சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒரே மாதத்தில் ரூ.198.57 கோடி கடன் உதவி
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒரே மாதத்தில் ரூ.198.57 கோடி கடன் உதவி
PUBLISHED ON : பிப் 29, 2024 12:00 AM
நாமக்கல், ஒரே மாதத்தில், 561 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 198.57 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என, மானியத்துடன் கடன் வழங்கும் முகாமில் தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் கலெக்டர் உமா அறிவுறுத்தல்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.,) மற்றும் தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில், மானியத்துடன் இணைந்த கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தமிழக அரசு, தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறை கடன் திட்ட முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளது.
அதையொட்டி, மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில், இம்மாதத்தில், 561 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 198.57 கோடி ரூபாய் கடன் மற்றும் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன. முகாமில், 115 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர் பங்கேற்றனர்.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில், தாட்கோ, வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மகளிர் திட்டம், சிட்கோ, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி உள்ளிட்ட வங்கிகள், தமிழக தொழில் முதலீட்டு கழகம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சகுந்தலா, வங்கி மேலாளர்கள், சிட்கோ அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
