/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
242 இடங்களில் 8 பேர் கூட தேறாத இடஒதுக்கீடு!
/
242 இடங்களில் 8 பேர் கூட தேறாத இடஒதுக்கீடு!
PUBLISHED ON : மார் 13, 2025 12:00 AM

ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''பதில் நோட்டீஸ் குடுத்துட்டாரு பா...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாருக்கு ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''அதாவது, சசிகலா கால்ல அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுந்தார்னு, 'மாஜி' அமைச்சர் பொன்னையன் சொன்னதா, அ.தி.மு.க., ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளரான பெங்களூரு புகழேந்தி சமீபத்துல பேசியிருந்தாரு...
''இதனால கடுப்பான சண்முகம் தரப்பு, புகழேந்திக்கு அவதுாறு வழக்கு நோட்டீஸ் அனுப்பிடுச்சு பா...
''புகழேந்தியும், தன் வக்கீல் மூலமா சண்முகத்துக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியிருக்காரு... அதுல, 'சசிகலா காலில் சண்முகம் விழுந்ததற்கு ஆதாரம் இருக்கு...
''இது சம்பந்தமா, கன்னியாகுமரி அ.தி.மு.க., நிர்வாகி கோலப்பனிடம் பொன்னையன் பேசிய ஆடியோ பதிவுகள் ஊடகங்கள்ல வெளியானது... அதனால, சண்முகம் நோட்டீசை வாபஸ் பெறணும்...
''இல்லன்னா, நானும் சட்டப்படி சந்திக்கிறேன்'னு பதிலடி குடுத்திருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''தொகுதிக்கு தொடர்பு இல்லாதவருக்கு பதவியான்னு குமுறிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த கட்சியிலங்க...'' என விசாரித்தார், அந்தோணிசாமி.
''தி.மு.க.,வில், சமீபத்துல சில புதிய மாவட்டங்களை உருவாக்கி, பொறுப்பாளர்களை போட்டாளோல்லியோ... இதுல உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி, திருப்பூர் தெற்கு மாவட்டத்தை உருவாக்கி, இதன் பொறுப்பாளரா பத்மநாபன்னு ஒருத்தரை நியமிச்சிருக்கா ஓய்...
''இவர், தாராபுரம் தொகுதியை சேர்ந்தவர்... திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலராகி, இப்ப மண்டலக் குழு தலைவராகவும் இருக்கார் ஓய்...
''இதனால, 'நம்ம உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில மாவட்ட பொறுப்பாளருக்கு ஒருத்தர் கூட தேறலையா... தாராபுரம் தொகுதியில் இருந்து இறக்குமதி பண்ணியிருக்காளே'ன்னு உடன்பிறப்புகள் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''முன்னேறிய சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு எட்டாக்கனியாவே இருக்கு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''நகராட்சி நிர்வாகத் துறை சார்புல, 781 உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடந்துச்சு... அடுத்து, 'ரேங்க் லிஸ்ட்' வெளியாகி, கவுன்சிலிங் நடத்தி, மூணே நாள்ல பொது பட்டியல்ல இருந்த காலியிடங்களை நிரப்பிட்டாவ வே...
''இதுல, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவுகளை சேர்ந்தவங்களே நிறைய பேர் தேர்வாகியிருக்காவ... அதே சமயம் பிராமணர், முதலியார், பிள்ளை போன்ற 10க்கும் மேற்பட்ட முன்னேறிய சமூகங்களை சேர்ந்தவங்கள்ல எட்டு பேர் கூட தேர்வாகல வே...
''அதாவது, 'மொத்த பணியிடங்கள்ல, 1 சதவீதம் கூட முன்னேறிய சமூகத்துக்கு கிடைக்கல... தமிழகத்தில் அமல்ல இருக்கிற, 69 சதவீத இடஒதுக்கீடு போக, மீதியுள்ள 31 சதவீத இடங்கள்னு கணக்கு போட்டு பார்த்தாலும், 242 இடங்கள்ல முன்னேறிய சமூகத்தினர் தேர்வாகி இருக்கணும்...
''ஆனா, வெறும் எட்டு பேர் கூட தேர்வாகலைன்னா இது என்ன சமூக நீதி'ன்னு இந்த சமூகத்தினர் புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''எல்லாருக்கும் எல்லாம்னு அடிக்கடி சொல்ற நம்ம முதல்வர்தான் இதுக்கு பதில் தரணும் பா...'' என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.