/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மேயர் பதவிக்கு சமுதாய ரீதியில் காய் நகர்த்தும் புள்ளி!
/
மேயர் பதவிக்கு சமுதாய ரீதியில் காய் நகர்த்தும் புள்ளி!
மேயர் பதவிக்கு சமுதாய ரீதியில் காய் நகர்த்தும் புள்ளி!
மேயர் பதவிக்கு சமுதாய ரீதியில் காய் நகர்த்தும் புள்ளி!
PUBLISHED ON : ஜூலை 14, 2024 12:00 AM

''வியாபாரிகள் நிம்மதியா தொழில் செய்ய முடியல வே...'' என்ற படியே, கருப்பட்டி காபியை உறிஞ்சினார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில், 'அறிவும் அழகும்' நிரம்பிய ஒரு போலீஸ்காரர் இருக்காரு... இவர், சாலையோர கடைகள், மொத்த வியாபார கடைகள்ல தீவிர வசூல் வேட்டை நடத்துதாரு வே...
''ஒவ்வொரு கடைக்கும் தொகை நிர்ணயம் பண்ணி, 'அதிகாரிகளுக்கு தரணும்... தராட்டி, நீங்க கடை நடத்த முடியாது... ஏதாவது வழக்கை போட்டு உள்ள தள்ளிடுவேன்'னு மிரட்டுதாரு வே...
''கூடுவாஞ்சேரி மீன் மார்க்கெட் பகுதியில் தள்ளுவண்டி வியாபாரிகள், மட்டன் கடைகள்ல வாரம், 2,000 ரூபாய் வீதம் மாமூல் வசூலிக்காரு... பாதிக்கப்பட்டவங்க புகார் குடுத்தும், உயர் அதிகாரிகள் கண்டுக்கல... இதனால, அவங்களுக்கும் பங்கு போகுதோன்னு வியாபாரிகள் சந்தேகப்படுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''பதவியை காப்பாத்திக்க கிடா விருந்து போட போறாரு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''கவுன்சிலர்களின் கடும் எதிர்ப்பால, கோவை, நெல்லை மேயர்களின் பதவி பறிபோயிடுச்சே... காஞ்சிபுரம் மேயரின் பதவி, நம்பிக்கையில்லா தீர்மானத்துல ஊசலாடிட்டு இருக்குது பா...
''இதே மாதிரி, ஈரோடு மாநகராட்சியிலும் கவுன்சிலர்கள் அதிருப்தியில இருக்காங்க... தி.மு.க., மேயர் நாகரத்தினத்தின் கணவர் சுப்பிரமணியன், மாநகர செயலராகவும் இருக்கிறதால, நிர்வாகத்துல அவரது தலையீடு அதிகமா இருக்குது பா...
''தீபாவளி, பொங்கலுக்கு கவுன்சிலர்களை கவனிச்சாலும், 'டெண்டர்' விவகாரங்களில் சுப்பிரமணியன் தான் முடிவுகளை எடுக்கிறாரு... இதனால, ஆளுங்கட்சியில ஒரு சிலர் தவிர, பெரும்பாலான கவுன்சிலர்கள், மேயர் தரப்பு மீது அதிருப்தியில இருக்காங்க பா...
''அவங்க போர்க்கொடி துாக்கி, மனைவியின் பதவிக்கு பங்கம் வந்துடக் கூடாதுன்னு நினைக்கிற மாநகரம், சீக்கிரமே கவுன்சிலர்களுக்கு கிடா விருந்து வழங்க முடிவு பண்ணியிருக்காரு... இந்த நிகழ்ச்சியை, அரசின் மூன்றாண்டு சாதனை என்ற பெயரில் ஏற்பாடு செய்யவும், 'பிளான்' பண்ணியிருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''என்கிட்டயும் ஒரு மாநகராட்சி தகவல் இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''புதுசா தேர்வான கோவை மக்கள் பிரதிநிதி, ஒரே மாசத்துல தன் சமுதாய பாசத்தை காட்ட துவங்கிட்டாராம்... இப்ப, காலியா இருக்கற கோவை மேயர் பதவிக்கு, தனக்கு கட்டுப்பட்ட, தன் சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண் கவுன்சிலரை நியமிக்க காய் நகர்த்தறார் ஓய்...
''எஞ்சியிருக்கற இரண்டரை வருஷம் மேயர் பதவியில தன் ஆளை அமர்த்திட்டா, எவ்வளவு சம்பாதிக்க முடியும்னும் கணக்கு போட்டு வச்சிருக்கார்... இதனால, ஜெயிலுக்குள்ள இருக்கற வி.ஐ.பி., வாயிலா, அந்த கவுன்சிலரை மேயராக்க துடிக்கறார் ஓய்...
''இவர் பரிந்துரைக்கற பெண்மணியோ, பள்ளி படிப்பையே தாண்டாதவங்க... 'அவங்களை நியமிச்சா, பழைய மேயர் மாதிரியே இருந்து, கட்சிக்கு கெட்ட பெயரை தான் வாங்கி தருவாங்க'ன்னு கவுன்சிலர்கள் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.