/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஆக்கிரமிப்பாளருக்கே கோவில் நிலம் குத்தகை!
/
ஆக்கிரமிப்பாளருக்கே கோவில் நிலம் குத்தகை!
PUBLISHED ON : ஆக 24, 2024 12:00 AM

''ஓய்வுல போனவாளுக்கு பதவி தரலாமான்னு புலம்பறா ஓய்...'' என, பில்டர் காபியை உறிஞ்சியபடியே விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னை, கிண்டி யில் இருக்கற கலைஞர் நுாற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி, 'ரிட்டயர்' ஆனதும், பணி நீட்டிப்பு குடுத்தாளோல்லியோ... இதை கண்டிச்சு, டாக்டர்கள் போராட்டம் நடத்தினா ஓய்...
''இதனால, ஓமந்துாரார் பல்நோக்கு மருத்துவமனை இயக்கு னர் டாக்டர் விமலா உள்ளிட்ட பணி நீட்டிப்பில் இருந்த டாக்டர்களை அரசு விடுவிச்சு, ஆத்துக்கு அனுப்பிடுத்து... ஆனா, யாரை எதிர்த்து போராட்டம் நடத்தினாளோ, அந்த பார்த்தசாரதி இன்னும் கிண்டியில் பணியில நீடிக்கறார் ஓய்...
''இந்த சூழல்ல, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில், சிறுநீரக துறையின் தலைவரா இருந்து, ஓய்வு பெற்ற டாக்டர் கோபாலகிருஷ்ணனுக்கும் பணி நீட்டிப்பு குடுத்திருக்கா... இது, பதவி உயர்வுக்கு காத்துண்டு இருக்கற டாக்டர்கள் மத்தியில புகைச்சலை உருவாக்கிடுத்து ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கிட்டத்தட்ட, 150 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்துட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எங்கப்பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஒரக்காடு கிராமத்துல நத்தம் வகைப்பாடுல இருந்த 14.5 ஏக்கர் அரசு நிலத்தை தனி நபர்கள், கடந்த காலத்துல அதிகாரிகளை, 'கவனிச்சு' தங்கள் பெயருக்கு பட்டா வாங்கிட்டாங்க... அந்த கிராம மக்கள், மாவட்ட வருவாய் துறையிடம் புகார் தெரிவிச்சாங்க...
''பட்டாவை ரத்து செய்த அதிகாரிகள், '30 நாளுக்குள்ள மேல் முறையீடு செய்யலாம்'னு ஒரு வார்த்தையை சேர்த்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமா உத்தரவு போட்டாங்க... இதை வச்சு, தனி நபர்கள் கோர்ட்டுக்கு போய், பட்டா ரத்துக்கு தடை வாங்கிட்டாங்க...
''இதனால, கிராம மக்கள் கடுப்பாகி, 'சுதந்திர தினத்தன்னைக்கு கருப்பு கொடி ஏத்துவோம்'னு மிரட்டல் விடுத்தாங்க... இதனால, போன வாரம் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் போனப்ப, கோர்ட் உத்தரவை தனி நபர்கள் காட்டியதால, சத்தமில்லாம திரும்பிட்டாங்க...
''பல கட்சிகளின் அரசியல் செல்வாக்கால, 150 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை மீட்க முடியல... இதனால, அதிகாரிகள் மேல கிராம மக்கள் அதிருப்தியில இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''என்கிட்டயும் ஒரு நில பஞ்சாயத்து இருக்கு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்டம், பல்லடம் படேல் வீதியில், அறநிலைய துறைக்கு சொந்தமான அருளானந்த ஈஸ்வரர் கோவில் இருக்கு... இதுக்கு சொந்தமா, பல கோடி ரூபாய் மதிப்பிலான, 3.5 ஏக்கர் நிலம், பக்கத்துலயே இருக்கு வே...
''கோவில் பெயர்ல இருந்த இந்த நிலம், பல வருஷமா ஆக்கிரமிப்புல இருந்துச்சு... இந்த நிலத்தை மீட்டு, குத்தகைக்கு விட்டிருக்கிறதா, அறநிலைய துறை அதிகாரிகள் பெருமை அடிச்சுக்கிட்டாவ வே...
''ஆனா, எந்த அறிவிப்பும் இல்லாம, பழைய ஆக்கிரமிப்பாளருக்கே குறைந்த தொகைக்கு குத்தகைக்கு விட்டிருக்காவ... இதுக்காக, அதிகாரிகளுக்கு பல, 'லகரங்கள்' கைமாறிட்டுன்னு ஊர் மக்கள் பேசிக்கிடுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பெரியவர்கள் அரட்டை முடிய, பெஞ்ச் காலியானது.

