/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அரசு விடுதியில் போதையில் மிதக்கும் மாணவர்கள்!
/
அரசு விடுதியில் போதையில் மிதக்கும் மாணவர்கள்!
PUBLISHED ON : ஏப் 30, 2024 12:00 AM

''கரை வேட்டிகள் தொல்லை தாங்க முடியலைங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''மதுரை தல்லாகுளத்தில், முதன்மை கல்வி அலுவலக வளாகம் இருக்குதுங்க... இதுலயே இடைநிலை, தொடக்க, தனியார் பள்ளி டி.இ.ஓ.,க்கள் மற்றும் ஒருங்கிணைந்த கல்வி திட்ட அலுவலகங்களும் செயல்படுதுங்க...
''இங்க, சமீபகாலமா ஆளுங்கட்சி புள்ளிகள் நடமாட்டம் அதிகமாக இருக்குதுங்க... 'எங்களுக்கு அமைச்சரை தெரியும், மாவட்ட செயலர்களை தெரியும்... அவங்க தான், உங்களை பார்க்க சொன்னாங்க'ன்னு அதிகாரிகளிடம் வர்றாங்க...
''அப்படியே குறிப்பிட்ட சில மெட்ரிக் பள்ளிகள்ல அட்மிஷன் வேணும்னு பெரிய லிஸ்டை எடுத்து நீட்டுறாங்க... அதிகாரிகள் மறுத்தா, 'உங்களை பத்தி உயர் அதிகாரிகளுக்கு பெட்டிஷன் அனுப்ப வேண்டி வரும்'னு மிரட்டுறாங்க...
''போன வாரம், தனியார் பள்ளி டி.இ.ஓ., அலுவலகத்தில் இருந்த பெண் எழுத்தரிடம், புல் போதையில வந்த ஒருத்தர், தன்னை ஆளுங்கட்சி கூட்டணி கட்சியின் மாவட்ட செயலர்னு சொல்லியிருக்காருங்க... அதோட, 'வர்ற வழியில், பெட்ரோல் இல்லாம கார் நின்னுடுச்சு... பெட்ரோல் போட 5,000 ரூபாய் தாங்கம்மா'ன்னு ரகளை பண்ணியிருக்காருங்க...
''அவங்க பயந்து போய், உயர் அதிகாரிகளுக்கு போன் பண்ணி சொல்ல, அவங்களும் மொபைல் போன்ல சமாதானம் பேசி, அவரை அனுப்புறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''சதுர அடிக்கு கணக்கு போட்டு கட்டிங் வசூலிக்கிறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துல ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... இவங்க, 'பில்டிங் சர்வேயர் லைசென்ஸ்' வச்சிருக்கிற ஒருத்தரை உதவியாளரா நியமிச்சு, பிளான் அப்ரூவலுக்கு சதுர அடிக்கு 10 ரூபாய் வீதம் வசூல் செய்றாங்க பா...
''அந்த உதவியாளர் பார்த்து டிக் அடிக்கிற பைல்கள்ல மட்டும் தான் கையெழுத்து போடுறாங்க... பணம் தராத பைல்களை ஓரமா வச்சுடுறாங்க பா... வடக்கு மண்டலத்துல மட்டும் இப்படி, 400க்கும் மேற்பட்ட பைல்கள் பெண்டிங்குல கிடக்குது... இதனால, மாநகராட்சிக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுது பா...'' என்றார், அன்வர்பாய்.
ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''சத்யா மேடமா... சுரேந்திரன் சாயந்தரம் பணம் கொண்டு வருவார்...'' எனக் கூறி, 'கட்' செய்தபடியே, ''படிக்கற பசங்க போதையில மிதக்கறா ஓய்...''என்றார்.
''அடப்பாவமே... எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
'''தமிழக அரசு எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சென்னை, தரமணியில இருக்கோல்லியோ... இதுல படிக்கற மாணவர்கள் தங்கறதுக்கு அரசு சார்புல அங்கயே விடுதியும் இயங்கறது ஓய்...
''இங்க தங்கறதுக்கு வருஷத்துக்கு, 1,000 ரூபாய் மட்டும் தான் வசூலிக்கறா.... இங்க தங்கியிருக்கற மாணவர்கள் பலர், ரெகுலரா வகுப்புகளுக்கு வரது இல்ல ஓய்...
''அதுவும் இல்லாம, பல மாணவர்கள் எப்பவும் போதையிலயே மிதக்கறா... இவாளால, ஒழுக்கமான மாணவர்களுக்கும் இடைஞ்சலா இருக்கு... ஆசிரியர்கள் போய், வகுப்புகளுக்கு வரும்படி கூப்பிட்டாலும், அவாளை திட்டி மிரட்டி அனுப்பிடறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

