/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
வசூல் மன்னனாக வலம் வரும் சபல அதிகாரி!
/
வசூல் மன்னனாக வலம் வரும் சபல அதிகாரி!
PUBLISHED ON : மார் 30, 2025 12:00 AM

மெதுவடையை சட்னியில் புரட்டியபடியே, ''புரோக்கரை பார்த்து பயப்படறா ஓய்...'' என, பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி பகுதியில மண் கடத்தல்,லாட்டரி, கஞ்சா விற்பனை, சூதாட்டம், அனுமதியில்லாத பார்னு ஏகப்பட்ட சட்டவிரோத செயல்கள் நடக்கறது... இதெல்லாம் எங்கெங்க நடக்கும்னு அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஒரு புரோக்கருக்கு தான் தெரியும் ஓய்...
''இதனால, அந்த புரோக்கர் மூலமாகவே, புன்செய் புளியம்பட்டி போலீசார் மாமூல் வாங்கிண்டு இருந்தா... சட்ட விரோத கும்பலிடம் வசூல் பண்ணி, தனக்குரிய பங்கை எடுத்துட்டு குடுத்த புரோக்கர், இப்ப தனியாகவே மாமூல் வசூலிக்க துவங்கிட்டார் ஓய்...
''போலீசார் தட்டிக் கேட்டதுக்கு, 'உங்களது மாமூல் வண்டவாளங்களை எல்லாம் சோஷியல் மீடியாவுல போட்டு நாற அடிச்சிடுவேன்'னு மிரட்டறதால, போலீசார் கதிகலங்கிப் போயிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சிவா, தள்ளி உட்காருங்க...'' என்றபடியே வந்த அந்தோணிசாமி, ''பெண் அதிகாரியை, 'டார்ச்சர்' பண்றாங்க பா...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார்.
''எந்த துறையில வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சென்னை ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர், சேப்பாக்கம் ஆகிய மூணு சட்டசபை தொகுதிகள்ல இருக்கிற 18 வார்டுகளும், மாநகராட்சியின் 9வது மண்டலத்துல வருதுங்க...
''இந்த மண்டலக் கூட்டம் சமீபத்துல நடந்துச்சு... இதுல, தி.மு.க., மற்றும் மா.கம்யூ., பெண் கவுன்சிலர்கள் இருவர், மாநகராட்சி பெண் அதிகாரி ஒருத்தர் மன்னிப்பு கேட்கணும்னு போர்க்கொடி துாக்குனாங்க...
''அதாவது, அந்த பெண் அதிகாரி, தேனாம் பேட்டை திருவள்ளுவர் சாலை, மயிலாப்பூர் லஸ் சாலையில் நடைபாதையை ஆக்கிரமிச்சு இருந்த கடைகளை அகற்றியிருக்காங்க... இதனால, அந்த கடைகள்ல மாமூல் வாங்கிட்டு இருந்த ரெண்டு பெண் கவுன்சிலர்களும், அதிகாரியை ஒருமையில திட்டியிருக்காங்க...
''பெண் அதிகாரி, மண்டலத்துக்கு பொறுப்பு வகிக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியிடம் அழுது புலம்ப, கவுன்சிலர்களின் செயல்பாடுகளை, ஆட்சி மேலிடத்துக்கு அதிகாரி புகாரா அனுப்பிட்டாரு... அந்த கடுப்புலதான், பெண் அதிகாரியை ரெண்டு கவுன்சிலர்களும், 'டார்ச்சர்' பண்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''சரஸ்வதி மேடம், கமலா ஆரஞ்சு வாங்கிட்டு போறாங்க பார்த்தீயளா...'' என, தெருவை பார்த்து முணுமுணுத்த பெரியசாமி அண்ணாச்சியே, அடுத்த விஷயத்தை தொடர்ந்தார்...
''ஆண்டாள் கோவில் ஊரின், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துல ஒரு அதிகாரி இருக்காரு... பெண் விஷயத்துல ரொம்ப, 'வீக்'கானவரு வே...
''இதனால, இவரிடம் பணியாற்றவே பெண்கள் பயப்படுதாவ... அதிகாரி கட்டுப்பாட்டில் வர்ற பக்கத்து ஊரின் பிரேக் இன்ஸ்பெக்டர், சமீபத்துல நீண்ட விடுப்புல போனாரு வே...
''அந்த இடத்துல அமலாக்கப் பிரிவு பிரேக் இன்ஸ்பெக்டரை தான் நியமிக்கணும்... அவங்க பெண் அதிகாரி என்பதால, அந்த இடத்துக்கு வர மறுத்துட்டாங்க... இதனால, வேற அதிகாரியை அங்க நியமிச்சாங்க வே...
''இதுபோக, வசூல்லயும் அதிகாரி மன்னனா இருக்காரு... எந்த சின்ன விஷயமா இருந்தாலும், பணம் குடுத்தா தான் கையெழுத்தே போடுதாரு... இதனால, லைசென்ஸ், ஆர்.சி., புதுப்பிக்கிற பணிகளுக்கு மக்கள் அலையா அலையுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''சந்திரசேகர் வரார்... சூடா வடை குடும் நாயரே...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.