தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ஏஜன்ட் நியமித்து நோயாளிகளை வளைக்கும் அரசு டாக்டர்!

ஏஜன்ட் நியமித்து நோயாளிகளை வளைக்கும் அரசு டாக்டர்!

ஏஜன்ட் நியமித்து நோயாளிகளை வளைக்கும் அரசு டாக்டர்!


PUBLISHED ON : மே 20, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''ரவுடியிசம், போதை பொருள் விற்பனை எல்லாம் அதிகரிச்சிட்டு வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''முதல்வர் தொகுதியில இருக்கிற, மரியாதையான போலீஸ் ஸ்டேஷன்ல, தேர்தலுக்காக மாற்றலாகி வந்த போலீசார் எல்லாம், எப்படா பழைய இடத்துக்கு போவோம்னு பல்லை கடிச்சிட்டு இருக்காவ வே...

''ஏன்னா, இங்க இருக்கிற பெண் அதிகாரியின் வசூல் வேட்டைக்கு அளவே இல்ல... சரித்திர பதிவேடு குற்றவாளிகளை எல்லாம் பிடிச்சு, வாங்க வேண்டியதை வாங்கிட்டு, வீட்டுக்கு அனுப்பிடுதாங்க வே...

''இதனால தான், முதல்வர் தொகுதியில போதை பொருள் நடமாட்டம், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு எல்லாம் அதிகமா இருக்குன்னு நேர்மையான போலீசார் எல்லாம் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''சோபியா மேடம், உங்க பொண்ணு அட்மிஷன் சம்பந்தமா பேசிட்டேன்... கவலைப்படாதேள்...'' என கூறி வைத்தவர், ''இந்த போலீஸ் ஸ்டோரியையும் கேளுங்க ஓய்...'' என்றபடியே தொடர்ந்தார்...

''சென்னை, தாம்பரம் கமிஷனர் ஆபீஸ் கன்ட்ரோல்ல மணிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் இருக்கு... இந்த ஏரியாவுல, 'ஏ பிளஸ்' ரவுடிகள் நிறைய இருக்கா ஓய்...

''இவாளது அடியாட்கள் பலர், தொழிலதிபர்கள், கட்டுமான ஒப்பந்ததாரர்கள், வணிகர்களை மிரட்டி மாமூல் வசூலிக்கறா... பாதிக்கப்பட்டவா, மணிமங்கலம் ஸ்டேஷனுக்கு போனா, புகாரை போலீசார் வாங்க மாட்டேங்கறா ஓய்...

''அதுக்கு பதிலா, 'ரவுடிகள் மேல நீங்க புகார் தந்து, நாங்களும் அவாளை புடிச்சு உள்ள தள்ளிடுவோம்... ஆனா, அவா வெளியில வந்து, உங்களை வெட்டி போடுவாளே'ன்னு போலீசாரே பயமுறுத்தறா...

''அதுவும் இல்லாம, செயின் பறிப்பு, வீடு புகுந்து திருடற குற்றங்கள்ல புகார் அளிக்க போற மக்களிடம், 'நகைக்கான ரசீதுகளை எடுத்துட்டு வாங்கோ'ன்னு அலைக்கழிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''நோயாளிகளை தன் மருத்துவமனைக்கு தள்ளி விட, ஏஜன்ட்களை வச்சிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், புதுசா, 500 படுக்கை வசதி ஏற்படுத்தி போன வருஷம் திறந்தாங்க... மருத்துவமனை நிர்வாகத்தை கவனிக்கிற டாக்டர், அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் நோயாளிகளை கண்காணிக்க, தனியா ஏஜன்ட்களை நியமிச்சிருக்காருங்க...

''அதாவது, எந்தெந்த நோயாளிகள் வசதியானவங்கன்னு இந்த ஏஜன்ட்கள் கவனிச்சு, அவங்க உறவினர்களிடம் பேசுறாங்க... 'இங்க சிகிச்சை முடிஞ்சு வீட்டுக்கு போக, 10 நாளாகிடும்... பேசாம, நான் சொல்ற தனியார் மருத்துவமனைக்கு போயிடுங்க... கம்மியா தான் செலவாகும்'னு சொல்றாங்க...

''இதுக்கு சம்மதிக்கிறவங்களை, தனியார் ஆம்புலன்சை வரவழைச்சு, டாக்டரின் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிடுறாங்க... இதே காரியத்தை, சில பெரிய டாக்டர்களும் செய்ய, தொழில் போட்டியில, ஏஜன்ட்கள் இடையே அடிக்கடி தகராறு நடக்குதுங்க... சுகாதார துறை அதிகாரிகள் என்ன பண்றாங்கன்னு தெரியலைங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.

அரட்டை முடிவுக்கு வரவும், பெரியவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us