/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கட்டட விதிமீறல் மனுக்களில், 'கல்லா' கட்டும் அதிகாரி!
/
கட்டட விதிமீறல் மனுக்களில், 'கல்லா' கட்டும் அதிகாரி!
கட்டட விதிமீறல் மனுக்களில், 'கல்லா' கட்டும் அதிகாரி!
கட்டட விதிமீறல் மனுக்களில், 'கல்லா' கட்டும் அதிகாரி!
PUBLISHED ON : மே 06, 2024 12:00 AM

படித்து கொண்டிருந்த நாளிதழை மடித்தபடியே, ''முக்கிய பதவிகள்ல எல்லாம் முறைகேடு புள்ளிகளா இருக்காங்க பா...'' என்றபடியே, விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''கோவை பாரதியார் பல்கலையில், ஊழல் புகாரில் குற்றவாளின்னு உறுதி செய்யப்பட்ட ஒருத்தர், இப்பவும், சிண்டிகேட் பதவியில இருக்காரு...
''அதேபோல, பணி நியமனத்துல முறைகேடு செய்த ஒரு பெண் அதிகாரி, துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினரா இருக்காங்க பா...
''இதே மாதிரி, பல்வேறு புகார்கள்ல சிக்கிய சிலர், இன்னும் துறை தலைவர் பதவிகள்ல நீடிக்கிறாங்க...
''இந்த பல்கலையில, பதிவாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் எல்லாம் காலியா கிடக்கிறதே இதுக்கு காரணம்... 'இதை எல்லாம் நிரப்பி, ஊழல் புள்ளிகளை ஓரங்கட்டணும்'னு கல்வியாளர்கள் சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''உளவுப்பிரிவு போலீசார் பாடு திண்டாட்டமா இருக்கு வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் பெரியசாமி அண்ணாச்சி.
''அவங்களுக்கு என்ன ஓய் பிரச்னை...'' என கேட்டார், குப்பண்ணா.
''அமலாக்கத் துறையினர் சென்னையில அடிக்கடி எங்கயாவது, 'ரெய்டு' நடத்திடுதாங்கல்லா... அவங்க எங்க, யார் வீட்டுக்கு போக போறாங்க என்பதை கண்டுபிடிக்க முடியாம உளவுப்பிரிவு போலீசார் திணறுதாவ வே...
''இதனால, சென்னையில நைட் ஷிப்ட் முடிக்கிற உளவுப்பிரிவு போலீசார், அப்படியே அமலாக்க துறை ஆபீசுக்கு போயிடணுமாம்...
''அங்க இருந்து எந்த வண்டி கிளம்பினாலும், அதை பாலோ பண்ணிட்டே போகணுமாம்... 'அந்த வண்டி எந்த ஏரியாவுல போய் நிற்குதோ, அந்த ஏரியா உளவுப்பிரிவு போலீஸ்கிட்ட தகவல் சொல்லிட்டு தான் வீட்டுக்கு போகணும்'னு உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு போட்டிருக்காவ... இதனால, அவங்க துாங்க கூட முடியாம தவிக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''வசூல் வேட்டை ஜோரா நடக்குதுங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சி.எம்.டி.ஏ.,வுல அனுமதி வாங்கி, சட்டப்படி தான் புதிய கட்டடங்கள் கட்டணும்... ஆனா, சிலர் விதிகளை மீறி, இஷ்டத்துக்கு கட்டடங்களை கட்டுறாங்க... இப்படி கட்டுறவங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அந்த கட்டடத்துக்கு சீல் வைக்கணும்...
''அதுக்கு அப்புறமா, விதிகளை மீறி கட்டடம் கட்டியவங்க மேல்முறையீடு செய்ய ஒரு வாய்ப்பு தருவாங்க...
''இப்படி வர்ற மேல் முறையீட்டு மனுக்களை விசாரிச்சு, அதுல முடிவெடுக்க, சி.எம்.டி.ஏ.,வின் சீப் பிளானர் ஒருத்தர், தலைமை செயலகத்தில் கூடுதல் செயலரா நியமிக்கப்பட்டிருக்காருங்க...
''இதுல, கட்டட உரிமையாளர்களுக்கு சாதகமா முடிவு எடுக்கிறதா சொல்லி, அந்த அதிகாரி வசூல் வேட்டை நடத்துறதா புகார் எழுந்திருக்குது...
''அதுவும் இல்லாம, வரன்முறைக்கு வாய்ப்புள்ள கட்டடங்களின் உரிமையாளர்களை கூட மிரட்டி வசூல் பண்றாருங்க... துறை மேலிடத்தின் பெயரை அவர் பயன்படுத்துறதால, மற்ற அதிகாரிகள் எதுவும் பேச முடியாம தவிக்கிறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.