/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
புதுச்சேரி ' சரக்கு ' விற்கும் ஆளுங்கட்சி பெண் நிர்வாகி!
/
புதுச்சேரி ' சரக்கு ' விற்கும் ஆளுங்கட்சி பெண் நிர்வாகி!
புதுச்சேரி ' சரக்கு ' விற்கும் ஆளுங்கட்சி பெண் நிர்வாகி!
புதுச்சேரி ' சரக்கு ' விற்கும் ஆளுங்கட்சி பெண் நிர்வாகி!
PUBLISHED ON : பிப் 15, 2025 12:00 AM

''மானியத்துல கமிஷன் வாங்கிட்டு போயிட்டாங்க பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.
''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார்,அந்தோணிசாமி.
''பொங்கல் பண்டிகைக்காக, தலா 1.17 கோடி இலவச வேட்டி, சேலைகள் உற்பத்திக்கு திட்டமிட்டாங்க... நிதி ஒதுக்கீடு தாமதமாகி, பெரும்பாலான ஊர்கள்ல இன்னும் பயனாளிகளுக்கு வேட்டி, சேலைகள் கிடைக்கல பா...
''கைத்தறி மற்றும் துணிநுால் துறை இயக்குநரா இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சண்முகசுந்தரம், திட்டத்தை நேர்மையா அமல்படுத்த முயற்சி எடுத்தார்... 'கைத்தறிகளுக்கு மத்திய அரசு வழங்கும் மானியத்தில், யாருக்கும் கமிஷன் தர வேண்டாம்'னு உற்பத்தியாளர்களிடம் சொன்னாரு பா...
''அதுவும் இல்லாம, தரமில்லாத 13 லட்சம் வேட்டிகளை கண்டுபிடிச்சு, அதை வழங்க தடை போட்டு, அந்த வேட்டிகளை கிடங்குல வச்சும் பூட்டிட்டாரு... இதனால, இந்த திட்டத்துல கமிஷன் அடிக்க நினைச்ச பலரது கனவும் கலைஞ்சிடுச்சு பா...
''வேற வழியில்லாம, ரெண்டு வாரத்துக்கு முன்னாடி சண்முகசுந்தரத்தை மாத்திட்டாங்க... அந்த இடத்துக்கு புது அதிகாரியை, நாலு நாளைக்கு முன்னாடி தான் நியமிச்சாங்க பா...
''இயக்குநர் இல்லாம இருந்த நாட்கள்ல, தரமில்லாத 13 லட்சம் வேட்டிகளை, மற்ற வேட்டிகளுடன் கலந்து வினியோகிக்க ஏற்பாடு பண்ணிட்டாங்க...
''அதுவும் இல்லாம, 'மத்திய அரசு மானியத்துல கமிஷன் தந்தால் தான், இலவச வேட்டி, சேலைக்கான தொகையும், கூலியும் விடுவிக்கப்படும்'னு அந்தந்த கூட்டுறவு சங்கங்களை மிரட்டி, பெரும் தொகையை அதிகாரிகள் கறந்துட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''கலெக்டர் உத்தரவு போட்டும் பலன் இல்ல வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்டம், தெக்கலுார் பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாய குடும்பத்தினர், இறந்து போன தந்தையின் பெயரில் இருந்த நிலத்துக்கு பட்டா மாறுதல் கேட்டு, வருவாய்த் துறைக்கு விண்ணப்பிச்சாவ... சம்பந்தப்பட்ட ஏரியா வி.ஏ.ஓ.,வை, 'கவனிக்காததால' அவர் இழுத்தடிச்சாரு வே...
''இதனால, அந்த குடும்பத்தினர் கலெக்டரின் குறைதீர் முகாமில் மனு குடுத்தாவ... அப்புறமா, வேற வழியில்லாம பட்டாவை ரெடி பண்ணி குடுத்தாவ வே...
''ஆனா, அதுல இறந்து போனவர் பெயரையும் சேர்த்து, கூட்டுப் பட்டாவா குடுத்துட்டாவ... இப்ப, அவரது பெயரை நீக்கம் செய்ய அந்த குடும்பம் அலைஞ்சிட்டு இருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
''புதுச்சேரி சரக்கை விக்கறாங்க ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''சென்னை, ஆயிரம் விளக்கு பகுதி தி.மு.க., மகளிர் அணி நிர்வாகி, சுதந்திர நகர் குடியிருப்பு பகுதியில், ராத்திரி 11:00 மணி முதல் மறுநாள் மதியம் 12:00 மணி வரை புதுச்சேரி மது பாட்டில்களை விற்பனை பண்றாங்க ஓய்...
''இந்த நிர்வாகியின் வெள்ளை ஸ்கார்பியோ கார்ல தான், புதுச்சேரியில் இருந்து, 'சரக்கு' வரது... இவரின் தம்பியும், அவரது கூட்டாளியும், ஆளுங்கட்சி இளைஞரணி பொறுப்புல இருக்கா... இவாதான், 'பர்சேஸ்' பார்த்துக்கறா ஓய்...
''இங்க விக்கற சரக்கு களை, பக்கத்துல இருக்கற விளையாட்டு மைதானத்துல வச்சு குடிக்கறவா, அந்த வழியா போற பொம்மனாட்டிகளிடம் வம்பிழுக்கறா... 'பெண் நிர்வாகி மீது போலீசார் நடவடிக்கை எடுத்தால் தான், பெண்கள் நிம்மதியா நடமாட முடியும்'னு அந்த பகுதி மக்கள் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

