/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
' டீலிங் ' முடியாததால் தாமதமாகும் அதிகாரிகள் இடமாறுதல்!
/
' டீலிங் ' முடியாததால் தாமதமாகும் அதிகாரிகள் இடமாறுதல்!
' டீலிங் ' முடியாததால் தாமதமாகும் அதிகாரிகள் இடமாறுதல்!
' டீலிங் ' முடியாததால் தாமதமாகும் அதிகாரிகள் இடமாறுதல்!
PUBLISHED ON : செப் 14, 2024 12:00 AM

''விதிமீறல் கட்டடம் கட்றதை கண்டுக்க மாட்டேங்கறா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
''யாரை சொல்றீங்க...''என கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னை, சூளையில் இருக்கற அங்காள பரமேஸ்வரி மற்றும் காசி விஸ்வநாதர் கோவில், 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது... அதுவும் இல்லாம குழந்தை பாக்கியம் தர்ற அம்மன் கோவிலாகவும் இருக்கு... இதனால, இங்க பெண்கள் கூட்டம் அதிகமா வரது ஓய்...
''கோவிலுக்கு கோடிக்கணக்குல சொத்துக்கள் இருக்கு... கோவில் நிலத்துல வீடு, கடைகள்னு, 40 கட்டடங்களும் இருக்கு... இதுல இருக்கறவா முறைப்படி வாடகை தரதில்லை ஓய்...
''கோவிலுக்கு சொந்தமான இடத்துல, விதிகளை மீறி மூன்றடுக்குல கட்டடங்கள் கட்றா... இதையும் கோவில் நிர்வாகம் கண்டுக்காம இருக்கு... இதனால, 'கோவில் சொத்துக்கள்ல இருந்து வருமானம் ஈட்டுறதுல ஆர்வம் காட்ற அதிகாரிகளை நியமிக்கணும்'னு பக்தர்கள் அரசுக்கு புகார் அனுப்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஆளுங்கட்சி பிரமுகரால அவஸ்தையில இருக்காங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''கோவையில, கலெக்டர், டி.ஆர்.ஓ., மாநகராட்சி கமிஷனர், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை, வாரத்துல ரெண்டு அல்லது மூணு நாள், ஆளுங்கட்சி கரை வேஷ்டி கட்டிய ஒருத்தர் சந்திக்க வர்றாரு... தன்னை பெரிய இடத்து சகோதரியின் உறவினர்னு சொல்லிக்கிறாருங்க...
''அந்த வேலையை முடிச்சு குடுங்க, இதை முடிச்சு தாங்கன்னு உரிமையா கேட்கிறாருங்க... அதை விட பெரிய கொடுமை என்னன்னா, பல மணி நேரமா எதிர்ல அமர்ந்து பேசிட்டே இருக்காருங்க...இதனால, தங்களது வழக்கமான வேலைகளை பார்க்க முடியாம அதிகாரிகள் நெளியுறாங்க...
''அதிகாரிகள் சீட்ல இருக்காங்களான்னு கீழ்மட்ட ஊழியர்கள் வாயிலா தெரிஞ்சுக்கிட்டு, 'டான்'னு வந்துடுறாருங்க... அவரை, 'அவாய்ட்' பண்ண முடியாம அதிகாரிகள் தவியா தவிக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''சுகுமார், தள்ளி உட்காரும்...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே, ''மூணு வருஷம் முடிஞ்சும் பணியில நீடிக்காவ வே...'' என்றார்.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''பொதுவா அரசு அதிகாரிகளை, மூணு வருஷத்துக்கு ஒரு முறை இடம் மாத்துவாவ... ஆனா, களக்காடு, முண்டந்துறை, நீலகிரி வனத்துறையில அதிகாரிகள், உதவி வன பாதுகாவலர்கள், துணை வன பாதுகாவலர்கள் பலரும், மூணு வருஷம் தாண்டியும், இன்னும் இடமாறுதல் செய்யப்படல வே...
''இந்த இடங்களை விரும்புற அதிகாரிகளிடம் இன்னும், 'டீலிங்' முடியாததால, இடமாறுதல் லேட்டாகுதுன்னு சொல்லுதாவ... இதுக்கு இடையில, பசையான இடங்கள்ல நீடிக்க விரும்புற சிலர், பார்க்க வேண்டியவங்களை பார்த்து, மேலும் ஒரு வருஷத்துக்கு அதே இடங்களுக்கு பணி நீட்டிப்பு வாங்கிட்டதாகவும், துறைக்குள்ள பேசிக்கிடுதாவ...
''இந்த மாதிரி, 'கட்டிங்'பிரச்னையால, நியாயமான இடமாறுதலை எதிர்பார்த்துட்டு இருக்கிறநேர்மையான அதிகாரிகள்அதிருப்தியில இருக்காவவே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''பணம் இல்லன்னா, இந்த கவர்ன்மென்ட்ல ஒண்ணும் நடக்காதுன்னுசொல்லும் ஓய்...'' என, அலுத்தபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.