/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
12 ஆண்டுகளாக மாற்றப்படாத பெண் அதிகாரி!
/
12 ஆண்டுகளாக மாற்றப்படாத பெண் அதிகாரி!
PUBLISHED ON : டிச 24, 2024 12:00 AM

''வந்த ரெண்டே மாசத்துல, துாக்கி அடிச்சுட்டாங்க...'' என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சப் - டிவிஷன் போலீஸ் அதிகாரியா, போன செப்டம்பர்ல இளம் வயது அதிகாரி ஒருத்தர் வந்தார்... அந்த நேரத்துல, துவாக்குடி என்.ஐ.டி.,யில் தங்கி படிச்ச மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு மாணவி மாயமாகிட்டாங்க...
''இது சம்பந்தமா போலீஸ் அதிகாரி, என்.ஐ.டி., வளாகத்துக்கு அடிக்கடி போய் விசாரணை நடத்துற சாக்குல, மாணவியரிடம் ரொம்ப நேரம் பேசியிருக்காருங்க...
''அதிகாரிக்கு ஹிந்தி நல்லா தெரியும்கிறதால, வெளிமாநில மாணவியரிடமும் ரொம்ப நேரம் பேசியிருக்காரு... விசாரணை என்ற பெயர்ல, என்.ஐ.டி., கெஸ்ட் ஹவுசில் தங்குறது, என்.ஐ.டி., இயக்குனரின் நாற்காலியில் அமர்ந்து விசாரிக்கிறதுன்னு எல்லை மீறி போயிருக்காருங்க...
''ஒரு கட்டத்துல, மாணவியரை வெளியே அழைச்சிட்டு போனதாகவும் புகார்கள் வந்துச்சு... தவிர, சக போலீசாரை மதிக்காம இருந்ததுடன், பெண் போலீசாரிடம், 'டபுள் மீனிங்'ல பேசுறதுமா இருந்ததால, அதிகாரியை அரக்கோணத்துக்கு துாக்கி அடிச்சுட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பீச்ல கடை நடத்த, 5 லட்சம் ரூபாய் வசூலிக்காவ வே...'' என, அடுத்த தகவலை துவக்கினார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை மெரினா பீச்ல தான்... இங்க, மாநகராட்சியிடம் லைசென்ஸ் வாங்கி பலரும் கடைகள் நடத்துதாவ வே...
''ஆனா, இந்த லைசென்சை அவ்வளவு ஈசியா வாங்கிட முடியாது... ஆளுங்கட்சியினர் ஆதரவு வேணும்... அப்படியே லைசென்ஸ் வாங்கிட்டாலும், ஆளுங்கட்சியினர் சிலர் கடற்கரைக்கு உரிமை கொண்டாடி வந்துநிக்காவ வே...
''சமீபத்துல, ஒரு கடைக்கு லைசென்ஸ் குடுத்து, 5 லட்சம் ரூபாய் வரைக்கும் வசூல் பண்ணியிருக்காவ... 'இதுல, வட்டச் செயலர் துவங்கி, மாவட்டச் செயலர் வரைக்கும் பங்கு உண்டு'ன்னு வியாபாரிகள் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''கிட்டத்தட்ட ஒரு மாமாங்கமா இருக்காங்க ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மாமாங்கம்னா 12 வருஷம் தானங்க...'' என, சந்தேகம் கேட்டார் அந்தோணிசாமி.
''ஆமா... காஞ்சிபுரம் சுகாதார அதிகாரியா, 12 வருஷத்துக்கு முன்னாடி ஒரு பெண் வந்தாங்க... உள்ளூர் துவங்கி, சென்னை வரைக்கும் அரசியல் செல்வாக்கு இருக்கறதால, இவங்களை மாத்த துறையின் உயரதிகாரிகள் தயங்கறாங்க ஓய்...
''அரசு திட்டங்கள்ல ஏகப்பட்ட கமிஷன் வர்றதால, இந்த இடத்தை விட்டு நகர பெண் அதிகாரிக்கு துளியும் விருப்பம் இல்ல... 'ரிட்டயர் ஆகும் வரை இந்த இடத்துல இருந்து என்னை மாத்த முடியாது'ன்னு சக அதிகாரிகளிடம் சவாலே விட்டுண்டு இருக்காங்க ஓய்...
''இதனால, 'காஞ்சிபுரம்மாவட்ட சுகாதாரத் துறையில் இந்த பெண் அதிகாரிக்கு தந்த மாதிரி, வேற யாருக்கும் சலுகை தந்தது இல்ல'ன்னு ஊழியர்களே ஆச்சரியப் படறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
தெருவில் சென்ற சிறுமியை நிறுத்திய அண்ணாச்சி, ''அருள்மொழி... உங்க அப்பா வீட்டுல இருந்தா எனக்கு போன் பண்ண சொல்லு தாயி...'' என்றபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.