/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
விஜயகாந்த் மகனுக்கு வாய்ப்பு தரும் விஜய்!
/
விஜயகாந்த் மகனுக்கு வாய்ப்பு தரும் விஜய்!
PUBLISHED ON : செப் 18, 2024 12:00 AM

பெஞ்சில் அமர்ந்த கையுடன், ''போலீசாருக்கே அல்வா குடுத்தவர் கதையை கேளுங்கோ ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்டம்அவினாசியில், டாஸ்மாக்கடைகள் மற்றும் பார்கள்ல, ஆளுங்கட்சி ஒன்றிய புள்ளி ஒருத்தர்,அதிரடி வசூல் நடத்தியிருக்கார்... 'போலீஸ் அதிகாரிகளுக்கு எல்லாம்நான் தான் வசூல் பண்ணி தரேன்'னும் சொல்லியிருக்கார் ஓய்...
''பார் நடத்தற சிலர், இதை போலீசாரின் காதுல போட்டிருக்கா... 'ஆளுங்கட்சி புள்ளி, எங்களுக்கு எந்த தொகையும் தரலையே'ன்னு ஷாக்கான போலீசார், ஆளுங்கட்சி நிர்வாகியை அழைச்சு எச்சரிக்கை விடுத்திருக்கா ஓய்...
''அதுவும் இல்லாம, டாஸ்மாக் பார்கள்ல, 'அவருக்கு இனி பணம் தராதேள்'னும் உத்தரவு போட்டிருக்கா... 'நம்ம பெயரை சொல்லி எவ்வளவு நாளா, எத்தனை லட்சங்களை வசூல் செய்தார்'னு ரகசிய விசாரணை நடத்திண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ரெய்டுக்கு அப்புறம் அமோகமா வளர்ந்த அதிகாரி பத்தி தெரியுமா வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''மணல் குவாரிகள்ல சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததா, லோக்சபா தேர்தலுக்கு முன்னாடி அமலாக்க துறை, 'ரெய்டு' நடத்துச்சுல்லா... இதுல, நீர்வளத் துறையின் ரெண்டு அதிகாரிகளிடமும் ரெய்டு நடந்துச்சு வே...
''இதுல, ஒருத்தர் ரிட்டயர் ஆகி போயிட்டாரு... இன்னொருத்தர் புரமோஷன்ல உயர் பதவிக்கு வந்துட்டாரு... அதிகாரிகள் பதவி உயர்வு, பணியிட மாறுதல் விவகாரங்களை இவர் தான் கவனிக்காரு வே...
''இதுக்கு, லட்சக்கணக்குல பணம் கைமாறுது... சென்னை ஏரிகளை பராமரிக்கும் பணியிடத்தை காலியாக்கி, அந்த பொறுப்பை யும் கூடுதலா கவனிக்காரு... பினாமி கான்ட்ராக்டர்களை போட்டு பணிகளை செய்தாரு வே...
''இது போதாதுன்னு, சென்னை மண்டலத்துக்கு,திருச்சியில் இருந்து பெண் அதிகாரி ஒருத்தரை, 'டம்மி'யா அழைச்சுட்டு வந்து, அவங்க வேலைகளையும் இவரே கவனிக்காரு... இப்படி, மூணு முக்கிய பொறுப்புகளை கையில வச்சுக்கிட்டு, வாரி குவிக்காரு வே...
''துறையின் முக்கிய புள்ளியின் சமூகத்தை சேர்ந்தவருங்கிறதால, அவரை துறையின் உயர் பதவிக்குநியமிக்கவும் வேலைகள் நடக்கு... எல்லாத்துக்கும், 'திலகம்' வச்ச மாதிரி, 'ரெய்டுல அவர் நிறைய இழந்துட்டாரு... கொஞ்சம் சம்பாதிச்சுக்கட்டும்'னு முக்கிய புள்ளியே அவருக்கு கிரீன் சிக்னல் குடுத்துட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''விஜயகாந்த் மகனுக்குவாய்ப்பு தருவார்னு சொல்றாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராகிட்டு இருக்காருல்ல... தேர்தல் செலவுக்காக, கடைசியா ஒரு படம் நடிக்க முடிவு பண்ணி, அறிவிப்பை வெளியிட்டிருக்காருங்க...
செந்துாரபாண்டி படத்துல விஜய் கூட விஜயகாந்த் நடிச்சு, அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தாருங்க... விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிகரா இருந்தும், சரியான வாய்ப்பு இல்லாம திணறிட்டு இருக்காருங்க...
''அதனால, விஜயகாந்துக்கு செய்ற நன்றிக்கடனா, தன் கடைசி படத்துல, சண்முக பாண்டியனுக்கு வாய்ப்பு தர்றதா விஜய் சொல்லியிருக்காராம்... இது, 'தன் அரசியல் இமேஜை அதிகரிக்கும்'னும் விஜய் கணக்கு போடுறாருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.

