PUBLISHED ON : மே 13, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
வெப்பம்
சுட்டெரிக்கிறது. மின்சார பயன்பாடு அதிகரிக்கிறது. மின் கட்டணம் கூடுகிறது.
மாதாந்திர மின் பயன்பாடு கணக்கெடுப்புக்கு பதில், இரண்டு மாதங்களுக்கு ஒரு
முறை கணக்கிடுவதால், அடுக்கு கட்டண முறையால், யூனிட் கணக்குப்படி கூடுதல்
கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை சுங்க வரி
வசூலை, 'வழிப்பறி' என்று வர்ணிக்கும் தி.மு.க., ஆட்சியாளர்கள், மின் கட்டண
கொள்ளை குறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை.
அ.தி.மு.க., ஆட்சியிலும் அப்படி தானே இருந்தது... நீங்களே மாதாந்திர கணக்கெடுப்பு முறையை கொண்டு வந்திருக்கலாமே!
ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யா அறிக்கை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒன்பது லட்சம் மாணவர்கள் எழுதியதில், 91.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தமிழ் பாடத்தில் வெறும் எட்டு பேர் மட்டுமே முழு மதிப்பெண் எடுத்துள்ளனர். லட்சத்தில் ஒருவர் கூட முழுமையாக தேர்ச்சி பெறவில்லை என்பது கவலைக்குரியது. இது யார் குற்றம்? திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்வர், இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழை வைத்து அரசியல் செய்யும் தலைவர்கள் யோசிக்க வேண்டிய விஷயம்!
த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை: பட்டாசு தொழிலில் இருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய், அரசுக்கு வரி வருவாயாக வருகிறது. இவையெல்லாம் அந்த தொழிலாளர்களின் ரத்தம் சிந்தும் உழைப்பால் கிடைத்தது. தொழிலாளர்களின் நலன் மட்டுமே முக்கியம் என செயல்பட்டு, இனி வரும் காலங்களில் ஒரு நல்ல கட்டமைப்புடன் கூடிய பட்டாசு தொழிற்பேட்டையை உருவாக்க வேண்டும்.
ஒவ்வொரு முறை பட்டாசு ஆலை விபத்து ஏற்படும் போதும் மனம் உடைவது பாமரன் தானே தவிர, அரசு அல்ல!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரியலுார் மாவட்டம் முதலிடத்தை பிடித்திருப்பதும், முதல் முறையாக விழுப்புரம், 10வது இடத்தை பிடித்திருப்பதும் மகிழ்ச்சி. ஆனாலும், இதை விதிவிலக்காகவே பார்க்க வேண்டிஉள்ளது. இந்த ஆண்டும் வடக்கு மாவட்டங்கள் தான் கடைசி இடங்களை பிடித்துள்ளன என்பது கவலையும், வருத்தமும் அளிக்கிறது.
வட மாவட்டங்களில் கோலோச்சும் அரசியல் கட்சிகளுக்கு இதில் பங்கில்லையா?