PUBLISHED ON : பிப் 08, 2026 01:54 AM

'எங்கள் தலைவி, டில்லியை ஒரு கலக்கு கலக்கி விட்டார்...' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பற்றி பெருமை பேசுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.
மேற்கு வங்கத்தில் நடந்த, எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு எதிரான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் கமிஷன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேற்கு வங்கத்தில், 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதில், தேர்தல் கமிஷன், உள்நோக்கத்துடன், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக, வாதங்களை எடுத்து வைத்தார்.
முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவர், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதங்களை முன்வைப்பது இதுவே முதன் முறை என்பதால், மம்தாவின் இந்த நடவடிக்கை, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பா.ஜ.,வினரோ, மம்தாவின் இந்த நடவடிக்கைகளை கடுமையாக விமர்சிக்கின்றனர். 'வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர், மேற்கு வங்கத்திற்குள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளனர்; அவர்களுக்கு மம்தா அடைக்கலம் கொடுத்துள்ளார். இதுபோன்ற ஊடுருவல்காரர்கள் தான், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
'மம்தாவோ, ஓட்டு வங்கி அரசியலுக்காக, ஊடுருவல்காரர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார். தேசிய அளவில், தனக்கு விளம்பரம் கிடைக்கும் என்பதற்காக உச்ச நீதிமன்றத்துக்கு சென்று வந்துள்ளார்...' என கொந்தளிக்கின்றனர், பா.ஜ.,வினர்.

