/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சிறை காவலர்களுக்கு வார விடுப்பு மறுக்கும் அதிகாரி!
/
சிறை காவலர்களுக்கு வார விடுப்பு மறுக்கும் அதிகாரி!
சிறை காவலர்களுக்கு வார விடுப்பு மறுக்கும் அதிகாரி!
சிறை காவலர்களுக்கு வார விடுப்பு மறுக்கும் அதிகாரி!
PUBLISHED ON : ஏப் 02, 2024 12:00 AM

''எம்.எல்.ஏ.,வை சைக்கிள்ல, 'டபுள்ஸ்' ஏத்திட்டு வந்துட்டாருங்க...'' என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''யாருவே அது...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''த.மா.கா.,வுக்கு மூப்பனார் காலத்துல தரப்பட்ட சைக்கிள் சின்னம், திரும்ப கிடைச்சிருக்கே... இதுல, வாசன் ரொம்பவே உற்சாகமாகிட்டாருங்க...
''சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா., தலைமை அலுவலகம் முன்னாடி, வாசன் சைக்கிள் ஓட்டி, பல கோணங்கள்ல போட்டோ ஷூட் எடுத்தாரு... இதை, பிரசார போஸ்டர்கள், பேனர்களுக்கு பயன்படுத்த இருக்காங்க...
''ஈரோடு லோக்சபா தொகுதி த.மா.கா., வேட்பாளர் விஜயகுமாரும், மனு தாக்கல் பண்ண சைக்கிள்லயே போயிருக்காருங்க... கூடவே போன, த.மா.கா., பொதுச் செயலரான, 'மாஜி' எம்.எல்.ஏ., விடியல் சேகர் தன் சைக்கிள்ல, கூட்டணி கட்சியான பா.ஜ.,வின் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.,வை டபுள்ஸ் ஏத்திட்டு, கலெக்டர் ஆபீஸ்ல ஜம்முன்னு போய் இறங்கினாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''வாட்டர் மீட்டர் வாங்கியே ஆகணும்னு சொல்லுதாவ வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''தமிழகத்துல இருக்கிற பேரூராட்சிகள்ல குடிநீர் வினியோகிக்க, ஏற்கனவே, 'வாட்டர் மீட்டர்' பயன்பாட்டுல இருக்கு... குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், அந்தந்த பேரூராட்சிகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரின் அளவை, இந்த மீட்டர் உதவியுடன் கணக்கு எடுப்பாவ வே...
''இந்த சூழல்ல, கோவை மாவட்டத்துல இருக்கிற ஒவ்வொரு பேரூராட்சியும் கட்டாயம், 10 வாட்டர் மீட்டர்கள் வாங்கணும்னு ஒரு வாய்மொழி உத்தரவு வந்திருக்கு... ஒரு வாட்டர் மீட்டருக்கு, 1.25 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செஞ்சிருக்காவ வே...
''பொதுவா இதுபோன்ற பொருட்களை வாங்க, பேரூராட்சி மன்றத்துல கவுன்சிலர் கள் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேத்தணும்... ஆனா, மன்ற கூட்டங்கள்ல ஒப்புதல் பெறாமலே இப்படி கொள்முதல் பண்ணியிருக்கிறதால, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் இதை விவாதமாக்க தயாராகிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''வார லீவுக்கு ஏங்கறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
''பொதுவா, போலீசார் தான் வார லீவ் இல்லாம வேலை பார்ப்பாங்க... நீங்க யாரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திருச்சி மத்திய சிறையில், 140க்கும் மேற்பட்ட இரண்டாம் நிலை காவலர்கள் பணியில இருக்கா... தமிழகத்தின் மற்ற ஜெயில்கள்ல இருக்கற இரண்டாம் நிலை காவலர்களுக்கு வார லீவ் குடுக்கறா ஓய்...
''ஆனா, கடந்த ரெண்டு வருஷமா திருச்சி காவலர்களுக்கு மட்டும் லீவே தர்றது இல்ல... கேட்டதுக்கு, சிறை பெண் அதிகாரி, 'இரண்டாம் நிலை காவலர்களுக்கு வார விடுமுறை குடுக்க முடியாது'ன்னு கண்டிப்பாவே சொல்லிட்டாங்க ஓய்...
''இதுபோக, அவங்களுக்கான சொந்த லீவ்களை எடுக்கக் கூட பெண் அதிகாரி, 'பர்மிஷன்' தர மாட்டேங்கறாங்க... இதனால, கடும் மன உளைச்சல்ல இருக்கற காவலர்கள், சிறைத் துறை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாளிடம் முறையிட முடிவு பண்ணியிக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

