தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ 'பெரிய டாக்டர்' இல்லாமல் உயிரிழக்கும் இதய நோயாளிகள்!

'பெரிய டாக்டர்' இல்லாமல் உயிரிழக்கும் இதய நோயாளிகள்!

'பெரிய டாக்டர்' இல்லாமல் உயிரிழக்கும் இதய நோயாளிகள்!


PUBLISHED ON : மே 08, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''பேட்டரியை திருடிட்டு போயிட்டாங்க பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.

''எங்க வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''சென்னை, அண்ணா சாலையில், மின்வாரிய தலைமை அலுவலகம் இருக்குல்ல... இங்க ஏராளமான, 'சர்வர்'கள் பராமரிக்கப்பட்டு வருது பா... இதுக்கு தடையில்லாம மின்சாரம் வழங்க, நிறைய பேட்டரிகள் இருக்கு... ஒரு பேட்டரி 5,000 ரூபாய்க்கு மேல இருக்கும் பா...

''சமீபத்துல 40க்கும் மேற்பட்ட பேட்டரிகள் திருடு போயிடுச்சு... அங்க பாதுகாப்புக்கு இருந்த போலீசார் நடத்திய விசாரணையில, துாய்மை பணி செய்யும் வடமாநில தொழிலாளிகள் இருவர் திருடியது தெரிஞ்சிருக்கு பா...

''அவங்களையும், உடந்தையா இருந்த இன்னும் இரண்டு பேர்னு நாலு ஒப்பந்த ஊழியர்களை பணியில் இருந்து நீக்கிட்டாங்க... பாதுகாப்பு போலீசார் துாங்கிட்டு இருந்தாங்களான்னு தெரியல பா...'' என்றார், அன்வர்பாய்.

''வெளிப்படையான நிர்வாகத்தை ஆபீசர்ஸ் பாலோ பண்ண மாட்டேங்கறா ஓய்...'' என்று குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''கோடை காரணமா, பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு இருக்கோல்லியோ... இது சம்பந்தமா போன வாரம் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார் ஓய்...

''அதுல, 22 மாவட்டங்கள்ல குடிநீர் பற்றாக் குறை இருக்கறதா சொல்லி, 150 கோடி ரூபாய் ஒதுக்கினார்... இதை தேவைக்கு ஏற்ப மாவட்டங்களுக்கு பிரிச்சு வழங்கி, குடிநீர் தட்டுப்பாடு இல்லாம பார்த்துக்கணும்னு வருவாய் நிர்வாக ஆணையருக்கு முதல்வர் உத்தரவு போட்டிருக்கிறதா செய்திக்குறிப்பு வெளியிட்டா ஓய்...

''அந்த மாவட்டங்கள் விபரங்களை தாங்கன்னு செய்தி துறை அதிகாரிகள் மற்றும் முதல்வர் அலுவலக அதிகாரிகளிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதுக்கு, அவா கையை விரிச்சுட்டா...

''வருவாய் நிர்வாக ஆணையரை பார்க்க போனப்ப, அவரது உதவியாளர் 'ஆணையர் யாரையும் பார்க்க மாட்டார்'னு திருப்பி அனுப்பிட்டார்... இதுதான் முதல்வர் அடிக்கடி சொல்ற வெளிப்படையான நிர்வாகமான்னு தெரியல ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''பிரபாகர் சார் இப்படி உட்காருங்க...'' என, நண்பரை உபசரித்த அந்தோணிசாமி, ''இதய நோயாளிகள் பலர், அறுவை சிகிச்சை இல்லாம இறந்து போறாங்க...'' என அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

''எங்க வே இந்த அநியாயம்...'' என கேட்டார், அண்ணாச்சி.

''வடசென்னையில இருக்கிற அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி மருத்துவமனை 200 வருஷம் பழமையானது... இங்க, சில மாதங்களா இதயவியல் சிகிச்சை துறை தலைவர் பதவி காலியாவே இருக்குதுங்க...

''டிரான்ஸ்பர் கவுன்சிலிங் நடத்தாம இருக்கிறதால, இந்த பதவி காலியா கிடக்குது... எந்த ஒரு அறுவை சிகிச்சையும் நடக்காம ஆப்பரேஷன் தியேட்டர் மூடியே கிடக்குதுங்க...

''சிகிச்சைக்கு வர்ற நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை குடுத்து அனுப்பிடுறாங்க... சில உள்நோயாளிகளிடம், 'பெரிய டாக்டர் வந்ததும் தான் அறுவை சிகிச்சை நடத்த முடியும்'னு சொல்றாங்க...

''சமீபத்துல, தண்டையார் பேட்டையை சேர்ந்த சசிகலா என்ற இதய நோயாளி இறந்தே போயிட்டாங்க... இன்னும் நாலஞ்சு ஏழை நோயாளிகள், பெரிய டாக்டர் எப்ப வருவார்னு தெரியாம, நித்ய கண்டம் பூரண ஆயுசுன்னு இருக்காங்க... 'தலைநகர்லயே இப்படி ஒரு அவல நிலையா'ன்னு அவங்க உறவினர்கள் எல்லாம் குமுறிட்டு இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us