தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ நான்கு மணி நேரம் மட்டும் பணிபுரியும் பெண் அதிகாரி!

நான்கு மணி நேரம் மட்டும் பணிபுரியும் பெண் அதிகாரி!

நான்கு மணி நேரம் மட்டும் பணிபுரியும் பெண் அதிகாரி!


PUBLISHED ON : ஜன 24, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 24, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''நாயரே, கருப்பட்டி காபி போடச் சொல்லும்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்த பெரியசாமி அண்ணாச்சி, ''தொகுதி பக்கமே தலைக்காட்ட மாட்டேங்காரு வே...'' என, மேட்டரை ஆரம்பித்தார்.

''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.

''சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், முன்னாள் சபாநாயகர் தனபால்... இந்த மாவட்டத்தின் சங்ககிரி, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டசபை தொகுதிகள்ல அ.தி.மு.க., சார்புல அஞ்சு முறை ஜெயிச்சிருக்காரு வே...

''இவரை, 2016 சட்டசபை தேர்தல்ல, திருப்பூர் மாவட்டம், அவிநாசி - தனித்தொகுதிக்கு அனுப்பி ஜெயிக்க வச்ச ஜெயலலிதா, சபாநாயகராவும் ஆக்கினாங்க... 2021 தேர்தல்ல, இங்க ரெண்டாவது முறையா தனபால் ஜெயிச்சாரு வே...

''அப்புறமா, அவிநாசி பக்கமே தனபால் வர்றது இல்ல... சேலத்துல இருக்காரா அல்லது சென்னையில இருக்காரான்னும் தெரியல வே... 2024 லோக்சபா தேர்தல்ல, நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட தன் மகனுக்கு பிரசாரம் பண்றதுக்காக அவிநாசி பக்கம் வந்தவர், மகன் தோத்துப் போனதும், அதுக்கப்புறம் வர்றதையே குறைச்சுட்டாரு... 'அடுத்த வருஷம் சட்டசபை தேர்தல் வர்றதால, எந்த முகத்தை வச்சுக்கிட்டு ஓட்டு கேட்கிறது'ன்னு தொகுதி அ.தி.மு.க.,வினர் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''பொங்கல் போனஸ் தராம விட்டுட்டாங்க...'' என, அடுத்த மேட்டரைத் துவங்கினார் அந்தோணிசாமி.

''யாருக்கு ஓய்...' எனக் கேட்டார் குப்பண்ணா.

''கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், காரமடை நகர தி.மு.க., மற்றும் கிளைக் கழக நிர்வாகிகளுக்கு, தலைமையில இருந்து பொங்கல் போனஸா, குறிப்பிட்ட தொகை குடுத்திருக்காங்க... ஆனா, வார்டு வாரியா, பாக முகவர்களுக்கு எந்த பணமும் தரலைங்க...

''இதனால, 'களத்துல இறங்கி, வார்டு வாரியா ஓட்டு வாங்கிக் குடுக்கிறது நாங்க... எங்களுக்கு எதுவும் தராம விட்டுட்டாங்களே... ஒருவேளை தலைமை குடுத்து, இடையில இருக்கிறவங்க பதுக்கிட்டாங்களா'ன்னு முகவர்கள் புலம்பிட்டு இருக்காங்க... இவங்க அதிருப்தி, சட்டசபை தேர்தல் பணிகள்ல எதிரொலிக்கும்னு சொல்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''எடுத்தெறிஞ்சு பேசுறாங்க ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''திருவள்ளூர் மாவட்டத்தின், பிரபல முருகன் கோவில் ஊரின் ஒன்றிய பெண் அதிகாரி, காலை 11:30 மணிக்கு தான் ஆபீஸ் வராங்க... சாயந்தரம், 3:30 மணிக்கே வீட்டுக்கு கிளம்பிடறாங்க... நாலு மணி நேரம் தான் ஆபீஸ்ல இருக்காங்க ஓய்...

''இதுக்கு, 'நான் சென்னையில் இருந்து வர்றதால, லேட்டா வந்துட்டு, சீக்கிரமா போயிடுவேன்'னு சால்ஜாப்பு சொல்றாங்க... கையெழுத்து கேட்டு பைல்களோட ஊழியர்கள் வந்தா, ஏதாவது குத்தம், குறை சொல்லி திருப்பி அனுப்பிடறாங்க ஓய்...

''ஒப்பந்ததாரர்கள் வேலை செய்த பில்களுக்கும் கையெழுத்து போடறது இல்ல... கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றி செய்த பணிகளுக்குரிய பில் களையும், 'பாஸ்' பண்ண மாட்டேங்கறாங்க ஓய்...

''கேட்டா, 'யார்கிட்ட வேணும்னாலும் கம்ப்ளெய்ன் பண்ணிக் கோங்க... நான் கையெழுத்து போட மாட்டேன்'னு அடம் பிடிக்கறாங்க... அதேநேரம், அவங்க சம்பந்தப்பட்ட செலவுகள்னா உடனே கையெழுத்து போட்டு, 'ஓகே' பண்ணிடறாங்க ஓய்...

''அங்க இருக்கற ஒரு ஆண் அதிகாரிக்கும், இவங்களுக்கும் ஏழாம் பொருத்தம் வேற... அந்த அதிகாரி பெயரைக் கேட்டாலே, பெண் அதிகாரி டென்ஷன் ஆகி, ஊழியர் களை சகட்டுமேனிக்கு வசைபாடறாங்க ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

பேச்சு முடியவே, பெரியவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us