/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அரசுக்கு எதிராக களம் இறங்கும் ஆசிரியர்கள்!
/
அரசுக்கு எதிராக களம் இறங்கும் ஆசிரியர்கள்!
PUBLISHED ON : மார் 02, 2025 12:00 AM

''திருப்பூர் பேரை கெடுக்க, 'ரூம்' போட்டு யோசிக்காவ வே...'' என்றபடியே இஞ்சி டீயுடன் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யார் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''திருப்பூரில், பனியன் துணி மொத்த வர்த்தகம் செய்யுற, 'வால்ரஸ் இன்டர்நேஷனல்' என்ற நிறுவனம் இருக்கு வே... ஆரம்பத்தில் இருந்தே, ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்கு இவங்க பாராட்டு தெரிவிச்சிட்டு வர்றாவ...
''இவங்களை காலி பண்ண நினைச்ச யாரோ, இந்த நிறுவனத்தின், 'லெட்டர் பேடு' மாதிரியே போலியா தயாரிச்சு, ஜவுளி தொழிலில் வரி கட்டாம ஏமாத்துற நிறுவனங்களின் பட்டியலை, பிரதமர் ஆபீசுக்கு அனுப்பி வச்சிட்டாவ...
''வட மாநிலங்களில் இருக்குற சில பிரபல ஜவுளி நிறுவனங்களுக்கும் அனுப்பிட்டாவ... இந்த லெட்டர், சமூக வலைதளங்கள்ல பரவினதால, ஜவுளி துறை முழுதும் இப்ப இதுதான் பேச்சு...
''நாடு பூரா வியாபாரம்செய்யுற திருப்பூர்காரங்க பேரை கெடுக்க இப்படியொரு சதி நடக்கேன்னு கவலைப்படுதாவ... ஆனா, இது ஒரு, 'டுபாக்கூர்' கடுதாசின்னு போலீசு உறுதி செஞ்சிடுச்சு... கொஞ்சம் உஷாரா இல்லேன்னா, ஜோலிய முடிச்சிடுவாங்க போலிருக்கே...'' என்றார் அண்ணாச்சி.
''மோசடி செஞ்சு மாட்டி, ஜெயிலுக்கு போயும், பதவியைமட்டும் பறிக்கலியேன்னு கட்சிக்காரங்க புலம்புறாங்க பா...'' என, அடுத்த தகவலைஆரம்பித்தார் அன்வர் பாய்.
''எந்த கட்சியிலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''காஞ்சிபுரம் மாநகர தெற்கு பகுதி, அ.தி.மு.க., செயலரா இருக்குறவரு, 'கோல்டு' ரவி... இவரு நில மோசடியில ஈடுபட்டதா புகார் வந்துச்சு பா...
''போலீஸ் விசாரணையில, வேளச்சேரியில பல சொத்துக்களை போலி ஆவணம் தயாரிச்சு, 'ஆட்டை'ய போட்டது தெரிஞ்சு போச்சாம்... பார்ட்டி இப்ப சைதாப்பேட்டை ஜெயிலில் களி தின்றாரு...
''கட்சி பேரை, 'டேமேஜ்' செஞ்ச, 'கோல்டு' மேல பொதுச்செயலர் பழனிசாமி, 'போல்டா' ஏன் நடவடிக்கை எடுக்க மாட்டேங்குறாருன்னு காஞ்சி நிர்வாகிகள் கடுப்புல இருக்காங்க பா...'' என்றார் அன்வர் பாய்.
''தேர்தல் வரட்டும், அப்ப இருக்கு கச்சேரின்னு காத்துண்டு இருக்கா ஓய்...'' என்ற படியே, 'பில்டர்' காபியை ஒரு மடக்கு குடித்தார் குப்பண்ணா.
''விலாவாரியா சொல்லும் வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''தமிழக பள்ளிகள்ல, ஓவியம், தையல், உடற் கல்விக்கு, 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் வேலை பார்த்துண்டு இருக்கா... இவாளுக்கு மாசம், 12,500 ரூபாய் சம்பளம்...
''வேலையை நிரந்தரம் பண்ணுங்கோன்னு, 13 வருஷமா போராடிண்டு இருக்கா... 'நாங்க ஆட்சிக்கு வந்ததும் செஞ்சுடுவோம்'னு தி.மு.க., வாக்குறுதி அளிச்சது... இதோ, அஞ்சு வருஷமே முடியப் போறது, ஒண்ணும் நடக்கலயாம் ஓய்...
''அடுத்த வருஷம் தேர்தல் வருதோல்லியோ... அப்ப தி.மு.க.,வை, 'வெச்சு செய்ய' பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு பண்ணிருக்காளாம்... அரசுக்கு எதிரா தொடர் போராட்டங்களையும், மறைமுக பிரசாரத்தையும் துவக்க போறாளாம் ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, பெரியவர்கள் புறப்பட்டனர்.