/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஜீப்புகள் இல்லாமல் அவதிப்படும் அதிகாரிகள்!
/
ஜீப்புகள் இல்லாமல் அவதிப்படும் அதிகாரிகள்!
PUBLISHED ON : செப் 02, 2024 12:00 AM

''நம்ம பெயர் இல்லாதது சந்தோஷம் தான்னு பேசிக்கறா ஓய்...'' என, முதல் ஆளாக பேச்சை ஆரம்பித்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மூணு மாச பயணமா லண்டன் போயிட்டதால, மூத்த தலைவர், ஹெச்.ராஜா தலைமையில், ஆறு பேர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவை நியமிச்சிருக்கால்லியோ... இந்த குழு தான், அடுத்த மூணு மாசத்துக்கு தமிழக பா.ஜ.,வை வழிநடத்த போறது ஓய்...
''அடுத்த மாநில தலைவர் பதவியை பிடிக்கறதுக்கான, 'ரேஸ்'ல இருக்கற நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், ஏ.பி.முருகானந்தம் எல்லாம், இந்த குழுவுல இடம் கிடைக்காம போனதுக்கு வருத்தப்படலையாம்...
''இப்ப இந்த குழுவுல இடம் பிடிச்சிட்டா, மாநில தலைவர் பதவி போட்டிக்கு எங்களை பரிசீலனை பண்ண மாட்டா... அதனால, இதுவும் நல்லதுக்கு தான்னு அவா தரப்பு சொல்றது ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கவுன்சிலிங் எப்பன்னு காத்துட்டு இருக்காவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''புள்ளியியல் துறையில, ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு, ஜூன் 26ல் இடமாறுதல் கவுன்சிலிங் அறிவிச்சாவ... ஆனா, கடந்த வருஷ விண்ணப்ப தேதி அடிப்படையில், சீனியாரிட்டி பட்டியலை அறிவிச்சது, அலுவலர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திட்டு வே...
''இதனால, இந்த வருஷ சீனியாரிட்டிப்படி பட்டியல் தயார் செஞ்சாவ... இது, ஏற்கனவே கவுன்சிலிங்கை எதிர்பார்த்து காத்திருந்த அலுவலர்களுக்கு ஏமாற்றத்தை தந்துட்டு வே...
''இதனால, அவங்க போராட்டத்தில் ஈடுபட, கவுன்சிலிங்கையே ரத்து பண்ணிட்டாவ... 'மறு தேதி பின்னர் வெளியிடப்படும்'னு அறிவிச்சு, ரெண்டு மாசம் ஓடிட்டு...''இன்னும் தேதியை அறிவிக்கல... 'சீக்கிரமா கவுன்சிலிங் நடத்தணும்'னு கேட்டுட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''சும்மா நிறுத்தி வச்சிருக்கிற ஜீப்களை எங்களுக்கு தரலாமேன்னு புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தமிழ்நாடு நீர்வடி பகுதி மேலாண்மை முகமையின் கீழ், எட்டு மாவட்டங்கள்ல மட்டும் நீர்வடிநில பகுதிகளில் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்தினாங்க...''இந்த திட்டத்தை கவனிச்ச வேளாண் துணை இயக்குனர்களுக்கு தனியா ஜீப்கள் குடுத்திருந்தாங்க... திட்டம் மார்ச் மாதம் முடிஞ்சதும், அந்த ஜீப்களை சும்மாவே நிறுத்தி வச்சிருக்காங்க...
''இந்த ஜீப்களுக்கு நியமிக்கப்பட்ட தற்காலிக டிரைவர்களையும் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க... இப்ப, துணை இயக்குனர்கள் மாவட்ட அளவுல விவசாயிகள் நிலங்களை ஆய்வு பண்ண, சொந்த வாகனம் அல்லது பஸ்கள்ல தான் பயணிக்கிறாங்க...
''இதுக்கு தனியா, 'அலவன்ஸ்' எதுவும் கிடையாதுங்க... இதனால, 'சும்மா நிறுத்தி வச்சிருக்கிற ஜீப்கள், நாளடைவுல கண்டமாகிடும்... வேளாண், தோட்டக்கலை, துணை இயக்குனர்களுக்கு
மட்டும் தனியா ஜீப் குடுத்திருக்காங்க... டி.ஆர்.ஓ., நிலையில் உள்ள எங்களுக்கு இந்த ஜீப்களை ஒதுக்கலாமே'ன்னு நுண்ணீர் பாசன திட்ட துணை இயக்குனர்கள் புலம்புறாங்க...''என முடித்தார்,அந்தோணிசாமி.
பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.