/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பாலியல் புகாரில் சிக்காமல் தப்பிய அதிகாரி!
/
பாலியல் புகாரில் சிக்காமல் தப்பிய அதிகாரி!
PUBLISHED ON : ஜூன் 06, 2024 12:00 AM

''சனாதன தர்மம் சர்ச்சையால தான், வடமாநிலங்கள்ல எதிர்பார்த்த வெற்றி கிடைக்கலன்னு சொல்லுதாவ...'' என்றபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''தேர்தல் முடிவை சொல்றீங்களா பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''ஆமா... உதயநிதியின் சனாதன எதிர்ப்பு பேச்சு தான், வடமாநிலங்கள்ல பா.ஜ., வெற்றிக்கு கைகொடுத்திருக்கு... இதனாலயே, தி.மு.க., தலைவர்களை வடமாநில தேர்தல் பிரசாரத்துக்கு காங்., தலைவர்கள் அழைக்கல வே...
''வடமாநிலங்கள்ல, காங்கிரசுக்கு 100க்கும் மேற்பட்ட தொகுதிகள்ல தோல்வி கிடைக்க, சனாதன எதிர்ப்பு பேச்சு தான் காரணம்னு, டில்லி காங்., தலைவர்கள் வருத்தப்படுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''மாவட்ட செயலர் பதவிக்கு முட்டி மோதிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த கட்சியிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலர் சிவலிங்கம், கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில போட்டியிட சீட் கேட்டார்... அவருக்கு கிடைக்க இருந்த சூழல்ல, கடைசி நேரத்துல, மலையரசன் குறுக்கே புகுந்து தட்டிண்டு போயிட்டார் ஓய்...
''கைக்கு எட்டியது வாய்க்கு கிட்டலையேங்கற விரக்தியில, சிவலிங்கம் தேர்தல் பணிகள்ல ஈடுபட்டார்... அடுத்து, ரெண்டு சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலர் வீதம் பிரிக்கலாம்னு உதயநிதி ஒரு ஐடியா வச்சிருக்காரோன்னோ...
''அப்படி பிரிக்கிறப்ப, மாவட்ட தி.மு.க., பொருளாளர் ஆத்துார் ஸ்ரீராம், சேலம் மாஜி மேயர் ரேகா பிரியதர்ஷினி மற்றும் வெண்ணிலான்னு மூணு பேர், மாவட்டச் செயலர் பதவிகளை பிடிக்க காய் நகர்த்திண்டு இருக்கா... இதனால, தன்னோட மாவட்ட செயலர் பதவிக்கும் பங்கம் வந்துடு மோன்னு சிவலிங்கம் விரக்தியில இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பாலியல் புகார்ல சிக்காம தப்பிட்டாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் யூனியன் அலுவலகத்துல இருக்கிற ஒரு அதிகாரி சரியான, 'ஜொள்ளு' பார்ட்டிங்க... இவர், ஏற்கனவே வேப்பூர்ல வேலை பார்த்தப்ப, ஆபீஸ்ல வச்சே பெண் ஊழியருக்கு முத்தம் குடுத்து சிக்கிட்டாருங்க...
''இப்ப, ஆலத்துார்ல இரண்டு தற்காலிக பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை தந்திருக்காருங்க... வெறுத்து போன அந்த பெண்கள், பாடாலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு மொட்டை பெட்டிஷன் அனுப்பிட்டாங்க...
''இது, சில்மிஷ அதிகாரிக்கு தெரிஞ்சிடுச்சு... உடனே, அந்த பெண்களை கூப்பிட்ட அதிகாரி, 'ஜல்ஜீவன் திட்டம் முடிஞ்சுட்டதால, உங்க வேலை போயிடும்... ஆனா, உங்களுக்கு வேலை போகாம நான் பார்த்துக்கிறேன்... புகார் பத்தி போலீஸ் வந்து விசாரிச்சா, இது எங்களோட பர்சனல்னு சொல்லிடுங்க'ன்னு ஐடியா குடுத்திருக்காருங்க...
''இரண்டு குழந்தை களுக்கு தாயான அந்த பெண்களும், வேலையை காப்பாத்திக்கிறதுக்காக, எஸ்.பி.சி.ஐ.டி., போலீஸ்காரர் வந்து ரகசியமா விசாரிச்சப்ப, 'அது எங்க பர்சனல்'னு சொல்லிட்டாங்க... இதனால, அதிகாரி தப்பிச்சுட்டாருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''சேகர், இந்த பேப்பரை அங்க வையும்...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.