக்கு கடிதம் அனுப்பிட்டார்... மணி, சரவணன் தரப்பை சமாதானப்படுத்த பழனிசாமி முடிவு பண்ணியிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஆளுங்கட்சின்னா என்ன வேணும்னாலும் செய்வாங்க போலிருக்கு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி அலுவலகம் முழுக்க கண்காணிப்பு கேமரா பொருத்திட்டாவ... கேமரா பதிவுகளை பார்க்கும் வசதியை, நகராட்சி கமிஷனர் மொபைல் போனுக்கு குடுத்திருக்காவ வே...
''இது போக, நகராட்சியில முக்கிய பதவியில இருக்கிற ஆளுங்கட்சி புள்ளி, அவரது மகன் மொபைல் போன்களுக்கும் அடிஷனலா கனெக் ஷன் குடுத்திருக்காவ... இவங்க ரெண்டு பேரும், நகராட்சி ஆபீசுக்கு யார், யார் வர்றாங்க, எந்த அதிகாரியுடன் பேசுதாங்கன்னு கண்காணிக்காவ வே...
''அதோட, தங்களுக்கு வேண்டாத யாரிடமாவது அதிகாரிகள், ஊழியர்கள் பேசுறதை பார்த்துட்டா, உடனே அவங்களுக்கு போனை போட்டு சத்தம் போடுதாவ... விதிப்படி, கமிஷனருக்கு மட்டும் தான் கேமரா பதிவுகளை பார்க்கும் வசதி தரணுமாம்... ஆனா, ஆளுங்கட்சி புள்ளிகளிடம் அந்த விதியெல்லாம் செல்லுபடியாகுமா வே...'' என்றார், அண்ணாச்சி.
''மைக்கேல், ஸ்டீபன் இப்படி உட்காருங்க...'' என நண்பர்களுக்கு இடம் தந்த அந்தோணிசாமியே, ''சவுக்கு சங்கருக்கு உதவி செய்த பலருக்கும் சிக்கல் காத்திருக்குதுங்க...'' என்றார்.
''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''யு டியூபர் சவுக்கு சங்கரை கஞ்சா உள்ளிட்ட பல வழக்குல கைது பண்ணி, குண்டர் சட்டத்துலயும் ஜெயில்ல தள்ளியிருக்காங்களே... இவருக்கு எதிர்க்கட்சியை சேர்ந்த கோவை, 'மாஜி'யின் சகோதரர் நெருங்கிய நட்பா இருந்திருக்காருங்க...
''சங்கருக்கு ஏராளமா பண உதவியும் பண்ணி யிருக்காரு... தன் மகன் திருமணத்துக்கு, சங்கருக்கு பிளைட் டிக்கெட் போட்டு குடுத்து, பைவ் ஸ்டார் ஹோட்டல்ல தங்க வச்சு உபசாரம் பண்ணியிருக்காருங்க...
''அதே மாதிரி, 'மாஜி'க்கு மிகவும் நெருக்கமான போலீஸ் உயரதிகாரியும், ஓய்வு பெற்ற மக்கள் தொடர்பு அதிகாரியும், தமிழக அரசுக்கு எதிரான பல தகவல்களை மாநிலம் முழுக்க இருந்து சேகரிச்சு, சங்கருக்கு குடுத்திருக்காங்க... இதனால, இவங்களையும் சங்கர்வழக்குல சேர்க்க முயற்சிகள் நடக்குதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

