/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அதிகாரி வீட்டில் சாணம் அள்ளும் போலீசார்!
/
அதிகாரி வீட்டில் சாணம் அள்ளும் போலீசார்!
PUBLISHED ON : மார் 08, 2025 12:00 AM

வெங்காய போண்டாவை கடித்தபடியே, ''காவலாளி தான் விலை நிர்ணயம் பண்ணுதாரு வே...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''என்ன விலையை சொல்றீர்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''கரூர் உழவர் சந்தையின் நிர்வாக அதிகாரியா ஒரு பெண் இருக்காங்க... அதிகாலையே, உழவர் சந்தைக்கு விவசாயிகள் எடுத்துட்டு வர்ற காய்கறிகளுக்கு, இவங்கதான் விலை நிர்ணயம் செய்யணும் வே...
''ஆனா, இவங்க அதிகாலையில் சந்தைக்கு வர்றதே இல்ல... சந்தையின் காவலாளிதான், காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் பண்ணுதாரு வே... பெண் அதிகாரி லேட்டா வந்தாலும், இருந்து வேலையை பார்க்கலாமுல்லா...
''ஆனா, வீட்டுக்கு தேவையான காய்கறிகளை இலவசமா வாங்கிட்டு, வந்த சுருக்குல கிளம்பிடுதாங்க... தலையே இப்படி இருக்கிறதால, உதவி அலுவலர்கள் ரெண்டு பேரும் வந்த சுவடு தெரியாம கிளம்பிடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''பழனிசாமியிடம் கண்ணீர் விட்டு கதறிட்டாரு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''அ.தி.மு.க., உட்கட்சி தேர்தல் நடந்தப்ப, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலர் பதவிக்கு, 'மாஜி' எம்.எல்.ஏ.,வான சி.வி.சேகரும், மதுக்கூர் ஒன்றிய செயலரான துரை செந்திலும் மல்லு கட்டினாங்க...
''அவங்களிடம், கட்சியின் இலக்கிய அணி மாநில துணை செயலர் பட்டுக்கோட்டை சாமிநாதன் சமரசம் பேசி, துரை செந்திலுக்கு அமைப்பு செயலர் பதவியும், சி.வி.சேகருக்கு மாவட்ட செயலர் பதவியும்னு பிரிச்சுக் குடுத்தாரு பா...
''இந்த சூழல்ல, அடுத்த வருஷம் வர்ற சட்டசபை தேர்தல்ல, பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட சி.வி.சேகருக்கும், துரை செந்திலுக்கும் இப்பவேமுட்டல், மோதல் துவங்கிடுச்சு... சி.வி.சேகருக்கு எதிரா துரை செந்தில் செயல்பட்டதை சாமிநாதன் தட்டி கேட்டிருக்காரு பா...
''தனக்கு அமைப்பு செயலர் பதவி வாங்கித் தந்தவர் என்ற நன்றியை மறந்து, சாமிநாதனை அசிங்க அசிங்கமா துரை செந்தில் திட்டி அனுப்பிட்டாரு... நொந்துபோன சாமிநாதன், பழனிசாமியை பார்த்து, நடந்ததை எல்லாம் சொல்லி, கண்ணீர் விட்டு அழுதிருக்காரு...
''அவரும், 'இரு தரப்பையும் விசாரிச்சு, கண்டிப்பா நடவடிக்கை எடுக்கிறேன்'னு ஆறுதல் சொல்லி அனுப்பியிருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''மாடு மேய்க்கற போலீசார் கதை தெரியுமா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அடப்பாவமே... எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''கோவை சிட்டியில இருக்கற உயர் போலீஸ் அதிகாரி, நிறைய மாடுகள் வளர்க்கறார்... அந்த மாடுகளின் பாலை மட்டும்தான் குடிப்பாராம் ஓய்...
''இதனால, அவருக்கு அரசு தந்திருக்கற பங்களாவுலயே அந்த மாடுகளை வச்சு பராமரிக்கறார்... அது, அவரது சொந்த விஷயம்...
''ஆனா, அந்த மாடுகளை குளிப்பாட்டறது, சாணம் அள்றது, தீவனம் போடறது, தொழுவத்தை சுத்தம் பண்றது எல்லாத்தையும் போலீசாரை விட்டு செய்ய வைக்கறார் ஓய்...
''தினமும், 15 முதல் 17 போலீசார் வரை, மாடுகளை பராமரிக்கற வேலைக்கு அவரது பங்களாவுக்கு போறா... 'கெத்தா யூனிபார்ம் போட்டு டியூட்டி பார்க்க வேண்டிய நாங்க, லுங்கி, பனியனுடன் மாடு மேய்ச்சுண்டு இருக்கோம்'னு அவாள்லாம் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெரியவர்கள் பேச்சு முடிய, பெஞ்ச் காலியானது.