/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கட்டுமான பணிகளில் 'கட்டிங்' கேட்கும் மும்மூர்த்திகள்!
/
கட்டுமான பணிகளில் 'கட்டிங்' கேட்கும் மும்மூர்த்திகள்!
கட்டுமான பணிகளில் 'கட்டிங்' கேட்கும் மும்மூர்த்திகள்!
கட்டுமான பணிகளில் 'கட்டிங்' கேட்கும் மும்மூர்த்திகள்!
PUBLISHED ON : ஜூலை 19, 2024 12:00 AM

''தேர்தல் முடிஞ்சும், ஊக்கத்தொகை வராம புலம்புறாங்க பா...'' என, ஏலக்காய் டீயை பருகியபடியே மேட்டரை ஆரம்பித்தார், அன்வர்பாய்.
''யாருக்குங்க இன்னும் ஊக்கத்தொகை வரலை...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''வழக்கமா தேர்தல் பணியில ஈடுபடும் போலீசாருக்கு, ஊக்கத்தொகை தருவாங்க... ஆனா, லோக்சபா தேர்தல் பணிகள்ல ஈடுபட்ட போலீசாருக்கு, இன்னும் ஊக்கத்தொகை வரல பா...
''வழக்கமா தேர்தல் முடிஞ்ச ஒரு மாசத்துக்குள்ள இந்த தொகையை தந்துடுவாங்க... ஆனா, இப்ப தேர்தல் முடிஞ்சு மூணு மாசமாகியும் அது பத்தி எந்த தகவலும் இல்ல... முதல்வர் கையில் உள்ள துறையிலயே இந்த தாமதம் ஏன்னு தெரியாம போலீசார் புலம்பிட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''பணம் இல்லாம, பேனா மூடியை திறக்கவே மாட்டேங்கறாங்க ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
''எந்த ஊரு அதிகாரியை சொல்லுதீரு...'' என, பட்டென கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
''நாகர்கோவில்ல இருக்கற கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆபீஸ் வளாகத்துல, அகஸ்தீஸ்வரம் தாலுகா ஆபீசும் இருக்கு... இங்க, பணம் இல்லாம எந்த காரியமும் நடக்கறது இல்ல ஓய்...
''எந்த சான்றிதழ் வேணும்னாலும், அதுக்குன்னு தனியா, 'ரேட் பிக்ஸ்' பண்ணிஇருக்கா... தராதவாளை வாரக் கணக்கு, மாசக்கணக்குல அலைக்கழிக்கறா ஓய்...
''அதுலயும் இங்க இருக்கற பெண் துணை தாசில்தார், பணம் தராதவா பைல்களை காணாம ஆக்கிடறாங்க... தாசில்தார் கூப்பிட்டு கேட்டாலும், 'என் டேபிளுக்கு வரவே இல்ல'ன்னு சாதிச்சுடறாங்க ஓய்...
''சமீபத்துல புதுசா வந்திருக்கற தாசில்தார், எல்லா பைல்களையும் தேடி தேடி எடுத்து கையெழுத்து போட்டு அனுப்பறார்... ஆனா, இந்தம்மா பணத்தை கண்ணுல பார்க்காம, பைல்களை கையால தொடறதே இல்ல... இவங்களை பத்தி, கலெக்டரிடமே புகார் போயும், அவரும் கண்டுக்கல ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மும்மூர்த்திகளை யார் தட்டி கேட்கிறதுன்னு தெரியல வே...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறினார் அண்ணாச்சி.
''யாருப்பா அந்த மும்மூர்த்திகள்...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில இருக்கிற மாநகராட்சியின், 110வது வார்டுல, பங்களா வீடுகள், குடிசை வீடுகள்னு எந்த ஏரியாவா இருந்தாலும் சரி... அங்கன கட்டுமான பணிகள் நடந்தா போதும்... ஆளுங்கட்சியை சேர்ந்த மூணு பேருக்கு மூக்குல வேர்த்து, 'டாண்'னு ஆஜராகிடுதாவ வே...
''உருட்டி, மிரட்டி, 'கட்டிங்' வாங்கிட்டு தான் இடத்தை காலி செய்யுதாவ... இந்த மூணு பேரும், மேற்கு மாவட்ட தி.மு.க., முக்கிய புள்ளிக்கு வலது மற்றும் இடதுகரமா வலம் வர்றாவ வே...
''சமீபத்துல, மின்வாரிய பணிகளுக்காக, குழி தோண்டி கேபிளை சரிபார்க்கும் பணிகளை ஊழியர்கள் செஞ்சிருக்காவ... இது, மக்களுக்கான பணின்னு கூட பார்க்காம, அவங்களிடம் போய், 'மாவட்ட கட்சி ஆபீசுக்கு வாங்க'ன்னு மிரட்டிஇருக்காவ வே...
''இந்த மாதிரி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு போன்ற பணிகளை கூட மக்களுக்கு செய்ய விடாம தடுக்கற இந்த மூணு பேரை பத்தி, யாரிடம் புகார் சொல்லி நியாயம் கேட்கிறதுன்னு தெரியாம, அந்த பகுதி மக்கள் முழியா முழிச்சிட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, பெஞ்ச் காலியானது.