PUBLISHED ON : மார் 05, 2025 12:00 AM

''வாகனம் இல்லாம போலீஸ்காரங்க தவிக்காவ வே...'' என்றபடியே மசால் வடையை கடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊர்ல பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் போலீஸ் சப் - டிவிஷனுக்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த 10 வருஷமா ரோந்து பணிக்கு வாகனம் இல்லாம போலீஸ்காரங்க திணறுதாவ...
''இந்த போலீஸ் லிமிட்டில், கர்நாடகா எல்லை வரையிலும், 70க்கும் அதிகமான அடர்ந்த வனப்பகுதியை உள்ளிடக்கிய கிராமங்கள் இருக்குறதால, வனவிலங்குகள் நடமாட்டம் சர்வசாதாரணம் வே...
''இங்கன, டூ - வீலரில் ரோந்து போக முடியுமா... அவசர நேரத்துல வாடகை வாகனத்துல தான் போறாவ... போதாக்குறைக்கு, மலைப்பகுதியில நக்சல் நடமாட்டம் வேற இருக்குறதால, போலீஸ்காரங்க நொந்து கிடக்காவ வே...''என்றார் அண்ணாச்சி.
''மோசடி அம்பலமாகியும் பெண் அதிகாரி மேல நடவடிக்கை இல்லையாம் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் ஆவடி பஜார் கிளையில உள்தணிக்கை நடத்தினதுல, பல உள்குத்து மேட்டர் வெளியில வந்துடுத்து...
''வங்கி எல்லையை தாண்டி வசிக்கறவாளுக்கு கடனை அள்ளி விட்டுருக்காளாம்... கடன் வாங்கினவாளோட சம்பள சான்றுகளும் டுபாக்கூராம் ஓய்...
''இதையெல்லாம் கவனிக்காம, கிளை மேலாளர், கடன்களை வாரி வழங்கியிருக்கார்... இந்த முறைகேடுகளை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியும், சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி யை காப்பாத்துறதுலயே, மேலதிகாரி குறியா இருக்காங்களாம் ஓய்...'' என்ற குப்பண்ணா, “ஓய் அந்தோணிசாமி, பூங்குழலியையும், சிவமலரையும் பார்த்தேன்... உம்மை ரொம்பவே விசாரிச்சா ஓய்...'' என்றார்.
''நான் போன்ல பேசிட்டேங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''சென்னை எழும்பூருல, 5 மாடி கட்டடத்தில் சிறைத்துறை தலைமை இயக்குநர் ஆபீஸ் இருக்குதுங்க...
''ஏற்கனவே, சிறைத்துறை டி.ஜி.பி.,யா இருந்த அமரேஷ் பூஜாரி, வெளியூரில் இருந்து ஆபீஸ் வேலையா சென்னை வர்ற அதிகாரி கள் தங்கிக்கொள்ள, அஞ்சாவது மாடியில, உடற்பயிற்சி கூடத்துடன், 'கெஸ்ட் ஹவுஸ்' கட்டினாருங்க...
''அதுல தங்குறதுக்கு குறைந்த கட்டணம் வசூலிச்சு, சிறைத்துறைக்கு வருமானமும் கிடைக்க செஞ்சாரு... இப்ப இருக்கிற, ஐ.பி.எஸ்., அதிகாரியான கூடுதல் டி.ஜி.பி.,யின் குடும்பம் வெளியூர்ல இருக்குதுங்க...
''அதனால, சிறைத்துறை தலைமை ஆபீசை அவர் தன் வீடாவே மாத்திட்டாராம்... இதனால சிறைத்துறைக்கு வருமானமும் போச்சு; வெளியூரில் இருந்து வர்ற அதிகாரிகள் அதிக கட்டணம் கொடுத்து ஹோட்டல்ல தங்க வேண்டியதாவும் ஆகிடுச்சு...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
''ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு சம்பளத்துடன் வர்ற வீட்டு வாடகைப்படி என்ன ஆறதோ... மகேஷ்வரனுக்கே வெளிச்சம்...'' என, குப்பண்ணா குசும்பாக சிரிக்க, சபை கலகலப்புடன் கலைந்தது.