PUBLISHED ON : ஜூலை 30, 2024 12:00 AM

''மேயரை வச்சுகிட்டு ஏலம் போட்டதுல கடுப்பாகிட்டாராம் பா...'' என, அன்வர் பாய் ஆரம்பிக்க சபை கூடியது.
''விஷயத்தை விபரமா சொல்லுங்க பாய்...'' என்றார் அந்தோணிசாமி.
''சேலம், 12வது வார்டு ஜான்சன் பேட்டை பகுதியில மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடந்துச்சு... மேயர் ராமச்சந்திரன், 12-வது வார்டு கவுன்சிலர் சங்கீதா நீதி வர்மன், வார்டு செயலர் ஜெயசீலன் கலந்துக்கிட்டாங்க பா...
''நான் சொல்ற பகுதிக்கு வந்து மக்கள் குறைகளை கேட்கணும்னு வார்டு செயலர் ஜெயசீலன் மேயரை கூப்பிட்டாரு... கவுன்சிலர் சங்கீதா குறுக்கிட்டு, 'எங்க ஏரியா பக்கம் வாங்க'னு மேயரை அழைச்சாங்க...
''ரெண்டு தரப்பும் மாறி மாறி ஏலம் விட்டதுல கடுப்பான மேயரு, 'நான் எங்க தான் வரது'ன்னு சத்தம் போட்டாரு பா...
''இதை கவனிச்சிட்டு இருந்த தி.மு.க., மத்திய மாவட்ட செயலரும், வடக்கு எம்.எல்.ஏ.,வுமான ராஜேந்திரன், கவுன்சிலரையும், வார்டு செயலரையும் தனியா அழைச்சு, 'இப்படி சிறுபிள்ளை தனமா சண்டை போட்டீங்கன்னா மேலிடத்துல புகார் செஞ்சிடுவேன். அப்புறம் உங்க குறையை கேட்க யாரும் இருக்க மாட்டாங்க' என்று 'அன்பான அட்வைஸ்' செஞ்சு அனுப்பினாராம் பா...'' என்றார் அன்வர்பாய்.
''அறுசுவை விருந்து வச்ச கனிமொழி மேல, சில தி.மு.க.., நிர்வாகிகள், 'அப்செட்'டா இருக்காவளாம் வே...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''பொடி வைக்காதீரும்...'' என்றார் குப்பண்ணா.
''சொல்லுதேன் வே... 'எலக் ஷன்ல ஜெயிச்சா மாநகர நிர்வாகிகளின் பதவிக்கு ஏற்ப, 5,000 முதல் 50,000 ரூபாய் வரை அள்ளிவிடுதேன்'னு கனிமொழி ஏற்கனவே சொல்லி இருந்தாங்களாம்...
''இடையில புகுந்த, 'ஆனந்தமான' கட்சிக்காரர் ஒருத்தரு ஆட்டைய கலைச்சிட்டாராம் வே... இதை, 'லேட்'டா தெரிஞ்சுகிட்ட நிர்வாகிங்க, 'அவரு மட்டும் எட்டு மதுக்கூடம் நடத்தி லட்ச லட்சமா குவிக்குதாரு... இப்படி கைக்கு எட்டுனதை வாய்க்கு எட்டாம செஞ்சுட்டாரே'ன்னு ஆதங்கப்படுதாவ வே... சம்பந்தப்பட்டவர் மேல தலைமைக்கு புகார் சொல்லவும் தயாராகிட்டாவளாம்...'' என்ற அண்ணாச்சி, ''அட, ஆனந்த சேகரன் வாரும்... இப்படி வந்து உட்காரும் வே...'' என, நண்பரை அழைத்தார்.
''உள்ள இருந்துண்டே தான் போட்டுக் கொடுத்திருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''ஆளுங்கட்சியை கடுமையா விமர்சிச்சு, இப்ப கம்பி எண்ணின்டு இருக்கற அந்த, 'டிஜிட்டல்' செய்தியாளருடன் அமைச்சர்கள் பலர், 'டச்'சில் இருந்திருக்காளாம்... அவா மூலமா தான் பல ரகசியங்கள் வெளியே கசிஞ்சிருக்கு ஓய்...
''குறிப்பா, செய்தியாளருடன் திருச்சியை சேர்ந்த மீசைக்காரர் பேசிய, 'ஆடியோ' முதல்வர் காது வரை போயிடுத்தாம்... இவா ரெண்டு பேருக்கும் பாலமா இருந்தது யாருங்கறதையும், உளவுத்துறை மோப்பம் பிடிச்சிடுத்தாம்...
''கோவையை சேர்ந்த, 'மாஜி'யின், 'அன்பான' அண்ணன் தான் இவா, 'லிங்க்'குக்கு காரணமாம்... கோவை, 'மாஜி' மேல இருக்குற ஊழல் வழக்குகளில் இதுவரை எந்த நடவடிக்கையும் பாயாம இருக்கறதுக்கும் மீசைக்காரரின் தயவே காரணமாம் ஓய்...
''துறையில எப்படி சில்லரை சேர்க்கறதுன்னு ரெண்டு பேரும் அப்பப்ப, 'டிஸ்கஸ்' செய்யறாளாம்... அவர் மேல இருக்குற ஆதாரங்களை மாநகராட்சி ஆபீசில் இருந்து அழிக்கவும், மீசைக்காரர் ஏற்பாடு செஞ்சுட்டதா உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருக்கு...
''இதனால, மீசைக்காரருக்கும், முதல்வருக்கும் இடையிலான உரசல் உச்சத்துக்கு போயிடுத்தாம் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
அரட்டை முடிய, பெரியவர்கள் கலைந்தனர்.