PUBLISHED ON : மார் 27, 2026 02:40 AM

ப ட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, ''கேட்ட இடங்களை குடுத்துட்டாருங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''எந்த கூட்டணியில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''இது அரசியல் மேட்டர் இல்ல... தமிழக சிறைத்துறை, ஏ.டி.ஜி.பி.,யா இருந்த மகேஸ்வர் தயாள், போன வருஷம் சிறை காவலர்கள், உதவி ஜெயிலர்கள்னு நிறைய பேரை, பல நுாறு கி.மீ., தள்ளியிருக்கிற சிறைகளுக்கு துாக்கியடிச்சிட்டாருங்க...
''பலரும் குடும்பத்தை பிரிஞ்சு சிரமப்பட்டுட்டு இருந்தாங்க... இந்த சூழல்ல, சமீபத்தில் மகேஸ்வர் தயாளை மாத்திட்டு, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.,யா சங்கர் நியமிக்கப்பட்டாருங்க...
''இவர், செவ்வாய் கிழமைதோறும் சிறை காவலர்களிடம் குறைகளை கேட்கிறாரு... அப்ப, பலரும் தங்களது இடமாறுதல் குறித்து புகார் தெரிவிக்க, அவங்க கேட்ட இடங்களுக்கு, உடனுக்குடன் மாறுதல் குடுத்து அசத்திட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தாளாளருக்கு தோல்விதான் கிடைச்சிருக்குது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''சென்னை, மேடவாக்கத்துல, அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் தனியார் கல்லுாரி இருக்கு... இங்க, ஏழை, எளிய மாணவர்கள் தான் நிறைய பே ர் படிக்கிறாங்க பா...
''ஆனாலும், இங்க கல்வி கட்டணம் அதிகமா வசூல் பண்றதோட, நிறைய முறைகேடுகளும் நடக்குது... இங்க பணிபுரியும் தமிழ் பேராசிரியர் ஒருத்தர், 'ஏழை மாணவர்களை சுரண்டாதீங்க'ன்னு கல்லுாரி தாளாளருக்கு எதிரா குரல் குடுத்தாரு பா...
''இதனால, அவர் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தி, அவரை பணி நீக்கம் செய்ய, தாளாளர் நடவடிக்கை எடுத்தாரு... இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்ல பேராசிரியர் வழக்கு போட்டாரு பா...
''விசாரிச்ச ஐகோர்ட், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிச்சது... இதை எதிர்த்து, தாளாளர் ரெண்டு நீதிபதிகள் அமர்வுல மேல்முறையீடு செய்ய, அங்கயும் அவரது மனு தள்ளுபடியாகிடுச்சு பா...'' என்றார், அன்வர்பாய்.
''வாரும் ஹாஜா கனி, தாவூத்மியான்கான் தொல்லை இனி இருக்காது ஓய்...'' என்ற குப்பண்ணாவே, ''போலீஸ் அலட்சியத்தால அநியாயமா ஒரு உயிர் போயிடுத்து ஓய்...'' என்றார்.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னை, தாம்பரம் போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டில், சிங்கபெருமாள் கோவில் போலீஸ் ஸ்டேஷன் வருது... இந்த ஏரியாவுல, சில நாட்களுக்கு முன்னாடி, சந்திரன் என்ற வாலிபரை, நாலு பேர் கொண்ட கும்பல், தலையில கல்லை போட்டு கொலை பண்ணிடுத்து ஓய்...
''அதுக்கு சில மணி நேரத்துக்கு முன்னாடி, அவரது வீட்டுக்கு அந்த கும்பல் போயிருக்கு... அங்க இருந்த சந்திரன் மனைவியிடம் கத்தியை காட்டி, 'உன் கணவரை கொல்ல போறோம்'னு மிரட்டியிருக்கா ஓய்...
''இதை தட்டிக்கேட்ட அந்த வீட்டின் உரிமையாளர் கையில, கத்தியால கிழிச்சிட்டும் போயிட்டா... சந்திரன் மனைவி, உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் செஞ்சிருக்கா ஓய்...
''சிங்கபெருமாள் கோவில் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்த ரோந்து ஜீப்ல, ராஜேந்திரன் என்ற ஒரு போலீஸ்காரர் மட்டும், சந்திரன் வீட்டுக்கு போய் பெயரளவுக்கு விசாரிச்சுண்டு வந்துட்டார்... இதை பத்தி, ஸ்டேஷன் உயர் அதிகாரிகளிடமும் எந்த தகவலும் தெரிவிக்கல ஓய்...
''அந்த நாலு பேரை தேடி பிடிக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கல... இதுக்குள்ள, சந்திரனை தேடி கண்டுபிடிச்ச அந்த கும்பல், அவரை கொலையும் பண்ணிடுத்து... 'விசாரிக்க வந்த போலீஸ்காரர், துரிதமா நடவடிக்கை எடுத்திருந்தா, இந்த கொலையை தடுத்திருக்கலாம்'னு அந்த ஏரியா மக்கள் குற்றம்சாட்டறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.
