/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு!
/
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு!
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு!
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு!
PUBLISHED ON : மே 25, 2024 12:00 AM

''இளைஞர் அணியிடம் எரிஞ்சு விழுந்துட்டாங்க...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார் அந்தோணிசாமி.
''தி.மு.க., விவகாரமா பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''ஆமா... துாத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், சமீபத்துல நடந்துச்சுங்க... மாவட்ட செயலரும், அமைச்சருமான கீதா ஜீவன் கலந்துக்கிட்டாங்க...
''இதுல பேசிய இளைஞரணி மாவட்ட செயலர் மதியழகன், 'இளைஞரணிக்கு முக்கியத்துவம் தரணும்... இளைஞரணி நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லாத நிலை இருக்கு'ன்னு சொல்லியிருக்காருங்க...
''உடனே ஆவேசமான அமைச்சர், 'லோக்சபா தேர்தலில், உங்களிடம் ஒப்படைத்த ஐந்து வார்டுகள்ல கூட ஒழுங்கா தேர்தல் பணி செய்யல... அப்புறம் என்ன மரியாதை வேண்டி கிடக்கு... பேசாம உட்காருங்க'ன்னு பொங்கிட்டாங்க...
''அதுவும் இல்லாம, 'என்னை பற்றி தலைமைக்கு 20க்கும் மேற்பட்ட புகார்கள் போயிருக்கு... அதை எல்லாம் சமாளிச்சு மீண்டு வருவேன்'னும் அதிரடியா சொல்லி, இளைஞர் அணியினரை அடக்கிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் பொறுப்பேற்று ஒரு வருஷம் ஆறது... வந்த புதுசுல பத்திரிகையாளர்களுடன் நல்ல நட்புல இருந்தார்... மொபைல் போன்ல கூப்பிட்டதுமே எடுத்து பதில் தந்துடுவார் ஓய்...
''ஆனா, இப்ப ரொம்பவே மாறிட்டார்... பத்திரிகையாளர்கள் போன் பண்ணா, எடுக்கறதே இல்ல... ஏதாவது சீரியசான மேட்டருக்கு தான் போன் போடுவாங்க... எடக்கு மடக்கா கேள்வி கேட்டு, வம்புல சிக்க வச்சிடுவாங்கன்னு கண்டுக்கறது இல்ல ஓய்...
''கலெக்டரது உதவியாளர்களும் அவரது போன்களை எடுத்து பதில் தரது இல்ல... தப்பி தவறி எடுத்தாலும், 'ஐயா மீட்டிங்குல இருக்காங்க... திரும்ப கூப்பிட சொல்றோம்'னு சொல்றா ஓய்...
''ஆனா, ஒரு நாளும் கலெக்டர் திரும்ப கூப்பிட்டதே இல்ல... 'மொத்தத்துல, கலெக்டர் தொடர்பு எல்லைக்கு அப்பால் போயிட்டார்'னு நிருபர்கள் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''விக்கிரவாண்டி தி.மு.க., வேட்பாளரை அறிவிச்சிட்டாங்கல்லா...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''அப்படி எந்த செய்தியையும் நான் படிக்கலையே பா...'' என்றார், அன்வர்பாய்.
''முழுசா கேளும்... விழுப்புரம் லோக்சபா தொகுதியில், சிறப்பா தேர்தல் பணி செய்த திருவெண்ணைநல்லுார் ஒன்றிய தி.மு.க., நிர்வாகிகளுக்கு வி.சி., வேட்பாளர் ரவிகுமார் நன்றி தெரிவிக்கிற கூட்டம் சமீபத்துல நடந்துச்சு... மாவட்ட ஊராட்சிக்குழு தலைவரான ஜெயசந்திரன் தலைமையில தான் கூட்டம் நடந்துச்சு வே...
''இதுல, திருவெண்ணை நல்லுார் ஒன்றிய செயலர் விஸ்வநாதன் பேசுறப்ப, 'லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டு களை பெறுவதற்கு உழைத்தது போல், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் ஜெயசந்திரன் வெற்றிக்கும் கட்சியினர் உழைக்கணும்'னு அதிரடியா அறிவிச்சிட்டாரு...
''வேட்பாளர் யார்னு கட்சி தலைமை தானே அறிவிக்கணும்... ஒன்றிய செயலரே முந்திக்கிட்டு அறிவிச்சா எப்படின்னு நிர்வாகிகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காவ... இதுக்கு மத்தியில, அமைச்சர் பொன்முடியின் எதிர் கோஷ்டியினர் பலரும், தங்களுக்கு சீட் கேட்டு அறிவாலயத்துக்கு படையெடுத்துட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை கச்சேரி முடியவும், நண்பர்கள் கலைந்தனர்.

