தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ அம்பானி பாணியில் புதுக்கோட்டை மணல் பிரமுகர்!

அம்பானி பாணியில் புதுக்கோட்டை மணல் பிரமுகர்!

அம்பானி பாணியில் புதுக்கோட்டை மணல் பிரமுகர்!


PUBLISHED ON : ஆக 25, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 25, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''முன்னாள் அதிகாரிக்கு இன்னும் செல்வாக்கு இருக்குது பா...'' என்ற படியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.

''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''சென்னையில போன 22 மற்றும் 23ம் தேதியில, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் நடந்துச்சு... இது, வழக்கமான ஆலோசனை கூட்டம் தான் பா...

''ஆனா, கல்வித் துறையில உச்ச அதிகாரியா இருந்து ஓய்வு பெற்ற ஒருவரது மகன் திருமணம், 23ம் தேதி சென்னையில நடந்துச்சு... அதுக்கு முதல் நாள் மாலை, அதாவது 22ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திஇருக்காரு பா...

''இதுல, எல்லா அதிகாரிகளும் கலந்துக்கிட்டாங்க... இதுக்கு வசதியாகவே, ஆலோசனை கூட்டத்தை 22 மற்றும் 23ம் தேதிகள்ல கல்வி துறை அதிகாரிகள் ஏற்பாடு பண்ணியதா சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''பெரிய அறிவாளியா இருப்பாங்க போலிருக்கே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சி, ''கல்வெட்டுல பெயர் இல்லாததால, விழாவையே புறக்கணிச்சுட்டாவ வே...'' என்றார்.

''எந்த ஊர் விவகாரம் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''விழுப்புரம் மாவட்ட ஊராட்சி அலுவலக கட்டடம் புதுப்பிக்கப்பட்டு, சமீபத்துல திறப்பு விழாவை தடபுடலா நடத்தினாவ... மாவட்டத்துல அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் உட்பட நாலு தி.மு.க. - எம்.எல்.ஏ.,க்களும், அ.தி.மு.க.,வுக்கு இரண்டு, பா.ம.க.,வுக்கு ஒரு எம்.எல்.ஏ.,வும் இருக்காவ வே...

''ஆனா, திறப்பு விழா கல்வெட்டுல, எம்.எல்.ஏ.,க்கள் யாருடைய பெயரையும் குறிப்பிடாம, அமைச்சர் பொன்முடி, கலெக்டர் பழனி பெயரை மட்டும் போட்டிருக்காவ... குறிப்பா, அமைச்சர் மஸ்தான் பெயரை இருட்டடிப்புபண்ணிட்டதால, கடுப்பான அவரது ஆதரவாளர்களான 12 ஒன்றிய கவுன்சிலர்கள் திறப்பு விழாவை புறக்கணிச்சுட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''அம்பானி மாதிரி வசூல் பண்றார்னு புலம்பறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''தமிழகம் முழுக்க கிராவல் மண் எடுக்கற, 'டெண்டரை' புதுக்கோட்டை மணல் பிரமுகர் எடுத்திருக்கார்... இவர், ஈரோடு, நாமக்கல், சேலம்உள்ளிட்ட மாவட்டங்கள்ல சிலருக்கு உள்குத்தகை விட்டு, 'ராயல்டி' வசூலிக்கறார் ஓய்...

''உள்குத்தகை எடுத்தவா, மாவட்டம் முழுக்க மண் எடுக்கற இடங்கள்ல ஆட்களை போட்டு, ஒரு யூனிட் மண்ணுக்கு, 400 ரூபாய் வசூல் பண்றா... இந்த சூழல்ல, புதுக்கோட்டை பிரமுகர், யூனிட் மண்ணுக்கு 200 ரூபாயை தடாலடியா ஏத்திண்டார் ஓய்...

''இதனால, உள்குத்தகை எடுத்தவாளும், ஒரு யூனிட் மண்ணுக்கு 600 ரூபாய் கேக்கறா... ஆனா, 'உள்ளுர் அரசியல்வாதிகள், அதிகாரிகள், போலீசார்னு நிறைய பேருக்கு மாமூல் தர்றோம்... திடீர்னு ரேட்டை ஏத்தினா எப்படி'ன்னு மண் எடுக்கறவா கேக்கறா ஓய்...

''புதுக்கோட்டை பிரமுகரது மகனுக்கு அடுத்த மாசம் கல்யாணம் நடக்க போறது... அதை தடபுடலா நடத்தவே, ரேட்டை ஏத்திட்டார்னு தகவல்கள் பரவுது... 'அம்பானி மகனுக்கு 5,000 கோடியில் கல்யாணத்தை நடத்திட்டு, மொபைல் கட்டணங்களை ஏத்திய மாதிரி இவரும் ஏத்து றாரே'ன்னு புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

பேச்சு முடிவுக்கு வரவே, பெரியவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us