எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக காய் நகர்த்தும் பெண் அமைச்சர்!
எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக காய் நகர்த்தும் பெண் அமைச்சர்!
PUBLISHED ON : ஜூன் 14, 2026 12:10 AM

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, “கட்சி நிர்வாகிகள் சொல்றதை செஞ்சு குடுங்கன்னு உத்தரவு போடுறாங்க...” என, விவாதத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
“எந்த கட்சி விவகாரம் பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“உள்ளாட்சி தேர்தலுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தினர் தயாராகிட்டு இருக்காங்க... சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலர்களுக்கு, த.வெ.க., மாவட்ட அலுவலகத்துல இருந்து, சிலர் போன் போட்டு பேசுறாங்க...
“அப்ப, 'எங்க கட்சியினர் ஊராட்சி சம்பந்தப்பட்ட பொதுவான பிரச்னைகளை உங்க கவனத்துக்கு கொண்டு வந்தா, அதை எல்லாம் உடனே செஞ்சு குடுங்க'ன்னு உத்தரவு போடுறாங்க...
“அதே நேரம், இப்படி பேசுறவங்க, தங்களது பெயர் விபரங்களை சொல்றது இல்ல... அதோட, தினமும் ஒவ்வொரு நம்பர்ல இருந்து ஒவ்வொருத்தர் பேசுறதால, ஊராட்சி செயலர்கள் குழப்பத்துல இருக்காங்க...” என்றார் அந்தோணிசாமி.
“சிறப்பு படை வேட்டையை நாலா பக்கமும் நடத்தணும்னு சொல்றாங்க பா...” என்றார் அன்வர்பாய்.
“யாருவே அது...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“கடந்த அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சிகள்ல, ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு சவுடு மண் கடத்திட்டு வருவாங்க... கட்டுமான பணிகள்ல அஸ்திவாரம் போட இந்த மண்ணை பயன்ப டுத்துவாங்க பா...
“திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி வழியா தான் இந்த லாரிகள் வரும்... தி.மு.க., ஆட்சியில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகி தலைமையில், ஒரு லாரிக்கு 2,500 ரூபாய், 'கட்டிங்' வசூல் செஞ்சாங்க பா...
“இப்படி, தினமும் 200 லாரிகளிடம் வசூல் நடந்துச்சு... இந்த பணத்தில், வி.ஏ.ஓ.,க்கள், ஆர்.ஐ.,க்கள், தாசில்தார்கள், போலீசார் மற்றும் கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு முறையா பங்கும் குடுத்துடுவாங்க... ஆட்சி மாறிட்ட சூழல்ல, சவுடு மண் கடத்தலை தடுக்க சிறப்பு போலீஸ் படை அமைச்சு, பெரியபாளையம் பகுதியில் சமீபத்துல, 15 லாரிகளை பறிமுதல் பண்ணிட்டாங்க பா...
“அதே நேரம், அந்த ஏரியாவை தவிர்த்து மற்ற பகுதிகள் வழியா மண் கடத்தல் தொடருது... இதனால, 'சிறப்பு படை கண்காணிப்பை நாலா பக்கமும் தீவிரப்படுத்தணும்'னு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்றாங்க பா...” என்றார் அன்வர்பாய்.
“பத்மநாதன் தள்ளி உட்காரும்...” என்ற குப்பண்ணா, “எம்.எல்.ஏ.,வுக்கு, 'செக்' வைக்கற அமைச்சர் கதையை கேளுங்கோ ஓய்...” என்றபடியே தொடர்ந்தார்...
“விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளை, நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டுவா... ஆனா, சில நாட்களா அங்க கொட்டறதுக்கு நகராட்சி அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கறா ஓய்...
“இதனால, அரசு மருத்துவமனை வளாக குப்பை கிடங்கில், மருத்துவ கழிவுகள் மலை போல தேங்கிடுத்து... சிவகாசியில் ஜெயிச்சு, தொழில் துறைக்கு அமைச்சராகியிருக்கற கீர்த்தனா, 'நகராட்சி குப்பை கிடங்கில் கழிவுகளை கொட்ட அனுமதிக்காதேள்'னு அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போட்டிருக்காங்க ஓய்...
“அதாவது, விருதுநகர் த.வெ.க., - எம்.எல்.ஏ., செல்வம், அரசு மருத்துவமனையில் ரெண்டு முறை ஆய்வு நடத்தியிருக்கார்...
''அமைச்சரான தன்னை மதிக்காம செல்வம் தன்னிச்சையா செயல்படறதால, அவருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமா, குப்பை கொட்ட அமைச்சர் முட்டுக்கட்டை போடறதா, த.வெ.க.,வினரே சொல்றா ஓய்...” என முடித்தார் குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.
