/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தமிழ் தெரியாத கலெக்டரால் தள்ளாடும் நிர்வாகம்!
/
தமிழ் தெரியாத கலெக்டரால் தள்ளாடும் நிர்வாகம்!
PUBLISHED ON : ஆக 06, 2024 12:00 AM

''டாஸ்மாக் மது கூடங்கள்லயே கஞ்சாவும், குட்காவும் கிடைக்குல்லா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''அநியாயமா இருக்கே... எந்த ஊர்ல ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பக்கம் காரணை புதுச்சேரி பிரதான சாலையில், டாஸ்மாக் மதுபான கடை இருக்கு... பக்கத்துல இருக்கிற மதுக் கூடத்துல, சர்வ சாதாரணமா குட்காவும், கஞ்சாவும் விற்பனை செய்யுதாவ வே...
''கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரம் அடுத்துள்ள தைலாவரம் ஈ.வி.பி., பத்மாவதி அவென்யூல இருக்கிற மது கூடத்துலயும் கஞ்சா, குட்கா பொருட்கள் விற்பனை சக்கை போடு போடுது... கஞ்சா பொட்டலத்தை 250, குட்காவை 50 ரூபாய்க்கு விற்பனை செய்யுதாவ வே...
''சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு போகும் லாரி டிரைவர்கள், இந்த பொட்டலங்களை வாங்கிட்டு போறாவ... போலீசாருக்கும் மற்ற துறைகளின் அதிகாரிகளுக்கும் கரெக்டா மாமூல் குடுத்துடுறதால, யாரும் கண்டுக்கிறது இல்ல வே...'' என்றார், அண்ணாச்சி.
''கமிஷனை நியாயமா பிரிச்சு குடுத்துடுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''எந்த துறையி லங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''தி.மு.க., அரசை கண்டிச்சு, தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட்ல சமீபத்துல ஆர்ப்பாட்டம் நடந்துச்சு... இதுல முன்னாள் எம்.எல்.ஏ., முருகன் பேசுறப்ப, 'மாவட்டத்துல நடக்கிற எல்லா ஒப்பந்த பணிகள்லயும் கமிஷன் அடிக்குறாங்க... அதுல, 60 சதவீதம் ஆளுங்கட்சிக்கும், 40 சதவீதம் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வுக்கும் போகுது...
''மாவட்டத்துல அ.தி.மு.க.,வுக்கு மூணு எம்.எல்.ஏ.,க்கள் இருக்காங்க... பாலக்கோடு தொகுதியில், எந்த ஒப்பந்த பணியா இருந்தாலும், அன்பழகன் எம்.எல்.ஏ.,வுக்கு தான் தர்றாங்க... தர்மபுரி எம்.எல்.ஏ., கோவிந்த சாமிக்கு கமிஷன் போயிடுது'ன்னு பொரிஞ்சு தள்ளிட்டாரு... இதுக்கு சம்பந்தப்பட்ட ரெண்டு பேரும் எந்த மறுப்பும், விளக்கமும் தரல பா...'' என்றார், அன்வர்பாய்.
''தமிழ் தெரியாம நிர்வாகம் தள்ளாடுதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''பெரம்பலுார் மாவட்ட புதிய கலெக்டரா, மிசோரம் மாநிலத்தை சேர்ந்த கிரேஸ் பச்சாவ் என்ற அதிகாரியை சமீபத்துல நியமிச்சிருக்காங்க... இவருக்கு தமிழ் சுத்தமா தெரியாதுங்க...
''இதனால, கீழ்மட்ட அதிகாரிகள், பொதுமக்களுடன் இவரால பேச முடியலைங்க... இவருக்கு அனுப்புற பைல்களும் ரெண்டு, மூணு வாரமா தேங்கி கிடக்குதுங்க... அதிகாரிகளை கடுமையா திட்டுறது, ஆய்வு கூட்டங் கள்ல பைல்களை துாக்கி எறியுறது, அலுவலர் களை மரியாதை குறைவா நடத்துறதுன்னு கலெக்டர் மேல ஏகப்பட்ட புகார்கள் வரிசை கட்டுதுங்க...
''மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், உடம்பு சரியில்லாத வயதான முதியவரும் கூட... சமீபத்துல, கலெக்டரை சந்திக்க போன இவரை நிற்க வச்சே பேசி அனுப்பியிருக்காரு... தொகுதி எம்.எல்.ஏ., பிரபாகரன் மொபைல் போன்ல கூப்பிட்டாலும் கலெக்டர் எடுக்க மாட்டேங்கிறாருங்க...
''அதே நேரம், மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான சீனியர் ஐ.ஏ.எஸ்., மற்றும், 'மாஜி' மத்திய அமைச்சர் ராஜா கூப்பிட்டா மட்டும், உடனுக்குடன் எடுத்து பேசிடுறாருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.