/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
இடமாறுதல் போட்டும் அசையாத அதிகாரிகள்!
/
இடமாறுதல் போட்டும் அசையாத அதிகாரிகள்!
PUBLISHED ON : பிப் 26, 2025 12:00 AM

''பழனிசாமியை அழைச்சு மாநாடு நடத்தப் போறாரு வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழகத்துல, வணிகர்கள் பல்வேறு அமைப்புகளா பிரிஞ்சு கிடக்காங்கல்லா... இதுல, விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர், மே 5ம் தேதி வணிகர் தினத்தன்று விருதுநகர் மாவட்டம், சாத்துார்ல மாநாடு நடத்த இருக்காவ வே...
''இதுல, முதல்வர் ஸ்டாலின் கலந்துக்க இருக்காரு... இந்த சூழல்ல, அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கிற பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், தென் மாவட்டங்கள்ல இருக்கிற நாடார் சமுதாயத்தினர் ஓட்டுகளை, அ.தி.மு.க., அணிக்கு திரட்ட களம் இறங்கி இருக்காரு வே...
''முதல் கட்டமா, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்புல, சென்னை வண்டலுார்ல மே 5ம் தேதி வணிகர் தின மாநாட்டை நடத்தி, அதுல அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை பங்கேற்க வைக்க இருக்காரு...
''அதுலயே, வணிகர்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர்றதா பழனிசாமியை வாக்குறுதி அளிக்க வைக்கவும் முடிவு பண்ணியிருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''கட்சி பணிகள்ல தீவிரம் காட்டாம இருக்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலரா, 'மாஜி' அமைச்சரான பாலகிருஷ்ண ரெட்டி இருக்காரு... கட்சிப் பணிகளை விட, தன் சொந்த வேலைகளுக்கு தான் முக்கியத்துவம் தர்றாருங்க...
''தி.மு.க., வசம் இருக்கிற ஓசூர் மாநகராட்சியில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்குது... இதை பத்தி எல்லாம் பாலகிருஷ்ண ரெட்டி வாயே திறக்க மாட்டேங்கிறாருங்க...
''பொறுப்பான எதிர்க்கட்சி என்ற முறையில, இதை கண்டிச்சு ஆர்ப்பாட்டம் எதையும் நடத்தலைங்க... இதனால, கட்சித் தொண்டர்களும் சோர்ந்து போயிருக்காங்க...
''தீபாவளி, பொங்கல் மாதிரியான பண்டிகை நாட்கள்ல, தி.மு.க., நிர்வாகிகளுக்கு மாவட்டச்செயலர்கள் தரப்புல இருந்து ரொக்கம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கி, கட்சியினரை உற்சாகப்படுத்துறாங்க... ஆனா, அ.தி.மு.க., மாவட்டச் செயலர், கட்சித் தொண்டர்களை கண்டுக்கிறதே இல்லைங்க...
''இதனால, பாலகிருஷ்ண ரெட்டிகட்டுப்பாட்டுல இருக்கிற ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதி அ.தி.மு.க.,வினர் மந்தமா இருக்காங்க... 'இப்படியே இருந்தா சட்டசபை தேர்தலை எப்படி சந்திக்கிறது'ன்னு புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''இடமாறுதல் போட்டும், யாரும் போகல பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
''எந்த துறையில ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''சென்னை மாநகராட்சியில், ஒரே இடத்துல நாலு வருஷத்துக்கு மேல பணியாற்றிய உதவி மற்றும் இளநிலை பொறியாளர்களை கடந்த 13ம் தேதி வேறு இடங்களுக்கு மாத்தினாங்க... இப்படி, 55 பேரை இடமாற்றம் செஞ்சாங்க பா...
''அதேபோல, குடிநீர்மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திலும் கடந்த 10ம் தேதி, 47 பேருக்கு இடமாறுதல் போட்டாங்க... ஆனா, இதுல பலரும் தங்களுக்கு தெரிஞ்ச ஆளுங்கட்சி புள்ளிகள், அதிகாரிகளை பிடிச்சு, இடமாறுதல் போட்ட இடத்துக்கு போகாம, பழைய இடங்கள்லயே பணியில நீடிக்கிறாங்க...
''இதனால, அவங்க இடங்களுக்கு நியமிக்கப்பட்டவங்க, பொறுப்பேற்க முடியாம தவிக்கிறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

