/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மாமூலுக்காக நடுரோட்டில் கட்டிப்புரண்ட போலீசார்!
/
மாமூலுக்காக நடுரோட்டில் கட்டிப்புரண்ட போலீசார்!
PUBLISHED ON : ஏப் 18, 2024 12:00 AM

''ரகசிய சந்திப்புல, கறாரா பேசி அனுப்பிட்டாங்க...'' என்ற பரபரப்பான தகவலுடன், பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''யாரை, யாருவே சந்திச்சா...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''போன வாரம், திருப்பூர் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளை, தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தியாகராஜன் ரகசியமா சந்திச்சு பேசினாருங்க... சந்திப்புக்கு, திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜ் தான் ஏற்பாடு பண்ணியிருக்காருங்க...
''அப்ப, ஜி.எஸ்.டி., வரி பங்கீட்டால தமிழகத்துக்கும், தொழில் துறையினருக்கும் பாதிப்புதான்னு அமைச்சர் விளக்கியிருக்காருங்க... அதாவது, மத்திய அரசால் ஏற்பட்ட பாதிப்புகளை மட்டும் சொல்லி, தி.மு.க.,வை ஆதரிக்கணும்கிற மாதிரி பேசியிருக்காருங்க...
''அதுக்கு அவங்க, 'மின் கட்டண உயர்வு தான் எங்களுக்கு மிக பெரிய பிரச்னை... முதல்ல, அதை சரி பண்றதுக்கு முதல்வரிடம் பேசுங்க'ன்னு கறாரா சொல்லி அனுப்பிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ரவுடிகளுக்கு தகவலை, 'பாஸ்' பண்ணிடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தமிழகத்தில், 16,500 ரவுடிகள் இருக்காவ... இதுல, கொடூர குற்றங்களில் ஈடுபடும் தாதாக்களை, 'ஏ பிளஸ்' ரவுடிகள்னு போலீசார் வகைப்படுத்தி வச்சிருக்காவ வே...
''கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை, ஏ, பி, சி.ன்னு மூணு வகையா பிரிச்சிருக்காவ... தேர்தலை முன்னிட்டு, 'ஏ பிளஸ்' ரவுடிகளை புடிச்சு உள்ளே போடுறதுக்கு கூடுதல் டி.ஜி.பி., மற்றும் ஐ.ஜி.,க்களின் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிட்டு இருக்காவ வே...
''ஆனா, சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் மூலமா, தனிப்படையினரின் மூவ்கள், ரவுடிகளுக்கு உடனுக்குடன் போயிடுது... இதனால, தனிப்படையினர் போறதுக்குள்ள ரவுடிகள் எஸ்கேப் ஆகிடுதாவ... இப்படி, ரவுடிகளுக்கு தகவல் தர்ற சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் யார், யார்னு பட்டியல் எடுத்து, டி.ஜி.பி., ஆபீஸ்ல தனிப்படையினர் குடுத்திருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''என்கிட்டயும் ஒரு போலீஸ் ஸ்டோரி இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருச்சி, நம்பர் 1 டோல்கேட் பகுதியில், போக்குவரத்து போலீசார் ரெண்டு பேர் இருக்கா... 'ஓவர் லோடு' லாரிகள்ல மாமூல் வசூல் பண்ணி பங்கு பிரிச்சுப்பா ஓய்...
''போன வாரம் பங்கு பிரிக்கறச்சே, கிளிக்கூடு, எசனைக்கோரை பகுதிகள்ல தினமும் மணல் கடத்தல் லாரிகளிடம் வசூலிக்கற பணத்துல, ஒரு போலீஸ்காரர் பங்கு கேட்டிருக்கார்... அதுக்கு மற்றவர், 'அதுக்கும், உனக்கும் சம்பந்தம் இல்ல... அதுல, கொள்ளிடம் போலீசாருக்கு நான் பங்கு தரணும்'னு மறுத்திருக்கார் ஓய்...
''ஆனாலும், தனக்கும் பங்கு வேணும்னு அவர் வாக்குவாதம் பண்ண, ரெண்டு பேருக்கும் கைகலப்பாயிடுத்து... நடுரோட்டுலயே கட்டிப்புரண்டு சண்டை போட்டா ஓய்...
''தகவல் கிடைச்சு ஓடோடி வந்த கொள்ளிடம் போலீசார், ரெண்டு பேரையும் விலக்கி விட்டு, தங்களுக்கான மணல் மாமூலை வாங்கிட்டு சத்தமில்லாம போயிட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''விவேகானந்தன், ராஜசேகரன் வர்றாவ... சுக்கு காபி போடும் நாயரே...'' என்றபடியே பெரியசாமி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

