/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
இருதலை கொள்ளி எறும்பாக ' பில் கலெக்டர் ' கள்!
/
இருதலை கொள்ளி எறும்பாக ' பில் கலெக்டர் ' கள்!
PUBLISHED ON : செப் 15, 2024 12:00 AM

இஞ்சி டீக்கு ஆர்டர் தந்தபடியே, ''அதிகாரிகள், எங்களை மதிக்கிறதே இல்லன்னு குமுறி தள்ளிட்டாருங்க...'' என, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு கிழக்கு ஒன்றியத்துல, சமீபத்துல தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்துச்சு... திருவள்ளூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன் உட்பட பலரும் கலந்துக்கிட்டாங்க...
''இதுல, திருவாலங்காடு ஒன்றிய கவுன்சிலர்தினகரன் பேசுறப்ப, 'அதிகாரிகள் யாரும் நம்ம கட்சியினரை மதிக்கிறதே இல்ல... கனவு இல்லம் திட்டத்துல, நிறைய பேருக்கு எம்.எல்.ஏ., ஒதுக்கீடு உத்தரவு தந்தாரு... அதுல, நம்ம கட்சியினர் கம்மி தான்... நிறைய பேர் மாற்று கட்சியினர் தான்...
''கூட்டுறவு நகை கடன் தள்ளுபடியில, நிறைய பயன் அடைஞ்சது அ.தி.மு.க.,வினர் தான்... நம்ம கட்சிக்காரங்களுக்கு பெருசா எதுவும் கிடைக்கல... கட்சிக்காரங்க வந்து, உதவி கேட்டா எங்களால எதுவும் செய்ய முடியல... ஏன்னா, அதிகாரிகள் எங்களை மதிக்கிறதே இல்லை... அதிகாரிகளிடம் பேசி, நம்மாளுங்க வந்தா, ஏதாவது செஞ்சு குடுக்க சொல்லுங்க'ன்னு பொரிஞ்சு தள்ளிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''மக்கள் நலப்பணிகளை கிடப்புல போட்டுட்டாவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த துறையில ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், மத்திய அரசின் நிதி பங்களிப்புடன், தமிழகம் முழுக்க குடிநீர் திட்ட பணிகள், நீர்நிலைகள் சீரமைப்பு, கழிவுநீர் இணைப்பு பணிகள் நடக்குல்லா... சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார் பேரூராட்சியில் மட்டும் இந்த திட்ட பணிகள் முடங்கி கிடக்கு வே...
''ஏன்னா, இந்த பேரூராட்சி அதிகாரிகள், இதுல குறிப்பிட்ட சதவீதம் கமிஷன் எதிர்பார்க்குறாங்க... இதனால, மழைக்காலம் துவங்குறதுக்குள்ள முடிக்க வேண்டிய பணிகள் ஆமை வேகத்துல நடக்கு...
''அக்டோபர்ல பருவமழை துவங்குறதுக்குள்ள இந்த பணிகளை முடிக்கணும்னு, கலெக்டருக்கு உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''இருதலை கொள்ளி எறுப்பா தவிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாருவே அது...'' என கேட்டார், அண்ணாச்சி.
''கோவை மாநகராட்சியின், 100 வார்டுகளிலும்வரி வசூலை தீவிரப்படுத்துமாறு கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவு போட்டிருக்கார்... அடிக்கடி மீட்டிங் போட்டு, 'பில் கலெக்டர்'களை முடுக்கிவிடறார் ஓய்...
''குறிப்பா, 'டொமஸ்டிக்' பெயர்ல, 'கமர்ஷியலா' இயங்கற விதிமீறல் கட்டடங்களை கண்டுபிடிச்சு, வரியை கறாரா வசூல் பண்ணும்படி சொல்லியிருக்கார்... ஆனா, இந்த விதிமீறல் கட்டடங்களுக்கு வரி வசூலிக்க போனா, ஏரியா கவுன்சிலர்கள், ஆளுங்கட்சி பிரமுகர்கள் முட்டுக்கட்டை போட்டு, பில் கலெக்டர்களை மிரட்டறா...
''இதனால, கமிஷனர் உத்தரவுக்கு பயப்படறதா அல்லது ஆளுங்கட்சியினருக்கு அடங்கி போறதான்னு தெரியாம, பில் கலெக்டர்கள் முழியா முழிக்கறா ஓய்...'' என முடித்தார்,குப்பண்ணா.
பெஞ்சில் புதியவர்கள் இடம் பிடிக்க, பெரியவர்கள் கிளம்பினர்.