/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கோடநாடு நிர்வாகத்தை கவனிக்கும் மர்ம பெண் யார்?
/
கோடநாடு நிர்வாகத்தை கவனிக்கும் மர்ம பெண் யார்?
PUBLISHED ON : ஜூலை 07, 2024 12:00 AM

துண்டால் பெஞ்சை தட்டியபடியே அமர்ந்த குப்பண்ணா, ''மாமனார் பேச்சை கேட்டு தான் எல்லாரும் நடக்கறா ஓய்...'' என்றபடியே, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த ஊரு விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சேலம் மாவட்டம், ஆத்துார் நகராட்சி தலைவரா, தி.மு.க.,வை சேர்ந்த நிர்மலா பபிதா இருக்காங்க... இவங்க மாமனார் பாலசுப்ரமணியம், நகர தி.மு.க., செயலரா இருக்கார் ஓய்...
''நகராட்சியில் கொண்டு வர வேண்டிய தீர்மானங்கள், அலுவலர் பிரச்னைகள், டெண்டர் விஷயங்கள் எல்லாம் இவரது உத்தரவுப்படி தான் நடக்கறது...
''நகராட்சியில், 123 ஒப்பந்த பணியாளர்கள் இருக்கா... இவாளுக்கு போன மாசம் சம்பளம் வழங்காததால, சமீபத்துல பணியை புறக்கணித்து, முற்றுகை போராட்டம் நடத்தினா ஓய்...
''தலைவர் மற்றும் கமிஷனரிடம் முறையிட காத்துண்டு இருந்தா... அவா ரெண்டு பேரும் வராத சூழல்ல, தலைவர் அறையில இருந்த பாலசுப்பிரமணியன் மற்றும் சில கவுன்சிலர்கள் தான், ஒப்பந்த பணியாளர் சங்க நிர்வாகிகளிடம் பேச்சு நடத்தி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''என்கிட்டயும் ஒரு உள்ளாட்சி தகவல் இருக்குதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''திருவள்ளூர் மாவட்டம், நாரவாரிக்குப்பம் தேர்வுநிலை பேரூராட்சியில், சி.எம்.டி.ஏ., அனுமதி வாங்காம, நாலைந்து தளங்கள் கொண்ட புதிய கட்டடங்கள், வேகவேகமா கட்டப்படுதுங்க... தேர்தல் நடத்தை விதிகள் அமல்ல இருந்தப்ப, கட்டட உரிமையாளர்களிடம் பேரூராட்சி நிர்வாகத்தினர், 'உங்களுக்கு பிரச்னை வராம பார்த்துக்கிறோம்... எங்களை கவனிச்சிடுங்க'ன்னு பேசி, 'டீலிங்'கை முடிச்சுட்டாங்க...
''இது, கவுன்சிலர்களுக்கு தெரிஞ்சு போயிடுச்சு... இதனால, இந்த மாத மன்ற கூட்டத்துல, 'புதிய கட்டடங்களின் கட்டுமான அனுமதி விபரங்களை வைக்கணும்... அனுமதியில்லாம நடக்கிற பணிகளை நிறுத்தணும்'னு பிரச்னை கிளப்ப கவுன்சிலர்கள் முடிவு பண்ணியிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''மர்ம பெண் குறித்து விசாரணை நடக்கு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''கோவையில், பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டல்ல ஒரு பெண் மாசக்கணக்குல தங்கியிருக்காங்க... இவங்க அறைக்கு, அடிக்கடி நிறைய பெட்டிகள் வருது வே...
''ஹோட்டல் ஊழியர்கள் பலருக்கும் விலை உயர்ந்த மொபைல் போன் உள்ளிட்ட பல பரிசு பொருட்களை அந்த பெண் பரிசா குடுத்திருக்காங்க... இதனால, யாரும் பெட்டிகளை சோதனை போடுறதே இல்ல வே...
''அந்த பெண், தன்னை ஜெ., தோழியின் ஆள்னும், தான் இப்ப கோடநாடு எஸ்டேட் விவகாரங்களை கவனிக்கிறேன்னும் பலரிடமும் சொல்லுதாங்க... ஆனா, எஸ்டேட் வட்டாரத்துல கேட்டா, அப்படி யாரும் இல்லன்னு கையை விரிக்கிறாங்க...
''அந்த பெண்ணிடம் நிறைய பணமும் புழங்குது... இது சம்பந்தமா, வருமானவரி துறைக்கும் ரகசிய தகவல் போய், அவங்களும் விசாரணையை துவங்கியிருக்காவ... தமிழக உளவுத்துறை போலீசாரும் அந்த பெண் யார், அவங்க பின்னணி என்னன்னு விசாரிச்சுட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
மொபைல் போனை எடுத்து பார்த்த குப்பண்ணா, ''சுபா மேடம் மிஸ்டு கால் இருக்கே...'' என முணுமுணுத்தபடியே, கால் செய்ய, மற்றவர்கள் கிளம்பினர்.