/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அரசியலில் குதிக்க தயாராகும் அடுத்த ஹீரோ?
/
அரசியலில் குதிக்க தயாராகும் அடுத்த ஹீரோ?
PUBLISHED ON : ஜூன் 14, 2024 12:00 AM

''தடையில்லா சான்றிதழ் வழங்க தடை போடுறாங்க பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.
''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லை வாயலில் தனியார் நிறுவனத்திற்கு சொந்த மான நிலங்களுக்கு முறைப்படி ஆவணங்கள் வழங்கி, சி.எம்.டி.ஏ., அனுமதி வாங்கிட்டாங்க... அந்த நிலத்திற்கு சாலை வசதி உள்ளிட்ட நிபந்தனைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கான்னு பார்த்து, ஆவடி மாநகராட்சியில் தடையில்லா சான்றிதழ் வழங்கணும் பா...
''ஆனா, தனியார் நிறுவனம், அந்த பகுதி ஆளுங்கட்சியின், 'மாஜி' அமைச்சரையும், பட்டா வாங்கி கொடுக்கும் ஏஜன்ட்களா செயல்படும் மூவரையும் கண்டுக்கலை... இதனால, அந்த மூவரும் சிண்டிகேட் அமைச்சு, தடையில்லா சான்றிதழ் கொடுக்க விடாம தடுத்துட்டு இருக்காங்க...
''வருவாய் துறை அதிகாரிகள் வாயிலா, சம்பந்தப்பட்ட நிலம் வனத்துறைக்கு சொந்தமான நிலம் மாதிரி தெரியுதேன்னு கேள்வி எழுப்பி, அனுமதி வழங்க விடாம முட்டுக்கட்டை போடுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''நாங்க மட்டும் பலிகடாவான்னு கேக்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''கடந்த 2020 - 21ல், மாநிலம் முழுக்க பேரூராட்சிகளில், 'வீடியோ கான்பரன்ஸ்' பயன்பாட்டுக்கு, 40 அங்குல சோனி டிவி, கேமரா மற்றும் சி.பி.யு., உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்தா... இந்த உபகரணங்களுக்கு, 4 லட்சம் ரூபாய் வரை குடுத்திருக்கா ஓய்...
''ஆனா, முறைப்படி டெண்டர் விடாம, டைரக்டா இவற்றை, 'பர்சேஸ்' பண்ணியிருக்கா... சந்தை விலையை விட, அதிகமான விலை குடுத்திருக்கா ஓய்...
''இது சம்பந்தமா புகார்கள் வர, கரூர் மாவட்ட பேரூராட்சிகள்ல பணிபுரிந்த செயல் அலுவலர்கள் மேல லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு பண்ணியிருக்கா...
''ஆனா, 'மாநிலம் முழுக்க இந்த முறைகேடு நடந்திருக்கற சூழல்ல, அந்த கால கட்டத்துல பொறுப்புல இருந்த பேரூராட்சிகளின் உயரதிகாரிகள் தான் இதற்கு பொறுப்பேற்கணும்... அவா அறிவுறுத்தலின்படி தான், பேரூராட்சி நிர்வாகத்தினர் டிவி உள்ளிட்ட உபகரணங்களை கொள்முதல் செய்திருக்கா... இதனால, வழக்குல அவாளையும் சேர்க்கணும்'னு, செயல் அலுவலர்கள் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''இன்னொரு நடிகருக்கும் அரசியல் ஆசை வந்துட்டுல்லா...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''யார்னு விளக்கமா சொல்லுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''ஏற்கனவே, நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம்னு ஒரு கட்சியை துவங்கிட்டாருல்லா... நடிகர் சூர்யா, ஏற்கனவே தன் நற்பணி இயக்கம் சார்பில், ரத்த தானம், தேர்தல் விழிப்புணர்வு, மரக்கன்று நடுதல், அறக்கட்டளை வாயிலா ஏழை மாணவ - மாணவியர் படிக்க உதவி பண்றது போன்ற பணிகளை செஞ்சிட்டு இருக்காரு வே...
''இப்ப, நற்பணி இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில், 60 மாவட்டங்களா பிரிச்சிஇருக்காரு... மன்ற பணிகள்ல ஆர்வமா செயல்படுறவங்க பட்டியலையும் தயார் பண்ணியிருக்காரு வே...
''சமீபத்துல, மாவட்ட வாரியா நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தியிருக்காரு... அப்ப, தென் மாவட்ட நிர்வாகிகள் சிலர், 'வர்ற ஊரக உள்ளாட்சி தேர்தல்ல, நம்ம இயக்கம் சார்புல போட்டியிடணும்... அதுக்கு சூர்யா படத்தை பயன்படுத்திக்க அனுமதி தரணும்'னு கேட்டிருக்காவ வே... இதுக்கு, சூர்யாவும் அனுமதி தந்துட்டதா சொல்லுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிவுக்கு வர, பெஞ்ச் அமைதியானது.