/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஏரியை தனியாருக்கு பட்டா போட்டு தந்த அதிகாரி!
/
ஏரியை தனியாருக்கு பட்டா போட்டு தந்த அதிகாரி!
PUBLISHED ON : செப் 17, 2024 12:00 AM

''கடல்ல அலைகள் ஓய்ஞ்சாலும் ஓயும்... இவங்க கோஷ்டிப்பூசல் மட்டும் ஓயாதுல்லா...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''காங்கிரஸ் விவகாரமா பா...'' என, கற்பூரமாக கேட்டார் அன்வர்பாய்.
''ஆமா... அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை பா.ஜ., தரப்பு மிரட்டியதா சர்ச்சை எழுந்துச்சுல்லா... இதுக்காக, பா.ஜ.,வை கண்டிச்சு, சமீபத்துல, கோவை வடக்கு மாவட்ட காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துனாவ வே...
''இதுல, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துக்கிட்டாரு... ஆனா, அவர் கோவைக்கு வர்றது பத்தி, அந்த ஊரை சேர்ந்த அகில இந்திய காங்., செயலரும், கர்நாடக மாநில காங்., பொறுப்பாளருமான மயூரா ஜெயகுமாருக்கு தகவல் தெரிவிக்கல...
''இதனால, செல்வப் பெருந்தகை ஆர்ப்பாட்டத்துக்கு மயூரா ஜெயகுமார் போகாம, தன் ஆதரவாளர்களை மட்டும் அனுப்பிட்டு, கமுக்கமா இருந்துக்கிட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''மாசம், 10 லிட்டர் தரலன்னா அபராதம் போடுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஏதாவது கள்ளச்சாராய தகவலாங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''இல்ல... நீலகிரி மாவட்டம், குன்னுார் கொலக்கம்பை ஸ்டேஷனுக்கு, அந்த ஏரியாவுல இருக்கிற தேயிலை தொழிற்சாலைகள், மாசம் தலா, 5 லிட்டர் பெட்ரோல், 5 லிட்டர் டீசல் வாங்கி தந்துடணும்... பெரிய தேயிலை தொழிற்சாலைகள், இதை விட அதிகமான குடுக்கணும் பா...
''அப்படி தரலைன்னா, தேயிலை தொழிற்சாலைகளுக்கு வந்துட்டு போற வாகனங்களுக்கு போலீசார் அபராதம் போட்டு தொல்லை குடுக்குறாங்க... அங்க பணிபுரியும் டிரைவர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள், அவங்க சொந்த வாகனத்துல போனாலும், 'இன்சூரன்ஸ் இல்ல, ஓவர் ஸ்பீடு'ன்னு எதையாவது சொல்லி அபராதத்தை தீட்டுறாங்க...
''இது சம்பந்தமா, புதுசா வந்திருக்கிற எஸ்.பி.,க்கு தேயிலை தொழிற்சாலைகள் தரப்புல இருந்து புகார்கள் போயிருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஏரியை தனியாருக்கு பட்டா போட்டு குடுத்த கதையை கேளுங்கோ ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் தாலுகா ஆபீஸ்ல ஒரு அதிகாரி இருக்கார்... அவனின்றி அணுவும் அசையாதுங்கற மாதிரி, காசில்லாம இவரிடம் எந்த காரியமும் நடக்காது ஓய்...
''இவரை நேரடியா யாரும், 'அப்ரோச்' பண்ணவே முடியாது... அதுக்குன்னே தனித்தனி புரோக்கர்களை வச்சிருக்கார் ஓய்...
''அவா வழியா போனா தான் காரியம் முடியும்... பொதுவா, இவர் ஆபீசுக்கே வரது இல்ல... பைல்கள்ல கையெழுத்து போட மட்டும் வந்துட்டு, 'மீட்டிங்'னு சொல்லிட்டு, கலெக்டர் ஆபீசே கதியா கிடக்கறார் ஓய்...
''சமீபத்துல, தெரணி கிராமத்துல கூத்தன் குட்டை என்ற ஏரியின், 7 ஏழு ஏக்கர் இடத்தை தனியாருக்கு பட்டா போட்டு தந்துட்டார்... பெருமாள் மலையடிவார பகுதியில இருந்த அரசு புறம்போக்கு இடத்தை, புரோக்கர் ஒருத்தருக்கு பட்டா போட்டு குடுத்துட்டார்...
''யாராவது கேட்டா, 'எனக்கு மேல இருக்கற ரெண்டு அதிகாரிகளுக்கு சரியா பங்கு குடுத்துறடதால, என்னை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது'ன்னு மார் தட்டிக்கறார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.